கூகுள் டாக்ஸ் இணைத்த 450 புதிய எழுத்துருக்கள்

இன்டர்நெட்டில் ஆக்டோபஸ் போல அனைத்து வசதிகளையும் ஒரு குடையின் கீழ் வழங்கி வரும் கூகுள், தன் கூகுள் டாக்ஸ் புரோகிராமில் புதியதாக 450 எழுத்துரு வகைகளையும் 60 புதிய டெம்ப்ளேட்டுகளையும் தன் வேர்ட் ப்ராசசிங் புரோகிராமில் சேர்த்துள்ளதாக அறிவித் துள்ளது.

தங்கள் வாடிக்கையாளர்கள், அவர் களின் சிந்தனையை, கற்பனையை இன்னும் சிறப்பாக வடிவமைத்துத் தர இந்த புதிய எழுத்துருக்கள் கை கொடுக்கும் என கூகுள் சாப்ட்வேர் பொறியாளர் இஸபெல்லா அறிவித்துள்ளார்.

இந்த எழுத்துருக்களில் பல இணைய வடிவமைப்பாளர்களுக்கென தனிக் கவனத்துடன் உருவாக்கப்பட்டவை. அதே போல புதிய டெம்ப்ளேட்டுகள் அலுவலகம், வீடு, பள்ளிக்கூடம், வேடிக்கையான ஜோக்ஸ், விடுமுறை என இன்னும் பல வகை களுக்கென உருவாக்கப்பட்டவை.

எடுத்துக்காட்டாக, வேலைக்கு விண்ணப்பிக்க தன் விவர தகவல் அறிக்கை (Resume, CV) செய்தித் தாள் தயாரிப்பு, உணவு தயாரிக்கும் முறை விளக்கம், போட்டோக்களை பகிர்ந்து கொள்ளல், சட்ட ரீதியான அறிக்கைகள் தயாரிப்பு எனப் பலவகைப் பணிகளுக்கென வடிவமைக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன.

2007 ஆம் ஆண்டில் கூகுள் டாக்ஸ் பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல முறை இது மேம்படுத்தப் பட்டு வந்துள்ளது.

200க்கும் மேற்பட்ட அப்டேட் பைல்கள் இணைக்கப்பட்டன. இந்த மேம்படுத்தல்களே பல பயனாளர்களை மைக்ரோசாப்ட் வேர்ட் புரோகிராமிலிருந்து, கூகுள் டாக்ஸ் புரோகிராமிற்கு மாறச் செய்தன.

எழுத்துரு மற்றும் டெம்ப்ளேட் மட்டுமின்றி, டாகுமெண்ட்களில் படங்களை இணைப்பது, ஸ்ப்ரெட்ஷீட்களில் சார்ட்களை அமைப்பது, கிரிட்லைன்களை உருவாக்குவது போன்ற பணிகள் குறித்தும் அப்டேட் பைல்கள் வழங்கப்பட்டது குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


கூகுள் தரும் தகவல் வகைப்படுத்தல்

இணையத்தில் தகவல்களைத் தேடித் தருவதில், கூகுள் நிறுவனத்தின் தேடல் சாதனத்தை மிஞ்சுவதில் மற்ற தளங்கள் போட்டியிட முடிவதில்லை. தொடர்ந்து தன் தேடல் சாதனத்தின் தொழில் நுட்பத்தினை மேம்படுத்திக் கொண்டுள்ளது கூகுள்.

அண்மையில் “Knowledge Graph” என்ற பெயரில் புதியதொரு மேம்பாட்டினைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஒரு சொல் தரும் பலவகையான முடிவுகளை வகைப்படுத்த முடியும்.

எடுத்துக்காட்டாக, ‘Taj Mahal’ என அமைத்துத் தேடினால், இது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலாக இருக்கலாம்; அல்லது இசைக் கலைஞனாக இருக்கலாம்; ஒரு கேசினோ வினைக் குறிக்கலாம்; இந்திய உணவு வழங்கும் ஒரு விடுதியாக இருக்கலாம் அல்லது தேயிலையாக இருக்கலாம். இவை அனைத்துமே கலந்து தேடலின் முடிவுகளாகக் கிடைக்கும். எனவே தேடுபவருக்கு, தேடல் முடிவுகளின் முதல் பக்க முடிவுகளே அபத்தமாகத் தெரியும்.

இந்தப் பிரச்னைக்கு முடிவு காணும் வகையில் “Knowledge Graph” என்ற தொழில் நுட்பத்தினை கூகுள் கொண்டு வந்துள்ளது. இதன்படி, ஓர் இணைய தளத்தினை எந்த வகையில் கொண்டு செல்லலாம் என 350 கோடி வகைகளை உருவாக்கியுள்ளது.

இதில் ஒன்றில் ஓர் இணைய தளம் வகைப்படுத்தப்படும். தேடுபவர்கள், தங்களின் தேடலை இடுகையில், கூகுள் அதன் தேடல் முடிவுகளுடன், சில பட்டன்களைக் காட்டும். இந்த பட்டன்களை அழுத்தி, குறிப்பிட்ட வகை தளங்களை மட்டும் காட்டும்படி அமைத்திடலாம்.

இன்னும் போகப்போக, தேடுபவரின் விருப்பம் இல்லாமலேயே, தளங்கள் வகைப்படுத்தப்பட்டு அமைக்கப்படும். அதே போல, குறிப்பிட்ட பயனாளர் இதற்கு முன்னர் தேடிய தேடல்களின் அடிப்படையிலும், ஓர் இணையதளம் வகைப்படுத்தப்படும்.

எடுத்துக்காட்டாக, ஒரு பயனாளர், தாஜ் மஹால் என்ற சொல்லின் மூலம் ஒரு இசைக் கலைஞரை முன்பு தேடி இருந்தால், இந்த வகையில் உள்ள தளங்கள் மட்டும் முதலில் அவருக்கான முடிவுகளாகப் பட்டியலிடப்படும். அவர் உலக அதிசயங்களைத் தேடி இருந்தால், நம் ஊர் தாஜ்மஹால் குறித்த தளங்கள் முதலில் காட்டப்படும்.

சிறப்பு அம்சங்கள் பட்டியல்: கூகுள் இன்னொரு தொழில் நுட்ப வசதியும் தர உள்ளது. இதனை ‘summary box’ என ஆங்கிலத்தில் அழைக்கலாம். கம்ப்யூட்டர் பயனாளர் ஒருவர் தேடலை மேற்கொள்கையில், ஒருவரைப்பற்றி அறிய முற்படுகையில், அவர் குறித்த சில சிறப்பு செய்திகள், வலது பக்கம் ஒரு கட்டத்தில் பட்டியலிடப்படும்.

பல வேளைகளில், இந்த கட்டத்தில் காட்டப்படும் தகவல்களே தேடுபவர்களுக்கான எதிர்பார்ப்பினை நிறைவேற்றுபவையாக இருக்கும். சில வேளைகளில் இந்த பட்டியல் சில தளங்களுக்கு எதிர்மறை யாகவும் இருக் கும் எனவும், அதனால், தங்கள் தளங்களுக்கு வருகை புரிபவர்களின் எண்ணிக்கை குறையும் என்றும் சில இணைய தள நிர்வாகிகள் குறை சொல்லி உள்ளனர். கூகுள் என்ன பதில் அளிக்கப்போகிறது என காத்திருந்து பார்க்கலாம்.

பலர் இந்த செய்திகளைப் பார்த்தவுடன், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் தேடல் சாதனத்தின் சில கூறுகளைத் தன் தேடல் தளத்திலும் கொண்டு வர கூகுள் எடுக்கும் முயற்சிகளே இவை எனக் கூறி உள்ளனர்.

இந்த புதிய வசதிகள் குறித்து அறிய http:// googleblog.blogspot.co.uk/2012/05/introducingknowledgegraphthingsnot.html என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.


VLC Media Player - நூறு கோடி டவுண்லோட்

ஆடியோ, குறிப்பாக வீடியோ பைல்களை, அவற்றின் பல பார்மட்களில் இயக்கக் கூடிய வி.எல்.சி. பிளேயர், 2005ல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், நூறு கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இவற்றில் 89% விண்டோஸ் இயக்கத்திற்கானவை; 10% மேக் சிஸ்டத்திற்கானவை. லினக்ஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கானவை 1% மட்டுமே என இதனை வழங்கும் வீடியோ லேன் நிறுவனம் அறிவித்துள்ளது.

சரியாகப் பார்த்தால், டவுண்லோட் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படும் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருக்கும்.

இதனை வழங்கும் நிறுவனத்தளம் இல்லாமல், டவுண்லோட் டாட் காம் போன்ற தளங்களும் வி.எல்.சி. பிளேயர் புரோகிராமினை வழங்கு கின்றன. பல சிடிக்களில் இது பதிந்து தரப்பட்டு வருகிறது.

ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் சாதனங்களுக் கான வி.எல்.சி. பிளேயர் உருவாக்கப்பட்டு வருவதாக ஒரு தகவல் கூறுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு http://www.videolan. org/vlc/stats/downloads.html என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்


பயர்பாக்ஸ் பதிப்பு 13ல் ரீசெட் பட்டன்

புதிய கம்ப்யூட்டர் ஒன்றில் பயர்பாக்ஸ் பிரவுசரை இன்ஸ்டால் செய்து இயக்குகிறீர்கள். ஓரிரு விநாடிகளில் பயர்பாக்ஸ் இயக்கத் திற்கு வந்து உங்களை மகிழ்ச்சி யில் ஆழ்த்துகிறது. இணைய தளங்கள் சட் சட் என வந்து விழுகின்றன.

எல்லாமே ஆச்சரியப்படத்தக்க வேகத்தில் நடைபெறுகின்றன. ஆனால் சில நாட்களில் இந்த வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது. ஏன்? நீங்கள் தான் காரணம்.

உங்களுக்குப் பிடித்தது என எவற்றையேனும் சேர்த்திருப்பீர்கள். சில எக்ஸ்டன்ஷனை அப்போதைய தேவைக்கு இன்ஸ்டால் செய்த பின்னர், அப்படியே மறந்திருப்பீர்கள். இவை எல்லாம், உங்கள் மெமரியில் இடம் பிடித்துக் கொண்டு பயர்பாக்ஸ் இயக்கத்தை கயறு போட்டு பின் இழுக்கின்றன.

ஆனால், எது வேகத்திற்கு இடையூறாக உள்ளது என உங்களால் கண்டறிந்து நீக்க இயலவில்லை. அதற்கான நேரமும் உங்களிடம் இல்லை. என்ன தீர்வு? கம்ப்யூட்டரை ரீ செட் செய்வது போல, பயர்பாக்ஸ் பிரவுசரையும், முதலில் இன்ஸ்டால் செய்த போது இருந்தது போல அமைத்தால், ஒரு ரீசெட் பட்டன் இதற்கென இருந்தால், நன்றாக இருக்கும் அல்லவா!

மொஸில்லா அதைத்தான் தன் பயர்பாக்ஸ் பதிப்பு 13ல் செய்துள்ளது. (பார்க்க:http://blog.mozilla.org/verdi/166/thenewresetfirefoxfeatureislikemagic/) புதிய ரீசெட் பட்டன் ஒன்றைத் தந்துள்ளது. இதனை about:support என்ற பிரிவில் கிளிக் செய்து பெறலாம்.

Help –> Troubleshooting Information என்று செல்ல வேண்டியதிருக்கும். இங்கு அமைந்துள்ள பட்டனில் கிளிக் செய்தவுடன், மாறா நிலையில் உள்ள செட்டிங்ஸ் உடன் புதிய தோற்றம் மற்றும் இயக்கம் கிடைக்கும். இதில் உங்கள் பிரவுசிங் ஹிஸ்டரி, பாஸ்வேர்ட், குக்கீஸ், புக்மார்க் என அனைத்தும் காப்பி செய்யப்பட்டு கிடைக்கும். எனவே நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

இதில் ஒரு சின்ன பிரச்னை என்னவென்றால், இந்த பட்டன் எங்கு உள்ளது என்று தேடி அலைய வேண்டியதுள்ளது. மெனுவுக்குள்ளாக சென்று தேடிக் கண்டுபிடித்து கிளிக் செய்திட வேண்டியுள்ளது. இதற்குப் பதிலாக மேலாகக் கொடுத் திருக்கலாம்.

ஆனால், அவ்வளவு எளிமையாக இருந்தால், கவனக் குறைவாக நம் மனிதர்கள், அதில் கிளிக் செய்து, புதிய இடைமுகத்தினைப் பெறுவதில் எரிச்சல் அடைவார்களே! எனவே தான் மொஸில்லா, இன்னொரு வகையில் சிந்தித்து வருகிறது.

பயர்பாக்ஸ் மூன்று முறை கிராஷ் ஆனால், இந்த பட்டனைக் காட்டி, ரீசெட் செய்திடவா என்று ஒரு ஆப்ஷனைக் காட்ட முடிவு செய்து வேலைகளை மேற்கொண்டு வருகிறது.


மொபைல் போன் வாடிக்கையாளர்கள் 67 கோடி

சென்ற ஏப்ரல் மாதம், ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்திலான, மொபைல்போன் சேவையை பெற்ற வாடிக்கையாளர் எண்ணிக்கை, 65 லட்சம் அதிகரித்துள்ளது.

ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்இதன் மூலம், நாட்டில் இச்சேவையை பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 67 கோடியாக உயர்ந்துள்ளது என, இந்திய மொபைல்போன் சேவை நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டில், மொபைல் சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம். என இருவகை தொழில்நுட்பத்தில், மொபைல் சேவையை வழங்கி வருகின்றன. இதில், ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர் எண்ணிக்கையே சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில், மொபைல் போன் சேவையில் முதலிடத்தில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம், சென்ற ஏப்ரல் மாதத்தில், மிகவும் அதிகபட்சமாக, 20 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த மொபைல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 18.33 கோடியாக உயர்ந்துள்ளது.

மொபைல்போன் சேவையில், இரண்டாவது இடத்தில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், சென்ற ஏப்ரல் மாதத்தில், அதன் புதிய வாடிக்கையாளர்கள் குறித்த புள்ளி விவரத்தை வெளியிடவில்லை.

வோடபோன் இந்தியா மதிப்பீட்டு மாதத்தில், மொபைல் போன் சேவையில், மூன்றாவது இடத்தில் உள்ள, வோடபோன் இந்தியா நிறுவனம், 8 லட்சத்து 20 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 15 கோடியே 13 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதே மாதத்தில், மொபைல் சேவையில், நான்காவது இடம் வகிக்கும், ஐடியா செல்லுலார் நிறுவனம், 14 லட்சம் 90 ஆயிரம் வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டது.

இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 11 கோடியே 42 லட்சமாக உயர்ந்துள்ளது.டெலினார் இந்தியா நிறுவனத்தின், வாடிக்கையாளர் எண்ணிக்கை, 11 லட்சத்து 20 ஆயிரம் உயர்ந்து, 4 கோடியே 36 லட்சமாக அதிகரித்துள்ளது


பொழுது போக்கு மொபைல் போனாக பிளை இ 370

பிளை மொபைல்ஸ் நிறுவனம், அண்மையில் தன் புதிய பிளை இ 370 மொபைல் போனை விற்பனைக் குக் கொண்டு வந்துள்ளது. இந்த போனில் அனைத்து பொழுது போக்கு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 46 அப்ளிகேஷன் புரோகிராம்களும், விளை யாட்டுக்களும் பதியப்பட்டு தரப்படுகின்றன. இதன் ARM 9 ப்ராசசர், இணையத்தேடலை அதிவேகத்துடன் மேற்கொள்ள உதவுவதுடன், மல்ட்டி மீடியா இயக்கத்தினைச் சிறப்பாக இயக்குகிறது.

இதனுடன் கிடைக்கும் ‘Fly Store’ வசதி, 150க்கும் மேலான அப்ளிகேஷன் புரோகிராம்களை தரவிறக்கம் செய்திட வழி தருகிறது.

இதில் தரப்படும் ஸ்கெட்ச் நோட் மூலம் எந்த நிலையிலும், வேளையிலும் சிறிய குறிப்புகளை டெக்ஸ்ட்டாகக் கை கொள்ள உதவுகிறது.

உலகக் கடி காரம், இ-புக் ரீடர், சீதோஷ்ண நிலை அறி விப்பு ஆகியவை கூடுதலான சிறப்பு வசதி களாகும். இதனுடன் 5 மெகா பிக்ஸெல் கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் அதிகபட்ச விலை ரூ. 5,099 எனக் குறிக்கப்பட்டுள்ளது.


இணையத்தில் விற்பனை

தகவல் தொழில் நுட்ப சேவையில் இயங்கும் நிறுவனங்கள், இணைய வெளியில் தங்களுக்கென ஒரு விற்பனை மையத்தை அமைப்பது இப்போது வழக்கமாகி வருகிறது.

முதலில் நோக்கியா, அடுத்து சாம்சங், இப்போது ஏர்டெல் என மொபைல் நிறுவனங்கள் தங்கள் ஆன்லைன் ஸ்டோர்களை அமைத்துள்ளன.

ஏர்டெல் அமைத்துள்ள விற்பனைத் தளத்தில், மொபைல் போன்கள், டிஜிட்டல் டிவி, பிராட்பேண்ட் இணைப்பு வசதிகள் எனப் பலவகை சேவைகளும் பொருட்களும் விற்பனைக்கு உள்ளன.

நோக்கியா மற்றும் சாம்சங் நிறுவனங்களின் இணைய தளங்களில் அந்நிறுவனங்களின்தயாரிப்புகள் மட்டுமே கிடைக்கும். ஆனால் ஏர்டெல் மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளைத் தன் சேவை வசதிகளுடன் விற்பனை செய்கிறது. பிற நிறுவனங்களின் மொபைல் போன்களைத் தன்னுடைய சேவையுடன் இணைத்து விற்பனை செய்கிறது.

மற்ற இணைய தள கடைகளைப் போலல்லாமல், ஏர்டெல் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ள விலை, மற்ற தளங்களில் உள்ள விலைப்பட்டியலுடன் போட்டியிடும் வகையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, ஏர்டெல் நிறுவனத் தளத்தில், எல்.ஜி. ஆப்டிமஸ் மொபைல் போன் ரூ.16,403க்குக் கிடைக்கிறது.

ஆனால் பிளிப் கே ஆர்ட் தளத்தில், இதன் விலை ரூ.500 அதிகமாக உள்ளது. கூடுதலாக, ஒரு மாதத்திற்கு இலவச 3ஜி இணைப்பு கிடைக்கிறது. மொபைல் போன்களுக்கு 33% டிஸ்கவுண்ட், ஏர்டெல் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு ரூ. 500 தள்ளுபடி, டிஜிட்டல் டிவி இணைப்பு களுக்கு ரூ.250 ரொக்க தள்ளுபடி எனப் பலவகை சலுகைகளும் வழங்கப்படுகின்றன.


ஜுலையில் இன்டர்நெட் பாதிப்பு

வரும் ஜூலை மாதம், உலக அளவில், குறைந்தது 3 லட்சம் பேர் இன்டர் நெட் இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார் கள் என அமெரிக்க நாட்டின் புலனாய்வுத் துறை (FBI) எச்சரித்துள்ளது.

தாங்கள் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறோமா என்பதனை அறிந்து கொள்ள, புலனாய்வுத் துறை dcwg.org என்ற முகவரியில் ஓர் இணைய தளத்தினை அமைத்துள்ளது. இங்கு தங்கள் கம்ப்யூட்டர் வழியாகச் சென்று, தங்கள் கம்ப்யூட்டர், இத்தகைய மால்வேர் வைரஸ் புரோகிராமினால் பாதிக்கப்பட்டுள்ளதா எனக் கண்டறிந்து, அதற்கான தீர்வையும் பெறலாம்.

டி.என்.எஸ். சேஞ்சர் (DNS Changer) மால்வேர் என அழைக்கப்படும் இந்த வைரஸைப் பரப்பியவர்கள், பல லட்சம் டாலர் பணத்தை இதன் மூலம் ஏமாற்றி சம்பாதித்துள்ளனர்.

இந்த வைரஸ் பாதித்த கம்ப்யூட்டர் மூலம் இணைய இணைப்பில் செல்கையில், இந்த வைரஸ், நாம் காண விரும்பும் தளத்திற்குப் பதிலாக வேறு ஒரு தளத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும்.

அங்கு நம் ஆசையையும், ஆர்வத்தினையும் தூண்டும் வகையில் வாசகங்கள் தரப்பட்டு, மேலும் சில லிங்க்குகள் தரப்படும். இதில் கிளிக் செய்து மாற்றிக் கொள்பவர்களின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் திருடப் பட்டு, அதன் மூலம் பண மோசடியும் மேற்கொள்ளப்படும். மேற்கொள்ளப்பட்ட மோசடியின் மதிப்பு ஒரு கோடியே 40 லட்சம் டாலர் என எப்.பி.ஐ. மதிப் பிட்டுள்ளது.

இந்த மால்வேர் பாதிப்பினை நீக்கும் கிளீன் சேவையை எப்.பி.ஐ. இதற்கென அமைத்த இணைய தளம் தருகிறது.

அப்படியும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் 3 லட்சம் பேர் இதனால், பாதிப்படைந்தவர்களாகவே இருப்பார்கள்.

ஜூலை மாதம் இவர்களால் தாங்கள் விரும்பும் இணைய தளங்களுக்குச் செல்ல முடியாது என எப்.பி.ஐ. செய்தியாளர் ஜென்னி தெரிவித்துள்ளார்.


விண்டோஸ் 8 ஜூனில் வெளியீட்டுக்கு முந்தைய பதிப்பு

ஆப்பரேட்டிங் சிஸ்டம், புதிய பிரவுசர் பதிப்பு மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர்புரோகிராம்கள் வடிவமைக்கப்பட்டு வெளியிடப் படுகையில், சோதனைப் பதிப்பு முதலில் வெளியிடப்படும்.

பின்னர், வெளியீட்டுக்கு முந்தையதாகப் பல பதிப்புகள் வெளி யாகும். இவற்றிற்கான பின்னூட்டத் தகவல் களைப் பெற்று, ஒரு முழுமையான பிரச்னையற்ற வெளியீட்டினை மேற் கொள்ளவே இந்த வெளியீட்டு முறை பின்பற்றப்படுகிறது.

இந்த வகையில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் முதலில், இதன் அடிப்படையில் புரோகிராம் தயாரிப்பவர் களுக்கு வழங்கப்பட்டது. பின் நுகர்வோருக் கான பதிப்பு வெளியிடப்பட்டது. இப்போது ஜூன் மாதம், வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பு வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முழுமையான வெளியீட்டிற்கு முன், வேறு சில பதிப்புகளும் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இந்த தகவலை விண்டோஸ் பிரிவின் தலைவர் ஸ்டீபன் ஸினோப்ஸ்கி தெரிவித்துள்ளார்.

முழுமையான வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பு, ஏறத்தாழ இறுதிப் பதிப்பு போலவே இருக்கும். எனவே, டவுண்லோட் செய்து பயன்படுத்துபவர்கள் கூறும் நிறை குறைகள் கணக்கில் கொள்ளப்பட்டு, ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரி செய்யப்படும்.

இந்த பதிப்பு, நுகர்வோர் கருத்துக்களைப் பெறவே வெளியிடப்படும். விண்டோஸ் 8 சிஸ்டத்தின் மெட்ரோ இன்டர்பேஸ் இடை முகத்திற்கு இரு வகைகளில் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

இதனை வரவேற்பவர் கள் ஒரு புறம் இருக்க, பெரும்பாலானவர் கள், கீ போர்டு மவுஸ் கொண்டு இயக்கப் படும் பழைய வகை ஸ்டார்ட் மெனு அடங்கிய திரைக் காட்சியையே விரும்பு கின்றனர்.

புதிய இடைமுகம் டேப்ளட் பிசியில் உள்ளது போலவே இருக்கிறது. டெஸ்க்டாப் பெர்சனல் கம்ப்யூட்டர் போல இல்லை என்று பலர் கருத்து தெரிவித் துள்ளனர். எனவே இந்த வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பிற்கு, மக்கள் அளிக்க இருக்கும் பின்னூட்டுகள் மிகக் கவனமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் எடுத்துக் கொள்ளப்படும்.

விண்டோஸ் 7 சிஸ்டம், சென்ற 2009 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியானது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது எல்லாம் சரியாக மைக்ரோசாப் எதிர் பார்ப்பது போலச் சென்றால், வரும் அக்டோ பரில் விண்டோஸ் 8 வெளியாகலாம்.


கூகுள் நிறுவனத்தின் கூகுள் ட்ரைவ்

பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்த கூகுள் நிறுவனத்தின் கூகுள் ட்ரைவ் வசதி சென்ற மாத இறுதியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. கிளவ்ட் கம்ப்யூட்டிங் பிரிவில் ஒரு வசதியாக இந்த இணைய ஸ்டோரேஜ் ட்ரைவ் வசதி தரப்பட்டுள்ளது.

கூகுள் அக்கவுண்ட் உள்ள யாரும் இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 5 ஜிபி அளவிலான பைல்களை இதில் சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் அந்த பைல்களை, உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பின் மூலம், கூகுள் ட்ரைவ் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.

5 ஜிபி அளவிற்கும் மேலாக ட்ரைவ் இடம் தேவைப்படுவோர், கட்டணம் செலுத்தி 16 டெராபைட் (!) வரை டிஸ்க் ஸ்பேஸ் பெற்றுக் கொள்ளலாம். இலவச 5 ஜிபிக்கு மேலாக, 25 ஜிபிக்கு மாதந்தோறும் 2.49 டாலர், 100 ஜிபிக்கு 4.99 டாலர், ஒரு டெராபைட் 49.99 டாலர் செலுத்த வேண்டும். இந்த வகையில் ஆண்டுக்கு 100 டாலர் செலுத்தி 400 ஜிபி இடமும் பெற்றுக் கொள்ளலாம்.

2006 ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனம் குறித்து பேசுகையில், இந்த கூகுள் ட்ரைவ் ஒரு வதந்தியாக உலா வந்து கொண்டிருந்தது. அப்போதிருந்தே பல நிறுவனங்கள், இணையத்தில் பைல்களை சேவ் செய்து வைக்க வசதிகளை அளித்து வந்தன. அந்த வரிசையில் ட்ராப் பாக்ஸ் (Dropbox), ஸ்கை ட்ரைவ் (SkyDrive), ஐ கிளவ்ட் (iCloud), பாக்ஸ் (Box) எனக் கிடைத்தன.

கூகுள் ட்ரைவ் தரும் இலவச 5 ஜிபி இடம் குறிப்பிடத்தக்கது. ட்ராப் பாக்ஸ் 2ஜிபி இடம் தருகிறது. ஸ்கைட்ரைவ் 25 ஜிபி கொள்ளளவு தருகிறது. இதில் 5 ஜிபி, உங்கள் கம்ப்யூட்டர் பைல்களுடன் இணைக்கப்பட்ட இடமாகக் கிடைக்கிறது. கூகுள் தன் மற்ற சேவைகளிலும் இந்த இணைய பைல் சேவையினைத் தந்து வருகிறது.

ஜிமெயில் இன்பாக்ஸ் 7 ஜிபிக்கு மேலாகவே இடம் தருகிறது. கூகுள் டாக்ஸ் போல்டர் 1 ஜிபி, பிகாஸா வெப் ஆல்பம் 1 ஜிபி, கூகுள் மியூசிக் தளத்தில் 100 ஜிபி பாடல்கள் சேமிப்பு, கூகுள் ப்ளஸ் வசதியில் எல்லையற்ற போட்டோ மற்றும் வீடியோ பைல் சேமிப்பு எனப் பல ஸ்டோரேஜ் வசதிகள் கூகுள் மூலம் கிடைக்கின்றன. கூகுள் ட்ரைவில் போல்டர்களைப் பயன்படுத்தி, உங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் இருந்து பைல்கள் தாமாக இங்கு சென்று சேவ் செய்திடும் வகையில் அமைக்கலாம்.

இந்த வகையான கிளவ்ட் பைல் ஸ்டோரேஜ் சேவை அனைத்தும், உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்பட மாட்டாது. இவை இன்னொரு தர்ட் பார்ட்டியின் சர்வரில் இடம் பெறும். இவற்றைப் பெற உங்கள் பாஸ்வேர்ட் மட்டும் இருக்குமா? அல்லது அந்த சர்வரை நிர்வகிப்பவர் அல்லது கூகுள் சேவையை வழங்குபவரிடமும் பைல் பெறுவதற்கான பாஸ்வேர்ட் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

இந்த கிளவ்ட் சேவை மற்றொரு நிறுவனத்தின் தொழில் நுட்ப வசதியை இதற்கென பயன்படுத்துகையில், நம் பைல்களை அவர் களும் பார்க்க, இறக்கிக் கொள்ள வழி கிடைத்துவிடுமே? அப்போது நம் பைல்களின் ரகசியத் தன்மைக்கு யார் உத்தரவாதம் அளிப்பார்கள்?

நாம் இப்போதெல்லாம், பலவகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, வெவ்வேறு மொபைல் சாதனங்களில் பயன்படுத்தி வருகிறோம். விண்டோஸ், லேப்டாப், ஆப்பிள் ஓ.எஸ்., ஆண்ட்ராய்ட் போன் என இவை விரிகின்றன. இவை அனைத்தின் மூலமும் இந்த கிளவ்ட் சேவையினைப் பெறும் வசதி நமக்குக் கிடைக்க வேண்டும்.

இல்லையேல், இதன் முதன்மைப் பயன் நமக்குக் கிடைக்காது. அல்லது நாம் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற் கேற்ப, இந்த கிளவ்ட் ஸ்டோரேஜ் வசதியைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக் காட்டாக, மேக் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள், ஆப்பிள் தரும் ஐகிளவ்ட் சேவையைப் பயன் படுத்தலாம். கூகுள் ட்ரைவ் பொறுத்த வகையில், விண்டோஸ், மேக் பிசி, ஐபோன், ஐபேட் (விரைவில் வர உள்ளது) மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்கள் ஆகியவற்றிற்கான இடைமுக இணைப்பு வசதி தரப்பட்டுள்ளது.

கூகுள் சேவையில் நிச்சயமாக அதன் தேடுதல் வசதி நிச்சயம் கிடைக்கும். பைல் பெயர், திருத்தப்பட்ட நாள் போன்றவற்றின் அடிப்படையில் பைல்களைத் தேடலாம். படங்களைப் பயன்படுத்தியும் பைல் களைத் தேடலாம்.

எடுத்துக்காட்டாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரத்தின் படத்துடன் ஒரு கட்டுரை அடங்கிய பைலைப் பதிந்திருந்தால், கோபுரத்தின் படத்தைக் கொண்டு அந்த பைலைத் தேடிப் பெறலாம். இதற்கு Google Goggles என்ற தொழில் நுட்பம் பயன் படுத்தப்படுகிறது.

பைல்களை இணையத்தில் உள்ள பிரவுசர் மூலமே திறந்து பார்க்கும் வசதி தரப்படுகிறது. எடுத்துக் காட்டாக, உங்கள் நண்பர் ஒரு அடோப் பேஜ்மேக்கர் பைல் ஒன்றை அனுப்புகிறார். அதனை கூகுள் ட்ரைவில் பதிந்து வைத்தால், நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் பேஜ் மேக்கர் சாப்ட்வேர் இல்லாமலேயே, அந்த பைலைத் திறந்து பார்க்கலாம். இந்த வகையில் 30 வகையான பார்மட்களில் உள்ள பைல் களைத் திறந்து பயன்படுத்தலாம்.

மற்ற கூகுள் சேவைகளில் எந்த வகை யில் இயக்க வழிமுறைகள் உள்ளனவோ அதே போலவே, கூகுள் ட்ரைவ் இயக்கமும் உள்ளது. எனவே கூகுளின் மற்ற சேவைகளைப் பயன்படுத்தியவர்களுக்கு, கூகுள் ட்ரைவ் பயன்படுத்துவது எளிது.

கூகுள் ட்ரைவ் வெறும் ஸ்டோரேஜ் வசதி தரும் சாதனம் மட்டுமல்ல; கூகுள் டாக்ஸ் வசதியின் மேம்படுத்தப்பட்ட, நீட்டிப்பு வசதியாகும். இங்கும் டாகுமெண்ட்ஸ், மீடியா மற்றும் பைல்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வசதி தரப்படு கிறது. நீங்கள் உங்கள் நண்பர்களுடன் இணைந்து ஒரு பைலை எடிட் செய்திடலாம். உங்கள் நண்பர்கள் உலகின் பல மூலைகளில் இருந்தாலும், இணைந்து செயலாற்றலாம்; அவர்கள் எந்த சாதனத்தைப் பயன்படுத்தியும் இந்த செயல்பாட்டில் இணையலாம்.

இந்த சேவைகள் கூகுள் ட்ரைவின் தொடக்க நிலையிலேயே தரப்படுகின்றன. இவை தொடக்கம் தான்; இன்னும் பல சேவைகள் வர இருக்கின்றன என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இந்த வசதியைப் பெற இணையத்தில் https://drive.google.com/start#home என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று, உங்கள் கூகுள் அக்கவுண்ட் மூலம் நுழையவும். உடன் உங்கள் பதிவை ஏற்றுக் கொண்டு, பின்னொரு நாளில் உங்களுக்கு கூகுள் ட்ரைவ் அனுமதியை வழங்கியுள்ளதாக, உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரிக்கு கூகுள் அறிவிக் கும். இடது பக்கம் உள்ள “Download Google Drive” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். சின்னதாக ஒரு இன்ஸ்டலேஷன் நடை பெறும்.

பின்னர், கூகுள் ட்ரைவ் போல்டர் உங்கள் டெஸ்க்டாப்பில் இடம் பெறும். இது நேரடியாக கூகுள் ட்ரைவுடன் இணைக்கப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களில் மாற்றம் ஏற்படுகையில், அது கூகுள் ட்ரைவில் உள்ள பைலிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதே போல உங்கள் அனுமதி பெற்றவர்கள், அங்கே ஸ்டோர் செய்து வைக்கப்பட்டுள்ள பைல் களில் மாற்றம் ஏற்படுத்தினால், கம்ப்யூட்டரில் உள்ள பைலிலும் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

Google Drive for PC (அல்லது மேக்) என்ற புரோகிராம் நம் கம்ப்யூட்டருக்கும் கூகுள் ட்ரைவிற்கும் இடையே ஒருங்கிணைப்பு பாலத்தினை ஏற்படுத்துகிறது. விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 மற்றும் மேக் ஆகியவற்றிற்கான புரோகிராம்கள் கிடைக்கின்றன.

இந்த புரோகிராம் பின்னணியில் இயங்கி, கூகுள் ட்ரைவின் போல்டரில் காப்பி செய்யப்படும் பைல்களை அப்டேட் செய்கிறது. நம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பைல் மேனேஜர் பகுதியில் ஒரு டைரக்டரியாக இது இடம் பெறுகிறது.

கூகுள் ட்ரைவ் பயன்படுத்துபவர்கள், இதற்கு அனுப்பப்படும் பைல்களின் எக்ஸ்டன்ஷன் பெயரில் சிறிய மாற்றம் இருப்பதனைக் காணலாம். கூகுள் ட்ரைவுடன் சம்பந்தப்பட்டது என்று காட்டவே இந்த ஏற்பாடு.

இந்த ட்ரைவினை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்பவர்கள் சற்று கவனத்துடன் அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கூகுள் அக்கவுண்ட் ஒன்று வைத்திருப் பவர், கூகுள் தரும் அனைத்து வசதி களையும் பயன்படுத்த முடியும். எனவே கூகுள் ட்ரைவ் பயன்படுத்துபவருக்கு, கூகுள் மெயில், வெப்மாஸ்டர் டூல்ஸ், கூகுள் டாக்ஸ் அல்லது யு ட்யூப் என அனைத்திலும் பங்கேற்கலாம்.

எனவே, இந்த எச்சரிக்கையின் பின்னணியிலேயே ஒருவர் கூகுள் ட்ரைவினைப் பயன்படுத்த
வேண்டும். கூடுமானவரை கம்ப்யூட்டர் இயங்கும்போதே, கூகுள் ட்ரைவ் வசதியும் இயக்கப்படாமல் இருப்பதே நல்லது. நாம் விரும்பும்போது மட்டும் இதனைப் பயன்படுத்தும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். googledrivesync.exe பைல் திறக்கப்பட்டு இயங்கா நிலையில் கூட, ராம் நினைவகத்தில் 50 எம்பி இடத்தை எடுத்துக் கொள்கிறது. இது மற்ற கிளவ்ட் கம்ப்யூட்டிங் ட்ரைவ் புரோகிராம்களைக் காட்டிலும் மிக அதிகமாகும். இருப்பினும், இன்றைய நிலையில் குறைந்தது 2 ஜிபி ராம் நினைவகம் உள்ள கம்ப்யூட்டரை நாம் பயன்படுத்துவதால், இதனால் சிக்கல் ஏதுமில்லை என்ற முடிவிற்கு வரலாம்.


மே மாதத்தில் 41 மெகா பிக்ஸெல் போன்

கார்ல் ஸெய்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, நோக்கியா தன் பியூர் வியூ 808 மொபைல் போனில், 41 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவினைத் தர இருக்கிறது.

இந்த மொபைல் போன் மே மாதம் முடிவடைவதற்குள் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்தியாவிலும் ரஷ்யாவிலும் இது விற்பனைக்கு வரும். இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சம் இந்த கேமரா வாகத்தான் இருக்கும்.

இந்த கேமராவில் HD 1080p வீடியோ பதிவு மற்றும் இயக்கும் வசதி கிடைக்கிறது. இதன் ஸ்டீரியோ ஆடியோ டோல்பி ஹெட்போன் தொழில் நுட்பத்தில் இயங்குகிறது.

இதன் 4 அங்குல AMOLED CBD டிஸ்பிளே திரை கொரில்லா கிளாஸ் பாதுகாப்பினைக் கொண்டுள்ளது.

இதன் மற்ற சிறப்பம்சங்களாக, NFC, Stereo FM Radio with FM transmitter, HDMI, 3G, Bluetooth 3.0, WiFi b/g/n, DLNA, aGPS ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதன் பேட்டரி 1400 ட்அட திறன் கொண்டதாகும்.

இதனைத் தொடர்ந்து விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் ஒன்றை இதே திறன் கொண்ட கேமராவுடன் வழங்க நோக்கியா திட்டமிட்டுள்ளது.

அண்மையில் நடந்த பன்னாட்டளவிலான மொபைல் போன் கருத்தரங்கில், பியூர் வியூ போன் காட்டப்பட்ட போது பலரும் அதன் வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டில் ஆர்வம் காட்டிப் பாராட்டினர்.

எனவே இந்த போனை பல நவீன வசதிகளுடன் தர நோக்கியா திட்டமிடுகிறது.


இன்டர்நெட் முகவரியில் எழுத்து சோதனை

இன்டர்நெட் இன்று உலகை ஆட்டிப் படைக்கும் ஒரு சக்தியாக விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. ஆனால் சில நேரங்களில் இது எரிச்சல் தரும் விஷயமாகவும் உள்ளது.

இன்டர்நெட் தளமுகவரிகள் மற்றும் மின் அஞ்சல் முகவரிகளை எழுத்து சோதனைக்குத் தாமாகவே உட்படுகையில் இது தவறு என நமக்குச் சுட்டிக் காட்டப்படுகிறது.

கம்ப்யூட்டர் இப்படித்தான் செய்திடும் என ஆதங்கத்துடன் நாம் அதனை அலட்சியப்படுத்தினாலும், உள் மனதில் இதனைத் தவிர்க்க இயலாதா? என்ற ஆவல் எழுகிறது. இந்த சோதனையைத் தவிர்க்கவும் வேர்ட் புரோகிராமில் வழி உள்ளது என்பதே இதற்குத் தீர்வு.

ஸ்பெல்லிங் செக் செய்திடும் புரோகிராமினை இன்டர்நெட் முகவரிகளையும், மின்னஞ்சல் முகவரிகளையும் அலட்சியப்படுத்திவிடு என ஆணையிடலாம்.

இதனை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். நீங்கள் வேர்ட் 2007க்கு முந்தைய தொகுப்புகள் பயன்படுத்துபவராக இருந்தால்,

1. Tools மெனுவிலிருந்து Options பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Options டயலாக் பாக்ஸினைக் காட்டும்.

2. இதில் Spelling - Grammar டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.

3. இங்கு Ignore Internet and File Addresses என்ற வரியின் முன் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை இடவும்.

4. பின்னர் OK கிளிக் செய்து வெளியேற வும்.

நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், கீழ்க்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளவும்.

1. ஆபீஸ் பட்டனில் கிளிக் செய்து, பின்னர் Word Options மீது கிளிக் செய்திடவும்.

2. இப்போது Word Options டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.

3. டயலாக் பாக்ஸின் இடது பக்கம் Proofing என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இங்கு Ignore Internet and File Addresses என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

5. பின்னர் OK கிளிக் செய்து வெளியேறவும்.

இனி வேர்ட் டாகுமெண்ட்டில் இணைய தள முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை டைப் செய்திடுகையில் அதன் மீது ஸ்பெல்லிங் செக் நடைபெறாது.


விநாடிக் கணக்கில் கட்டணம் ட்ராய் கண்டிப்பு

மொபைல் சேவை வழங்கி வரும் அனைத்து நிறுவனங்களும், தங்கள் சேவைத் திட்டங்களில், விநாடி அடிப்படையிலான திட்டம் ஒன்றைக் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என ட்ராய் அறிவித்துள்ளது.

போட்டிகள் மற்றும் விளையாட்டுக்கென ஏற்படுத்தப்படும் அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களுக்கென வசூலிக்கப்படும் கட்டணத்திற்கான அதிகபட்ச வரம்பினையும் ட்ராய் அறிவித்துள்ளது.

சாதாரண அழைப்பு, எஸ்.எம்.எஸ். கட்டணத்தின் நான்கு மடங்கிற்கு மேல் இது இருக்கக் கூடாது.

அனைத்த நிறுவனங்களும் ரூ.10 கட்டணத்தில் கட்டாயமாக ஒரு டாப் அப் வவுச்சராவது தர வேண்டும் எனவும் ட்ராய் அறிவித்துள்ளது.


சில தொழில் நுட்ப சொற்கள்

ஐ.பி. அட்ரஸ் (IP Address): கம்ப்யூட்டர் நெட்வொர்க் மற்றும் இன்டர்நெட்டில் இணைக்கப்பட்டுள்ள ஒரு கம்ப்யூட்டருக்கு அடையாளம் தரும் முகவரி எண்.

ஸ்க்ராம்ப்ளிங் (Scrambling): கம்ப்யூட்டர் பைலில் உள்ள டேட்டாவினை அடுத்தவர் படித்துப் பார்க்க முடியாத அளவிற்கு குழப்பி சேவ் செய்து வைத்துக் கொள்வது. இதனால் அதனை உருவாக்கியவார் மற்றும் பெறுபவர் மட்டுமே சரி செய்து படிக்க முடியும். இதனை சரி செய்வதற்கான வழியை இருவரும் மறந்து விட்டால் பைல் தகவல் உருப் பெறாது.

மதர்போர்ட் (Motherboard): பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள மெயின் சர்க்யூட் போர்டு. இதனுடன் மானிட்டர், கீ போர்டு, மவுஸ், பிரிண்டர், மோடம் போன்ற சாதனங்கள் இணைக்கப்பட்டு இயங்குகின்றன.

பயாஸ் (BIOS - Basic Input Output System): அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களின் மதர் போர்டிலும் இணைத்து அமைக்கப்பட்ட சிறிய புரோகிராம். ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம், ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம்.

ஒரு கம்ப்யூட்டருக்கு மின் சக்தியை அளித்து இயக்குகையில் இந்த புரோகிராம் உடனே இயங்கி ஹார்ட் டிஸ்க், கீ போர்டு மற்றும் தேவையான சார்ந்த சாதனங்கள் எல்லாம் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதனைத் தேடிப் பார்த்து சரியான பின்னரே முழுமையாக இயக்கத்திற்கு வழி விடும். இல்லை என்றால் என்ன குறை என்பதனைத் தெரியப்படுத்தும்.


அழித்த புக்மார்க் திரும்பப் பெற

இன்டர்நெட் உலாவில் புக்மார்க்குகள் முக்கிய இடம் வகிக்கின்றன. நாம் அடிக்கடி செல்ல விரும்பும், முக்கிய தளம் எனக் கருதும் தளங்களுக்கான முகவரிகளைக் குறித்து வைப்பதே புக்மார்க்.

ஒவ்வொரு முறையும், தள முகவரியினை டைப் செய்திடாமல், இந்த புக்மார்க்குகளில் கிளிக் செய்து தளத்தினைப் பெறலாம். இவ்வளவு முக்கிய புக்மார்க்குகளைத் தவறுதலாக அழித்துவிட்டால் என்ன செய்வது? திரும்பப் பெறும் வழிகள் எவை? இங்கு பார்க்கலாம்.

குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களில் அழிக்கப்பட்ட, நீக்கப்பட்ட, புக்மார்க்குகளைத் திரும்பப்பெறும் வழிகள் தரப்பட்டுள்ளன. குரோம் பிரவுசரில் இது சற்று கடினமான வழியாக அமைக்கப்பட்டுள்ளது.

புக்மார்க்குகளுக்கான பேக் அப் பைல் சிறிய, மறைத்துவைக்கப்பட்ட பைலாக குரோம் பிரவுசரில் உள்ளது. இதனை நாமாகத்தான் தேடிக் கொண்டு வர வேண்டும். இந்த பைல் அடிக்கடி இதன் மேலாகவே எழுதப்படுகிறது.

பயர்பாக்ஸ் பிரவுசரில் இது மிக எளிது. பயர்பாக்ஸ் புக்மார்க் மேனேஜர் பிரிவில், அழிக்கப்பட்ட புக்மார்க்கினை உடனடியாக மீட்க ஒரு “undo” வசதி தரப்பட்டுள்ளது. பிரவுசரும் தானாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் புக்மார்க்குகளை பேக் அப் செய்கிறது.

இந்த பேக் அப் பைலைப் பல நாட்கள் பயர்பாக்ஸ் வைத்துக் காக்கிறது. இதனை எப்போது வேண்டுமானாலும், நாம் எளிதாக எடுத்துக் கொள்ளலாம். மறைக்கப் பட்ட போல்டர்களைத் தேடி அலைந்து தோண்டி எடுக்கும் வேலை எல்லாம் இதில் இல்லை.

குரோம் பிரவுசரின் புக்மார்க் மேனேஜரில் “undo” ஆப்ஷன் இல்லை . ஏதாவது முறையில் ஏடாகூடமாக, உங்கள் விரல் நழுவி புக்மார்க்குகள் உள்ள போல்டரை அழித்து விட்டால், அவற்றை மீட்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

இதில் உள்ள export ஆப்ஷனைப் பயன்படுத்தி ஏற்கனவே இதன் பேக் அப்பினை நீங்கள் தயாரித்து வைத்திருந்தால், அவற்றை import செய்து மீண்டும் பெறலாம். ஆனால் இந்த பேக் அப்பிற்குப் பின்னால் ஏற்படுத்திய புக்மார்க்குகள் கிடைக்காது.

குரோம் பிரவுசர் உங்கள் புக்மார்க் பைலினை ஒரே ஒரு பேக் அப் பைலாக பராமரிக்கிறது. ஒவ்வொரு முறை குரோம் பிரவுசரை இயக்கும் போதும் அது, அந்த பேக் அப் பைலை மீண்டும் எழுதிக் கொள்கிறது. எனவே புக்மார்க் பைல் உள்ள போல்டரை அழித்துவிட்டால், குரோம் பிரவுசரை மூடக் கூடாது. மீண்டும் இயக்கக் கூடாது. அப்படி இயக்கினால், பேக் அப் பைலில், புக்மார்க்குகள் அழிக்கப்பட்ட நிலையில் எதுவும் திரும்பக் கிடைக்காது. அப்படியானால் என்ன செய்யலாம்? இங்கு பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்கவும். அதன் அட்ரஸ் பாரில் கீழ்க்காணும் முகவரியை டைப் செய்திடவும். இதில் NAME என்ற இடத்தில், உங்களின் விண்டோஸ் யூசர் அக்கவுண்ட் பெயரை எழுதவும்.

C:\Users\NAME\AppData\Local\Google\Chrome\User Data\Default இந்த போல்டரில் இரண்டு புக்மார்க் பைல் இருக்கும். அவை Bookmarks and Bookmarks.bak. இதில் இரண்டாவதாகத் தரப்பட்டுள்ளது (Bookmarks.bak) அண்மைக் காலத்திய பேக் அப் பைல். நீங்கள் இறுதியாக குரோம் பிரவுசரைத் திறந்த போது, பிரவுசரால் உருவாக்கப்பட்ட பேக் அப் பைல்.

இந்த போல்டரில் .bak என்ற எக்ஸ்டன்ஷன் பெயருடன் எந்த பைலும் இல்லாமல், Bookmarks என்ற பெயரில் இரண்டு பைல்கள் இருந்தால், பைல்களுக்கான துணைப் பெயர் மறைக்கப்படும் வகையில் செட் செய்யப்பட்டுள்ளது என்று பொருள்.

இந்தக் குழப்பத்தினை நீக்க, Organize மெனுவில் கிளிக் செய்திடவும். இதில் “Folder and search options.” என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். போல்டர் ஆப்ஷன்ஸ் விண்டோவில், View டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Hide extensions for known file types” என்ற வரியில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை எடுத்து விடவும்.

இப்போது, மேலே கூறப்பட்ட இரண்டு புக்மார்க் பைல்களில், இறுதியாக உருவாக்கப்பட்ட பேக் அப் பைல், அதற்கான எக்ஸ்டன்ஷன் பெயருடன் காட்டப்படும். இந்த பேக் அப் பைலை மீட்டுக் கொண்டு வர, குரோம் பிரவுசரின் அனைத்து விண்டோக்களையும் மூடவும். குரோம் பிரவுசர் மூடப்பட்ட நிலையில், Bookmarks பைலை அழிக்கவும்.

Bookmarks.bak என்ற பைலை Bookmarks என பெயர் மாற்றம் செய்திடவும். இனி மீண்டும் குரோம் பிரவுசரை இயக்கி னால், நீங்கள் அழித்த புக்மார்க் பைலைக் காணலாம். நீங்கள் இறுதியாக குரோம் பிரவுசரைத் திறந்து இயக்கியபோது உருவாக்கிய புக்மார்க்குகள் மட்டும் அங்கு கிடைக்காது.


பிரவுசரிலேயே ஸ்கைப்

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் வசதியினைத் தன் பிரவுசரிலேயே கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஒருவருக்கொருவர் வீடியோ மற்றும் ஆடியோ வழி தொடர்பு கொள்ள, பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஸ்கைப் சாப்ட்வேர் தொகுப்பினைத்தான்.

யாஹூ மெசஞ்சர், கூகுள் போன்றவை இதற்குத் துணை புரிந்தாலும், பலரும் ஸ்கைப் அப்ளிகேஷனையே விரும்பு கின்றனர்.

ஸ்கைப் நிறுவனத்தைக் கைப்பற்றிய பின்னர், அதன் வாடிக்கையாளர்களைத் தன் பிரவுசருடன் இணைக்கும் முயற்சி இது என இத்துறையில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர்.

இதில் ஒன்றும் தவறு இல்லையே. ஸ்கைப் தேவைப்படுவோர் இப்போது அதற்கான அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பைத் தனியே தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டியதுள்ளது. பிரவுசரிலேயே இது கிடைத்துவிட்டால், ஸ்கைப் பயன்படுத்துவோருக்கு மிகவும் எளிதாகப் போய்விடும்.

ஸ்கைப் பார் பிரவுசர்ஸ் (“Skype for Browsers”) என்ற திட்டத்திற்கு தொழில் நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுவதாக, மைக்ரோ சாப்ட் அறிவித்துள்ளதாகவும், அந்த அறிவிப்பே மேற்கூறிய தகவலை உறுதி செய்வதாகவும், சில இணைய தளங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

ஏற்கனவே பேஸ்புக் வழியாக ஸ்கைப் வசதியைப் பயன்படுத்த முடியும். ஆனால், இது முழுமையான ஸ்கைப் திறன் கொண்ட தல்ல. இதில் எச்.டி.எம்.எல்.5 வசதிகள் கிடைப்பதில்லை. எனவே மைக்ரோசாப்ட் மேற்கொள்ளும் முயற்சிகள் இணைய வானத் தின் எல்லைகளைக் கூடுதல் வசதிகளுடன் விரிப்பதாக இருக்கும்.

இணையத்திற்கான ஸ்கைப் பதிப்பு வெளியானால், இணையத் தொடர்பினைத் தரும் எந்த ஒரு கம்ப்யூட்டர் மூலமாகவும், ஸ்கைப் தரும் வசதிகளை அனுபவிக்க முடியும். Voice over Internet Protocol எனப்படும் வசதி அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கும்.

மேலும் மைக்ரோ சாப்ட் தன் பிரவுசரிலேயே இதனைத் தருவது, இதே போல வசதியினைத் தரும் மற்ற அப்ளிகேஷன்களுக்குச் சரியான போட்டியைத் தரும். மைக்ரோசாப்ட் பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இடம் முன்னணிக்கு வரும்; மற்ற பிரவுசர்களைப் பின்னுக்குத் தள்ளும். பல முன்னணி நிறுவனங்களின் (Apple, Google, Cisco, LifeSize etc.) வீடியோ கான்பரன்சிங் வர்த்தகம் நஷ்டத்தைச் சந்திக்கும்.

தற்போது ஸ்கைப் அப்ளிகேஷனை உலகெங்கும் ஏறத்தாழ 75 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். மைக்ரோசாப்ட், ஸ்கைப் வசதியைத் தன் பிரவுசரில் மட்டுமின்றி, ஆபீஸ், விண்டோஸ், எக்ஸ்பாக்ஸ் மற்றும் விண்டோஸ் போன் ஆகியவற்றிலும் இணைத்திட முயற்சிகளை மேற்கொள்ளும் போல் தெரிகிறது. இந்த முயற்சிகள் வெற்றிகரமாக முடிந்தால், ஸ்கைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கை விரைவில் நூறு கோடியைத் தாண்டும் என அனைவரும் கருதுகின்றனர்.

பலரும் இது சாத்தியமே என எண்ணுகையில், ஒரு சில வல்லுநர்கள், ஸ்கைப் போன்ற ஒரு ஆடியோ, வீடியோ அப்ளிகேஷனை, பிரவுசர் மற்றும் ஆபீஸ் போன்றவற்றுடன் இணைப்பது இயலாத ஒன்று எனக் கருதுகின்றனர்.

தகவல் தொழில் நுட்ப உலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை. எனவே ஸ்கைப் நமக்கு அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் இணைந்து கிடைக்கும் அந்நாளை எதிர்நோக்குவோம்.


கூகுள் மொழி பெயர்ப்பு

கூகுள் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பலவிதமான வசதிகளில், அதன் மொழி பெயர்க்கும் வசதியும் ஒன்று.

மிகத் துல்லியமாக மொழி பெயர்க்காவிட்டாலும், பொருள் புரிந்து கொள்ளும் வகையில் இதன் மொழி பெயர்ப்பு உள்ளதாக, பன்னா டெங்கும் உள்ள பல மொழி வாடிக்கை யாளர்கள் கூறி உள்ளனர்.

ஓராண்டில் உலகெங்கும் உள்ள மொழி பெயர்ப்பாளர்கள் மேற்கொள்ளும் மொழி பெயர்ப்பினைக் காட்டிலும், ஒரே நாளில் கூகுள் ட்ரான்ஸ்லேட் மொழி பெயர்ப்பது அதிகம் என கூகுள் அறிவித்துள்ளது.

ஒரு மாதத்தில் 20 கோடிக்கும் அதிகமானோர் இந்த வசதியைப் பயன்படுத்துகின்றனர். சராசரியாக, பத்து லட்சம் நூல்களில் நாம் சந்திக்கக் கூடிய சொற்களுக்கு இணையாக, கூகுள் ட்ரான்ஸ்லேட் சாதனம் ஒரு நாளில் மொழி பெயர்க்கிறது.

இந்த வகையில் பார்த்தால், நம் பூமியில், கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் தான் அதிக அளவில் மொழி பெயர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது எனலாம்.

2001 ஆம் ஆண்டு கூகுள் ட்ரான்ஸ்லேட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் ஆங்கிலத்திலிருந்து எட்டு மொழிகளுக்கு மொழி பெயர்க்கும் வசதி தரப்பட்டது. அதன் பின்னர், மொழி பெயர்ப்பில் வேகம் மற்றும் துல்லியம் தரும் வகையில் தன் சேவையினை மேம்படுத் தியது கூகுள்.

பின்னர் படிப்படியாக கூடுதலான மொழிகள் இணைக்கப்பட்டன. இன்று 64 மொழிகளில் கூகுள் ட்ரான்ஸ்லேட் மொழி பெயர்க்கிறது. இவற்றில் அஸர்பெய்ஜான், ஐஸ்லாண்டிக், ஸ்வாஹிலி, பெங்காலி, பாஸ்க் மற்றும் வெல்ஷ் ஆகியவையும் அடங்கும். ஒரு வாக்கியத்தை ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் மொழி பெயர்த்துத் தரும் திறனை கூகுள் உருவாக்கியுள்ளது.

இதனைப் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் தாங்கள் பயணத்தில் இருக்கையில் மேற்கொள்கிறார்கள். 92% மேலான மொழி பெயர்ப்பு பணிகள் அமெரிக்காவிற்கு வெளியே தான் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த வசதி மொபைல் போன்களில் டெக்ஸ்ட் மொழி பெயர்ப்புக்கும் தரப்பட்டுள்ளது. குரோம் பிரவுசர் வழி எந்த ஓர் இணைய தளத்தினையும் மொழி பெயர்த்துக் காணலாம்.

கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் ஓரளவிற்கே மொழி பெயர்க்க இயலும். முழுமையான பொருள் மாற்றம் கிடைக்காது. அது மனிதர்களால் மட்டுமே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


குப்பைச் செய்தி அனுப்புவதில் முதலிடம்

தேவையற்ற, விரும்பப்படாத, நோக்கமற்ற மெயில்களை ஸ்பேம் என அழைக்கிறோம். அநேகமாக அனைவரின் மெயில் இன்பாக்ஸிலும் இது போல நிறைய ஸ்பேம் மெயில்கள் நிறையக் காணலாம்.

பன்னாட்டளவில் இந்த ஸ்பேம் மெயில்கள் அனுப்புவது பலரின் வழக்கமாக உள்ளது. சில வேளைகளில் இந்த மெயில்கள் கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் உள்ள தளங்களுக்கும் நம்மை இழுத்துச் செல்லும் மெயில்களாக அமைந்து விடுகின்றன.

சரி, இந்த ஸ்பேம் மெயில்களை அதிகமாக அனுப்புபவர்களைக் கொண்டு முதல் இடம் பிடித்திருக்கும் நாடு எது தெரியுமா? நம் இந்தியா தான். தகவல் பாதுகாப்பு பிரிவில் இயங்கி வரும் Sophos என்ற நிறுவனம்

இந்த தகவலை அண்மையில் தன் ஆய்விலிருந்து அறிந்து வெளியிட்டுள்ளது. 2012 மார்ச் வரை இதற்கான டேட்டாவினைத் தேடிப் பெற்று இந்த முடிவிற்கு வந்துள்ளது. உலக அளவில் வெளியாகும் 10 ஸ்பேம் மெயில்களில் ஒன்று இந்தியாவிலிருந்து செல்கிறது. இந்த வகையில் இதுவரை முதல் இடம் பிடித்திருந்த அமெரிக்காவினை முந்திவிட்டது இந்தியா.

இந்த ஸ்பேம் மெயில்கள் பெரும்பாலும், ஹேக்கர்கள் தங்கள் மால்வேர் புரோகிராம்கள் மூலம் கைப்பற்றிய கம்ப்யூட்டர் களிலிருந்தே அனுப்பப்படுகின்றன. இன்டர்நெட் இணைப்பினைப் புதியதாகப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, அண்மைக் காலமாகப் பெருகி வருகிறது.

ஆனால், இவர்கள் தங்கள் கம்ப்யூட்டர்களைப் பாதுகாக்கும் வழிகளை மேற்கொள்ள மறந்து விடுகின்றனர். விளைவு? மால்வேர் புரோகிராம்களால், இந்த கம்ப்யூட்டர்கள் கைப்பற்றப்பட்டு, இது போல ஸ்பேம் மெயில்கள் நூற்றுக் கணக்கில் அனுப்பப்படுகின்றன.

இந்தியாவில் இயங்கும் இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களும் இந்த வகையில் குறை சொல்லப்பட வேண்டியவையே. இந்த நிறுவனங்களும் அதி தீவிரப் பாதுகாப்பு வழிகளை மேற்கொள்வதில்லை. இதனால் ஸ்பேம் மெயில்கள் பரவ இவையும் காரணமாகின்றன.

பரவும் ஸ்பேம் மெயில்களில் பல பொருளாதார ரீதியாக, குறுக்கு வழிகளில் பணம் கிடைக்கும் என புதியதாக இன்டர்நெட் பயனாளர்களுக்கு வலை வீசுகின்றன. இதற்குப் பலியாகுபவர்களின் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகியவற்றைத் திருடுகின்றன.

இந்த ஸ்பேம் மெயிலை அனுப்புவர்கள், அண்மையில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால் தற்சமயம் இது கட்டுப்படுத்தப் பட்டு விட்டதாகவே தெரிகிறது. தற்போது புதிதாகப் பிரபலமாகி வரும் Pinterest என்னும் சோசியல் நெட்வொர்க் தளத்தின் மூலமாக ஸ்பேம் மெயில்கள் பரவுகின்றன.

இந்த மெயில்களில் பொருட்கள் விற்பனை செய்திடும் தளங்களுக்கும், விற்பனை செய்வதில் கமிஷன் கிடைக்கும் என்ற செய்தி உள்ள தளங்களுக்கும் லிங்க் தரப்படுகின்றன. இதில் கிளிக் செய்திடும் நபர்கள் மாட்டிக் கொள்கின்றனர்.

இந்த தகவல்கள் அனைத்தும் Sophos நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளன.


ஜிமெயில் மீட்டர் (Gmail Meter)

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னொரு கரமாய், அல்லது, பாக்கெட்டாய் இயங்கி வருவது ஜிமெயில் வசதியாகும். அனைவரும் பயன்படுத்தும் இந்த மின்னஞ்சல் சாதனத்தை ஒவ்வொரு வரும் எப்படிக் கையாள்கிறார்கள் என்பது அவரவர் விருப்பம் மற்றும் செயல்திறனைப் பொருத்ததாகும்.

பலர் பதிலே அனுப்பாமல் தனக்கு வரும் மெயில்களை மட்டும் படிப்பவராக இருக்கலாம். சிலர் ஒரு மெயிலைப் பலருக்கு அனுப்பலாம். ஒரு சிலர் அனுப்பிய மெயிலுக்கு மட்டும் தொடர்ந்து மாற்றி மாற்றி பதில் அனுப்பிய வண்ணம் சிலர் செயல்பட்டிருப்பார்கள்.

சில மெயில்கள் நேரடியாக நமக்கு வந்திருக்கும். சில காப்பி ஆகவோ, சில மறைக்கப்பட்ட காப்பியாகவோ கிடைத்திருக்கும். சிலவற்றை நாம் "மிக முக்கியம்' எனக் குறித்து வைத்திருப்போம். இந்த விபரங்களை எப்படி அறிவது? நிச்சயம் கஷ்டம் தான்.

ஆனால், இதற்கென மீட்டர் ஒன்றை கூகுள் வழங்குகிறது. இதனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்க்கலாம்.

Gmail Meter என அழைக்கப்படும் இந்த வசதி ஒரு Google Apps Script ஆகும். இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், நீங்கள் ஜிமெயில் வசதியை எப்படிக் கையாள் கிறீர்கள் என்ற புள்ளிவிபரத்தினை அறிந்து கொள்ளலாம். இந்த புள்ளி விபரங்கள் மூலம் நம்மைப் பற்றிய சில அரிய தகவல் கள் நமக்குக் கிடைக்கும். இந்த ஸ்கிரிப்டை இன்ஸ்டால் செய்வது கஷ்டமான காரியம் அல்ல. படிப்படியாகச் சில வழிகளை மேற்கொள்ள வேண்டும்.

முதலில் கூகுள் டாக்ஸ் திறந்து ஒரு புதிய ஸ்ப்ரெட் ஷீட் உருவாக்கவும். இதற்கு ஒரு பெயர் தரவும். பின்னர், இதில் Tools | Script Gallery சென்று ஸ்கிரிப்ட் கேலரியைப் பெறவும். இங்கு “gmail meter” என்பதைத் தேடிக் கண்டறியவும். அதன்பின் இன்ஸ்டால் பட்டனில் கிளிக் செய்திடவும். இன்ஸ்டலேஷன் போது, சில கேள்விகள் கேட்கப்படும். இதனைப் பயன்படுத்தும் உரிமை குறித்து தகவல்கள் கேட்டுப் பதியப்படும். இவற்றுக்கு அனுமதி அளித்த பின்னர், ஜிமெயில் மீட்டர் நிறுவப்படும்.

இந்த வசதி இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், Gmail Meter என்ற புதிய மெனு காட்டப்படும். இந்த மெனுவில் கிளிக் செய்து Get a Report என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Monthly Report மற்றும் Custom Report என இரண்டு ஆப்ஷன்கள் தரப்படும்.


ஸ்பெஷல் தகவல்கள்

RAID - Redundant Array of Independent Disks: ஒரே டேட்டாவினை பல ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கும் முறை. இதன் மூலம் இன்புட் மற்றும் அவுட்புட் செயல்பாடுகளை சமநிலைப்படுத்தி பகிர்ந்து இயக்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் செயல்பாடுகள் மேன்மையடைகின்றன.

Downtime: ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேன் புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் இருக்கும் காலம்.

Backup Rotation: பேக் அப் மீடியாவின் செயல்பாடுகளில் ஒன்று. இதில் சொல்லப்படும் சுழற்சி முறையினால் அண்மைக் காலத்திய டேட்டா பேக் அப் கிடைக்கிறது. இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட பேக் அப் கண்டறியப்பட்டு அதன் இடத்தில் புதிய டேட்டா பதியப்படுகிறது.

இந்த செயல்பாட்டினை இச் சுழற்சி குறிக்கிறது. இதனால் பைல்கள் கரப்ட் ஆனால் அதன் டேட்டாவும் எளிதாக மீண்டும் பெறப்படுகிறது.

DES - Data Encryption Standard: மிகவும் பிரபலமான என்கிரிப்ஷன் முறை. இது 56-பிட் கீ மற்றும் பிளாக் சைபர் (Block Cypher Method) வழியினைப் பயன்படுத்தி டேட்டாவினை 64-பிட அடங்கிய தொகுப்புகளாக மாற்றுகிறது. அதன் பின் அதனை என்கிரிப்ட் செய்கிறது.

Cryptography: தொடர்புகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதில் இதுவும் ஒரு வழி. இந்த என்கிரிப்ஷன் முறையில் டேட்டா முற்றிலும் மாறான வழியில் அமைக்கப்படுவதாகும். புரிந்து கொள்ள முடியாத பார்மட்டில் டேட்டா பதியப்படும். இதனை மீண்டும் பெற மிகவும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத ரகசியமாகத் தயாரிக்கப்படும் கீ கொண்டே முடியும்.

Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.

MMC - Multimedia Card: பிளாஷ் மெமரி கார்டினைப் போல, மல்ட்டி மீடியா கார்டுகளையும் பலவகையான பைல்களை ஸ்டோர் செய்திடப் பயன்படுத்தலம். போட்டோ, வீடியோ, மியூசிக், சாப்ட்வேர் என எவ்வகை பைல்களையும் பதிந்து வைக்கலாம். இந்த கார்டுகள் வெவ்வேறு வகையான வோல்டேஜ் நிலையைப் பயன்படுத்துவதால் இவற்றைக் கையாள்கையில் கவனமாக இருக்க வேண்டும்.

Back up Domain Controller: விண்டோஸ் நெட் வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பிரைமரி டொமைன் கண்ட்ரோலரின் பேக் அப் ஆகச் செயல்படுவதனை இது குறிக்கிறது. அவை செயல் இழக்கையில் இந்த பேக் அப் டொமைன் கண்ட்ரோலர்கள் அதன் செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. இவை செக்யூரிட்டி சார்ந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் செட் செய்யப்பட்டிருக்கும்.


இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய அடுத்த இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 10ல், புதிய இடை முகம் (Interface) ஒன்றை வழங்கு கிறது. இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பெரும்பாலும், விண்டோஸ் 8 மெட்ரோ இன்டர்பேஸ் அமைப்பை ஒட்டி இருக்கும் எனத் தெரிகிறது.

விண்டோஸ் 8 பயன்படுத்த இருவகை இடைமுகம் கிடைக்கின்றன. வழக்கமான தொடு திரை இல்லாத பயன்பாடு மற்றும் தொடுதிரை பயன்பாடு. இவை இரண்டிலும் "டைல் ஐகான்கள்' பயன்படுத்தப்படுகின்றன. டெஸ்க்டாப் திரையில், தெளிவாக இவை காட்டப்படும்.

கும்பலாக குழப்பம் ஏற்படுத்தும் வகையில் இருக்காது. மைக்ரோசாப்ட் அங்கீகரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்வதும், அவற்றை நீக்குவதும் மிக எளிதாக மேற்கொள்ள விண்டோஸ் 8 உதவிடும்.

மெட்ரோ இடைமுகத்தை விரும் பாதவர்கள், வழக்கம் போல டெஸ்க்டாப் தோற்றத்தை வைத்துக் கொண்டு பயன் படுத்தலாம். ஆனால், தற்போது விண்டோஸ் 8 பயன்படுத்திப் பார்த்த பயனாளர்கள் அனைவரும் மெட்ரோ இடைமுகப் பயன்பாட்டினையே அதிகம் விரும்புவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். இதனாலேயே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல் இதனுடன் இணைந்த வகை இடைமுகம் தரப்படுகிறது.

இதுவரை தரப்பட்ட கண்ட்ரோல் பட்டன்கள், டூல்பார் மற்றும் ஸ்குரோல் பார்கள், பயன்படுத்தாத போது, திரையில் தெரியாத வகையில் அமைந்திருக்கும். இதுவே இதில் தரப்பட இருக்கும் மிகப் பெரிய மாற்றமாகும். எனவே வழக்கமான இணைய தேடல் என்பது, ஏறத்தாழ முழுத் திரைக் காட்சியாக அமையும். இப்போது எப்11 கீ அழுத்திப் பெறும் முழுத் திரைக் காட்சியாகவே இது இருக்கும்.

வழக்கமாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திறந்தவுடன், நாம் அமைத்துள்ள ஹோம் பேஜ் கிடைக்கும்; அல்லது காலியான ஒரு பக்கம் கிடைக்கும். புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், இரண்டு பிரிவு டைல்ஸ் அமைப்பு கிடைக்கும். ஒரு பிரிவில், பயனாளர் அடிக்கடி பயன்படுத்தும் தளத்திற்கான லிங்க் இருக்கும். அடுத்த பிரிவில், பயனாளர் தேர்ந்தெடுத்த தளங்களின் தொடர்புக்கான பட்டன்கள் இருக்கும். இது ஏறத்தாழ தற்போதைய புக்மார்க்குகளைப் போன்றது. பயனாளர் இந்த தளங்களைப் பின் (“pin”) செய்திட வேண்டியதிருக்கும்.

ஒரே நேரத்தில் பல இணைய தளங்களைத் திறப்பது, புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இதுவரை திரையின் மேல் பகுதியில், ஒவ்வொரு தளத்திற்குமான அடையாளம் டெக்ஸ்ட்டாகக் காட்டப் பட்டு இருந்தது. இனி ஒவ்வொரு இணைய தளமும் ஒரு சிறிய தளப் படமாகக் காட்டப்படும்.

இவை திரையின் கீழாக இடம் பெறும். பயனாளர்கள், இந்த தளத்திற்கான சிறிய படங்களில் கிளிக் செய்து தாங்கள் விரும்பும் இணைய தளங்களைப் பார்வையிடலாம். இது ஏறத்தாழ ஐ-பேட் சாதனத்தில் தரப்படும் வசதியினை ஒத்ததாகும்.

ஒரு டச் ஸ்கிரீன் திரையில் இணைய உலா மேற்கொள்ளத் தேவையான அனைத்தும் மிக எடுப்பாக காட்டப்படும் வகையில் புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 கிடைக்க இருக்கிறது. ஆனால், பயனாளர்கள், இன்னும் பழைய பாரம்பரிய இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் தான் அதிகம் பயன்படுத்துவார்கள் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. மாற்றத்திற்கு உடனே மசிய மாட்டார்கள் என்று எண்ணுகிறது.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes