வெற்றி என்பது மட்டும் உறுதி. ஆனால் அது எப்படி? எங்கே என்பதுதான் சஸ்பென்ஸ்'' என்கிறார் ஒரே வெற்றியின் மூலம் தென்னிந்திய சினிமாவையே கவனிக்க வைத்திருக்கும் இயக்குநர் சமுத்திரக்கனி. பிஸியான தருணங்களுக்கிடையே நம்மிடம் பேசுகிறார்.
"நாடோடிகள்' வெற்றி தந்த மாற்றம் என்ன?
ஒவ்வொரு மனிதனுக்கும் மரணம் என்பது உறுதியானது. ஆனால், அது எப்படி? எங்கே? என்பதில்தான் இருக்கிறது வாழ்க்கையின் மீதான சுவாரஸ்யம். அது போலதான் வெற்றியும். இந்த வெற்றி எப்போதும் போலதான் என்னை வைத்திருக்கிறது. வெற்றியை இன்னும் எனக்குள் கொண்டு வரவில்லை. சினிமாவில் 16 ஆண்டுகள் பட்ட கஷ்டம், காயங்கள் அது தந்த வலிகள் இன்னும் ஆறாமல்தான் இருக்கின்றன. "நாடோடிகள்' வெற்றி அந்தக் காயங்களின் வலிகளுக்குக் கொஞ்சம் களிம்பு தடவிவிட்டிருக்கிறது அவ்வளவுதான். இந்த வெற்றி என் பழைய தோல்விகளைப் பற்றியும் பேச வைத்திருக்கிறது. ஒரு மனிதன் ஜெயிக்கும் போது அவன் தோல்விகள் பேசப்படுவது ஒன்றும் புதிதல்ல. என் தோல்விகள் பேசப்படுவதில் எனக்குக் கொஞ்சம் சந்தோஷம். தோல்விகளுக்காகத் தனியாக அழுத காலங்களை இந்த வெற்றி திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தோல்வியின் மடியில் கலங்கிய இரவுகளுக்குக் காலம் இந்த 60 நாள்களாகத்தான் விடியலைத் தந்திருந்திருக்கிறது.
நாடோடிகள் உருவான விதம் பற்றி?
சினிமாவுக்குள் நுழையும் போதே இரண்டு கதைகளைக் கையில் வைத்திருந்தேன். ஒன்று "உன்னைச் சரணடைந்தேன்', மற்றொன்றுதான் "நாடோடிகள்'. முதலில் எதை படமாக்கலாம் என யோசித்த போது "உன்னை சரணடைந்தேன்' கதைதான் தேர்வானது. "நாடோடிகள்' கதையை 2004-ம் ஆண்டு எழுதினேன். அதில் கொஞ்சம் எங்கள் ஊரில் நடந்த உண்மை சம்பவத்தையும் தடவி விட்டேன்.
உருவம் கிடைத்து விட்டது. இதுவரை 50 பேரிடம் சொல்லியிருப்பேன். யாருமே படமாக்க முன் வரவில்லை. மைக்கேல் ராயப்பன்தான் தயாரிக்க முன் வந்தார். "நாடோடிகள்' படம் சினிமாவில் இன்னும் தெரியாத பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்து இருக்கிறது.
இந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் நாடோடிகளை இயக்கும் முடிவு ஏன்?
சினிமாவைத் தவிர எனக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. அதை இங்கே திருப்தியாக செய்து விட்டேன். மற்றவர்களும் இதை பார்த்துவிட்டு திருப்தி அடைகிறார்களா எனப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. இறங்கிவிட்டேன். "நாடோடிகள்' படத்தில் நல்ல ஒரு கருத்து இருந்தது. எந்தக் கருத்தைச் சொன்னாலும் கமர்ஷியலாக சொன்னால் ஜெயிக்கலாம் என்பதுதான் என் தோல்விகள் தந்த அனுபவம். இப்போதைக்கு தெலுங்கு, கன்னடத்தில் மட்டுமே இயக்குகிறேன். இந்தியில் இயக்கும் திட்டத்தைக் கைவிட்டு விட்டேன். காரணம், ரீமேக்குகளை முடித்து விட்டு நண்பன் சசிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். அதன் பின் நான் இயக்கும் படத்தில் அவர் ஹீரோவாக நடித்து தயாரிக்கிறார். டி.வி. சீரியல்களுக்கும் கதை எழுத சிலர் கேட்டு இருக்கிறார்கள்.
சீரியல்களில் இனி உங்கள் பங்கு?
என்னைப் பொறுத்தவரை சீரியலில் இருந்துதான் நான் சினிமாவைக் கற்று கொண்டேன். சென்னை வந்த என்னை அரவணைத்தது சீரியல்தான். சீரியலும் சினிமாவும் எனக்கு ஒன்றுதான். சீரியல்களில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்காக ஒரு கதையும் வைத்திருக்கிறேன். ஆனால் தயாரிக்கத் தயங்குகிறார்கள். சீரியல்களைச் சுற்றி நாம் போட்ட கோடுகள்தான் அதற்கு காரணம்.
பெரிய பட்ஜெட்டில் கதை ஒன்று வைத்திருப்பதாக செய்திகள் வருகிறதே?
உண்மைதான். ரொம்ப நாளாகவே அந்த கதை என்னிடம் இருக்கிறது. அது ஒரு வரலாற்றுப் படம். வரலாற்றுக் கதையாக இருந்தாலும் கமர்ஷியல் கதையாக இருப்பதுதான் அதன் சிறப்பு. இன்னும் கதையை யாரிடமும் சொல்லவில்லை. விஜய் அல்லது சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும். இதற்காக விரைவில் அவர்களை சந்திப்பேன். இதன் பட்ஜெட் மிகப் பெரியது. ஷூட்டிங் முடிக்கவே சில வருடங்கள் ஆகும்
0 comments :
Post a Comment