மண்ணைப் பொத்துக்கொண்டு வெளியில் வருகிற வீரிய விதையைப் போன்று செயல்பட்டால் வெற்றி நம் விலாசம் தேடி வந்து வீட்டுக் கதவை தட்டும். அப்படி விடாமுயற்சிக்கு இலக்கணமாக திகழ்கிறார்கள் இந்த இரு சகோதரர்கள்.
ராமநாதபுரம் வெளிப்பட்டினம் முத்துராமலிங்க சுவாமி கோயில் தெருவில் வசித்து வரும் வெங்கட்ராமன், சரோஜா தம்பதியரின் மகன் சுந்தர். இவரது தம்பி சங்கர நாராயணன் என்ற சங்கர்.
அண்ணனும், தம்பியும் ஆளுக்கு ஒரு சாதனை செய்து கின்னஸில் இடம் பிடித்துள்ளனர். ராமநாதபுரம் பாரதிநகர் கற்பக விநாயகர் கோயிலில் அர்ச்சகராகப் பணி செய்து வருபவர் சுந்தர். இவர் அவரது வாயில் 0.64 செ.மீ விட்டம் உடைய 398 பெரிய ஸ்டிராக்களை வைத்து கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.
இவரது தம்பி சங்கர் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலை தொடர்பு பிரிவில் 3 வது ஆண்டு படித்து வருகின்றார். ஒரே மூச்சில் 151 மெழுகுவர்த்திகளை வாயால் ஊதி அணைத்து இவரும் கின்னஸில் இடம் பிடித்துள்ளார். இந்தச் சாதனைச் சகோதரர்களை அவர்களது இல்லத்தில் சந்தித்தோம். சுந்தர் விவரித்தார்.
""தம்பி சங்கர் நன்றாகப் படிப்பவன். அவனை பொறியியல் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க பணமில்லை. கின்னஸ் சாதனை ஏதேனும் செய்தால் தம்பியை படிக்க வைக்க பணம் தந்து உதவுவார்கள் என்று நினைத்தேன். இதன் காரணமாக தம்பியை ஒரே மூச்சில் மெழுகுவர்த்திகளை அணைத்து சாதனை செய்ய வைத்தோம்.
இது எனக்குள் ஓர் ஆர்வத்தைத் தூண்டியது. நானும் கின்னஸில் இடம் பிடிக்க முடிவு செய்தேன். கடந்த 2007ல் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒருவர் வாயில் ஒரே நேரத்தில் 264 ஸ்டிராக்களை வைத்து கின்னஸ் சாதனை செய்திருந்ததை இண்டர்நெட்டில் பார்த்தோம். அதைவிட அதிகமான ஸ்டிராக்களை வைத்து சாதிப்போம் என முடிவு செய்தேன். தொடர்ந்து 5 மாதமாகப் பயிற்சி எடுத்தேன். 268 ஸ்டிராக்களை வாயில் திணித்து சிறிது ேரம் வைத்திருக்கப் பழகிவிட்டேன். இச்சாதனையை சில வி.ஐ.பி.க்கள் முன்பாக நிகழ்த்த தேதி குறிக்கப்பட்டிருந்தது. அந்த இடைப்பட்ட நாட்களுக்குள் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சைமன் எல்மோர், 364ஸ்டிராக்களை வாயில் திணித்து கின்னஸில் இடம் பிடித்து விட்டார். இது எனக்கு பேரிடியாக இருந்தது. இருப்பினும் இதையும் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு தினசரி பயிற்சி செய்து அதே நாளில் 398 ஸ்டிராக்களை வைத்துக் காண்பித்தேன். கின்னஸ் சான்றிதழ் வீடு தேடி வந்தது.
தம்பி சாதனை செய்து கின்னஸில் இடம் பிடித்த ஓராண்டுக்குள் மற்றொரு கின்னஸ் சாதனை செய்திருக்கிறோம். அடுத்த ஆண்டு பிளஸ் டூ படிக்கும் எங்கள் தங்கையை கின்னஸில் இடம் பிடிக்க வைக்க முயற்சிகள் செய்து வருகிறோம்'' என்றார்
0 comments :
Post a Comment