தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் வசித்த உண்மையான வீடு எது என்பது குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.
இது குறித்து எழுத்தாளர் லா.சு. ரங்கராஜன் (படம்) தரும் தகவல்:
தென்னாப்பிரிக்காவில் ஜோஹன்னஸ்பர்க் நகரின் பைன் சாலையில் காந்திஜி இரண்டாண்டுகள் (1908-1909) வசித்த வீடு விலைக்கு வருகிறது. அதை இந்திய அரசு சார்பில் இந்திய நிலக்கரி நிறுவனம் விலைக்கு வாங்கி நினைவகம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக, நிலக்கரித்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
காந்திஜியின் கொள்ளுப் பேத்தி உள்பட ஏற்கெனவே பலர் அந்த வீட்டை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர்.
இந்தத் திடீர் மோகம் உண்மை நிலைக்குப் புறம்பானது. அந்த வீட்டின் சொந்தக்காரரான ஹெர்மன் காலன்பெக் என்ற ஜெர்மானியர் ஒரு கட்டடக் கலை நிபுணர். காந்திஜியின் நெருங்கிய நண்பர். அவருடைய விருந்தாளியாகத்தான் அந்த வீட்டில் காந்திஜி சில மாதங்கள் தங்கியிருந்தார்.
ஜோஹன்னஸ்பர்க்கில் காந்திஜி 1905 முதல் 1908 வரை வசித்த வீடு அந்நகரின் டிராய்வில்லி புறநகர்ப் பகுதியில் இருந்தது. அதற்கு முன்பாக டர்பன் நகரில் பீச் குரோவ் வில்லா என்ற பெரிய வீட்டில் காந்திஜி 1897 முதல் 1904 வரை தமது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
அங்கிருந்து 14 மைல் தொலைவில், தான் நிறுவிய ஃபோனிக்ஸ் குடியிருப்புக்கு 1904 டிசம்பரில் காந்திஜி குடும்பத்துடன் இடம் மாறினார். ஆனால் அங்கு அவரால் ஒரு மாதம்தான் தங்க முடிந்தது.
வழக்கறிஞர் பணியைத் தொடரவும், தென்னாப்பிரிக்க இந்தியர்களின் சமூக, அரசியல் உரிமைகளுக்கான போராட்டங்களை நடத்தவும் வசதியாக, அவர் 1905 ஜனவரியில் ஜோஹன்னஸ் நகருக்கு தனியாகச் செல்ல நேர்ந்தது. அங்கு 1903-ம் ஆண்டிலேயே அவர் ஓர் அலுவலகத்தையும், வீட்டையும் ஏற்படுத்தியிருந்தார்.
டிராய்வில்லி புறநகரிலுள்ள அந்த வீட்டிலேதான் அவர் 1905 முதல் 1908 வரை வாழ்ந்து வந்தார். அடிக்கடி ஃபோனிக்ஸ் குடியிருப்புக்கும் போய் வந்தார்.
1908-ம் ஆண்டிலும், 1909 பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலும் காந்திஜி சிறையில் இருந்தார். சிறையில் இருந்து விடுதலை பெற்றதும் 1909 மே மாதம் அவர் டிராய்வில்லி வீட்டைக் காலி செய்து விட்டு, அருகிலிருந்த எச்.எஸ்.எல். போலக் என்ற ஆங்கிலேய நண்பரின் சிறிய வீட்டில், அவருடன் தங்கியிருந்தார்.
ஒரு சில மாதங்களுக்குப் பிறகு பைன் சாலையில் உள்ள காலன்பெக்கின் வீட்டில் ஜெர்மானிய நண்பரின் விருந்தினராகத் தங்கினார்.
1909 ஜூன் மாதம் இங்கிலாந்து சென்ற இரு நபர் தூதுக் குழுவில் சென்ற காந்திஜி, அந்த ஆண்டின் கடைசியில்தான் தென்னாப்பிரிக்கா திரும்பினார். 1910 ஜூன் மாதம் முதல், காலன்பெக்குடன், டால்ஸ்டாய் பண்ணையில் காந்திஜி எளிய வாழ்க்கை மேற்கொண்டார்.
ஆகவே, காந்திஜி ஏழாண்டு காலம் வசித்த டர்பன் நகர் பீச் குரோவ் வில்லா இல்லமும், ஜோஹன்னஸ் நகரில் நான்காண்டு காலம் வசித்த தனி வீடும்தான் காந்தி நினைவகமாக அமைக்கத் தகுந்த வீடுகள் ஆகும் என லா.சு. ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment