இந்தியாவில் 596 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று நோய்க்கான அறிகுறி இருந்ததாகவும், அவர்களில் 470 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருப்பதாகவும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 16 பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருப்பது ஆய்வகப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியில் 3 பேரும், புணேயில் 6 பேரும், மும்பை, சென்னை மற்றும் குர்காவ்னில் தலா 2 பேரும், திருவனந்தபுரத்தில் ஒருவரும் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
புணேயில் திங்கள்கிழமை உயிரிழந்த சிறுமியுடன் இருந்தவர்கள் ஆரோக்கியத்துடன் உள்ளனர். லண்டனில் இருந்து மும்பை வழியாக சென்னை வந்த 5 வயது சிறுமிக்கும், கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த இரண்டரை வயது சிறுமிக்கும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த இருவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தமிழகத்தைப் பொருத்தவரையில் சென்னையில் 29 பேரும், கோவையில் 2 பேரும், மதுரையில் ஒருவரும் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக் காய்ச்சல் நோய் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
உதகை மாணவிகளுக்கு... உதகையில் உள்ள ஒரு பள்ளியில் பயிலும் மாணவிகள் இருவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் தொற்றுக்கான அறிகுறி தென்படுவதால் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடைய ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக தில்லிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தனியார் சிகிச்சைக்கு தடை
பன்றிக் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.
சேலத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பன்றிக் காய்ச்சல் நோய் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே இந்தியாவுக்குள் பரவி வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு தீவிர சோதனை நடத்தப்படுகிறது. இதுவரை சுமார் 7.5 லட்சம் பயணிகளுக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை மையம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் அமைக்கப்படும்.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்குத் தேவையான "டேமிபுளூ' மருந்தும், கவச உடைகளும் போதுமான அளவுக்கு கையிருப்பில் உள்ளன.
தமிழகத்தில் இதுவரை பன்றிக் காய்ச்சல் பரவவில்லை என்றார் அமைச்சர்
0 comments :
Post a Comment