உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கை ஒன்று திடுக்கிடும் புள்ளிவிவரத்தைத் தருகிறது.
2006 - 2007-ம் ஆண்டுகளில் 178 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையிலான அறிக்கையின்படி, சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் மரணமடைவதாகத் தெரிகிறது. படுகாயமடைவோரின் எண்ணிக்கை இரண்டரை கோடிக்கும் அதிகம் என்கிறது அந்த ஆய்வு.
அந்த ஆய்வில் அதைவிட அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், உலகிலேயே மிக அதிகமானோர் சாலை விபத்துகளில் பலியாவது இந்தியாவில்தான் என்பதுதான். 2007-ல் மட்டும் இந்தியாவில் சாலை விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,14,590. அதாவது, ஒவ்வொரு மணி நேரத்திலும் சுமார் 13 பேர் இந்தியாவில் சாலையில் நடக்கும் விபத்துகளில் மரணமடைகிறார்கள். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டின் எண்ணிக்கையைவிட 6.9 சதவிகிதம் அதிகம்.
இந்தியாவைவிட அதிகம் மக்கள்தொகையும், மோட்டார் வாகனங்களும் உள்ள நாடு சீனா. ஆனால், அங்கே 2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி சாலை விபத்தில் மரணமடைந்தவர்கள் 89,455 பேர்தான். அதுமட்டுமல்ல, இந்தியாவில் சாலை மரணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் அதேவேளையில் சீனாவில் இந்த எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து வருகிறார்கள் என்பதுதான் நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
சாலை விபத்துகளில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை புள்ளிவிவரத்தில் குறிப்பிட்டிருப்பதைவிட மிகவும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. பல விபத்துகள் முறையாக வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மரணமடைவது இந்தப் புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படவும் இல்லை.
இந்தியாவைவிட அதிக அளவில் வாகனங்கள் இருந்தாலும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் சாலை விபத்துகள் கணிசமாகக் குறைந்து இருப்பதற்கு முக்கியக் காரணம், அங்கே சாலை விதிகள் மிகவும் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன என்பதும், விபத்துகள் நேராமல் இருப்பதற்கான வழிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து திருத்தங்களை அவ்வப்போது கொண்டு வந்தபடி இருப்பதும்தான். சுவீடன், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மிகக் குறைவாகவே சாலை விபத்துகள் நடைபெறுவதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் மிக அதிகமாகப் பலியாவது லாரி ஓட்டுநர்களும், உதவியாளர்களும்தான். சாலை மரணங்களில் 22 சதவிகிதம் பலியாவது இவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்கிறது அறிக்கை. அதற்கு முக்கியக் காரணம், குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதும், முறையான உரிமம் இல்லாமல் உதவியாளர்கள் லாரியை இயக்குவதும், சரியான வாகனப் பரிசோதனை இல்லாமல் இருப்பதும்தான் என்பதையும் அறிக்கை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.
19 சதவிகிதம் இரண்டு சக்கர வாகனங்களும், 11 சதவிகிதம் பஸ்களும், 9 சதவிகிதம் பாதசாரிகளும் சாலை விபத்துகளில் பலியாவதாகத் தெரிகிறது. இந்தியாவிலேயே மிக அதிகமாக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்கள் என்கிற பெருமையை ஆந்திரப் பிரதேசமும் மகாராஷ்டிரமும் தட்டிச் செல்கின்றன. அடுத்தபடியாக 12.5 சதவிகிதம் சாலை மரணங்களுடன் உத்தரப் பிரதேசமும், 12 சதவிகிதம் சாலை மரணங்களுடன் தமிழ்நாடும் சாலை விபத்துகளில் சாதனையாளர்களாகத் தலைகுனிகின்றன.
நகர்ப்புற சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணங்கள், அரசு போக்குவரத்துக் கழகங்கள்தான் என்று பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டி உள்ளன. மேலும் ஆட்டோக்களும், இரு சக்கர வாகனங்களும் சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணங்கள் என்று குற்றம்சாட்டப்படுகின்றன. ஆனால், நாம் கவனிக்காமல் விட்டுவிடும் விஷயம் என்னவென்றால், சாலை விதிகளை மதிக்காமல் நினைத்த இடத்தில் சாலையைக் கடக்கும் பாதசாரிகளும்கூட சாலை விபத்துகளுக்குக் காரணமானவர்கள் என்பதை.
வளர்ச்சி பெற்ற நாடுகளில் பாதசாரிகள் மற்றும் சைக்கிள்கள் செல்ல அகலமான நடைமேடைகள் நகர்ப்புறங்களில் எல்லாம் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. பிளாட்பாரங்கள் கடைத்தெருவாகி விடும் நிலையில் பாதசாரிகள் சாலையைப் பயன்படுத்தியாக வேண்டிய நிர்பந்தம் இங்கே ஏற்பட்டு விடுகிறது. மேலும், ஆங்காங்கே இடைவெளிவிட்டு பாதசாரிகள் சாலையைக் கடக்கப் போதிய வசதிகள் செய்யப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. பாதசாரிகளின் பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு சாலைகளும், சாலை விதிகளும் வளர்ச்சி பெற்ற நாடுகளில் அமைக்கப்படுவதால்தான் அங்கே விபத்து விகிதம் குறைகிறது என்று தோன்றுகிறது.
சாலைகளைக் கட்டணச் சாலைகளாக்குவதில் அரசு காட்டும் முனைப்பும் அக்கறையும் விபத்துகளைத் தவிர்ப்பதில் காட்டத் தவறுகிறதே, அங்கேதான் பிரச்னையே எழுகிறது. உரிமம் வழங்குவதிலும், வாகனப் பரிசோதனையிலும் லஞ்சம் வாங்க அனுமதித்துவிட்டு, கணக்கு வழக்கில்லாமல் வாகனங்களைச் சாலையில் ஓட விட்டுவிட்டு, பிரமாதமாக சாலைகளை அமைத்துக் கட்டணம் வசூலித்து என்ன பயன்?
0 comments :
Post a Comment