காந்தி கொலை வழக்கு 9
"மகாத்மா காந்தியின் செயல்பாடுகள் இந்துக்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் இருந்தன. எனவே அவரை சுட்டுக்கொன்றேன்" என்று கோட்சே தனது வாக்குமூலத்தில் கூறினான்.
டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், மகாத்மா காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி கோட்சே வாக்குமூலம் கொடுத்தான். வாக்குமூலம், ஆங்கிலத்தில் மொத்தம் 92 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே வாக்குமூலத்தை கோட்சே படித்தான்.வாக்குமூலத்தில் கோட்சே கூறியிருந்ததாவது:-
"தெய்வ பக்தியுள்ள பிராமணக் குடும்பத்தில் நான் பிறந்தேன். இந்துவாகப் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். நான் வளர வளர என் மதத்தின் மீது எனக்கு மிகுந்த பற்றுதல் ஏற்பட்டது. ஆனால் எனக்கு எவ்வித மூட நம்பிக்கையும் ஏற்படவில்லை. தீண்டாமை ஒழியவும், சாதி ஒழியவும் பாடுபட்டேன். எல்லா இந்துக்களையும் சமமாக நடத்த வேண்டும், அவர்களுக்கு இடையே உயர்வு, தாழ்வு கற்பிக்கக் கூடாது என்று வற்புறுத்தி வந்துள்ளேன். சுவாமி விவேகானந்தர், திலகர், கோகலே, தாதாபாய் நவ்ரோஜி போன்றோர் எழுதிய நூல்களை படித்திருக்கிறேன்.
இந்தியாவின் வரலாற்றைப் படித்திருக்கிறேன். இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளின் வரலாறுகளையும் படித்திருக்கிறேன். மகாத்மா காந்தி எழுதிய நூல்களையும், வீரசவர்க்கார் எழுதிய நூல்களையும் ஆழமாகப் படித்திருக்கிறேன். அவர்கள் பேச்சையும் நான் கேட்டிருக்கிறேன். என்னுடைய எண்ணமும், செயலும் இயங்க அவை எனக்கு உறுதுணையாக இருந்தன. இவைகளைப் படித்ததால் இந்து மதத்தில் நம்பிக்கையும், அழுத்தமான பிடிப்பும் ஏற்பட்டன. இந்து சமயத்திற்கும், இந்துக்களுக்கும் தொண்டு செய்வதே முதல் கடமை என்று எண்ணினேன். முப்பது கோடி இந்துக்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். மனித இனத்தின் ஐந்தில் ஒரு பங்கு இந்துக்களின் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கடமை உணர்வு ஏற்பட்டது.
1946_ல் முகமதியர்களின் கொடுமை சொல்லொணாத துயரத்தைத் தந்தது. அரசாங்கத்தின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது. நவகாளியில் நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் ரத்தத்தைக் கொதிப்படையச் செய்தன. அத்தகைய கொடுமைகள் புரிந்த முஸ்லிம்களை மகாத்மா காந்தி ஆதரித்தார். அதுமட்டுமல்ல டெல்லியில் ஒரு இந்துக் கோவிலில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் "குர்ஆன்" வாசகங்களைப் படிக்கச் செய்தார்.
முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதியில் பகவத் கீதையை மகாத்மா காந்தியால் படிக்க முடியுமா? 1947_ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15_ந்தேதி விளக்குகள் அலங்காரத்துடன் நாடெங்கும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட அதே நாளில் பஞ்சாபில் இந்துக்கள் உடைமைகளை முஸ்லிம்கள் தீக்கு இரையாக்கினார்கள். இந்துக்களின் ரத்தம், பஞ்சாப் ஆற்று நீரில் கலந்தோடியது.
மேற்கு பாகிஸ்தானில் இருந்த சிறுபான்மை இந்துக்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். அதேபோல கிழக்குப் பாகிஸ்தானில் இருந்த முகமதியர்களும் நடந்து கொண்டனர். 11 கோடி மக்கள் வீடு இழந்தனர். இவ்வளவு நடந்தும் மகாத்மா காந்தி, "முகமதியர்களின் செயலில் ஒரு களங்கமுமில்லை" என்று பரிந்து பேசினார். என் ரத்தம் கொதித்தது. இனிமேல் நான் பொறுமையாக இருக்க முடியாத சூழ்நிலை உருவானது.
காந்தியடிகளை கடுமையான வார்த்தைகளால் நான் தாக்க விரும்பவில்லை. அவருடைய கொள்கையும், மார்க்கத்தையும் முழுவதாக நிராகரிப்பதாகச் சொல்ல விரும்பவில்லை. பிரிட்டிஷ்காரர்கள், நம்மிடையே பிரிவினையை உண்டாக்கி, சுகமாக நம் நாட்டை ஆண்டு வந்தபோது, மகாத்மா காந்தி அதை எதிர்த்துப் போராடி பெரும் வெற்றியை நமக்குத் தந்தவர் என்பதை நான் மறுக்கவில்லை; அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். ஆனால் இந்தியா பிரிக்கப்படுவதற்குக் காரணமாகவும், துணையாகவும் இருந்தவர் அவர். அதனால் அவர் இன்னும் நாட்டில் இருந்தால், இந்தியாவிற்குத் துன்பமும், இழப்பும் ஏற்படும். முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கும், அட்டூழியத்திற்கும் பக்கபலமாக இருப்பார் என்பதை உணர்ந்து கொண்டேன்.
நல்லதோ, கெட்டதோ அவர் எடுக்கும் முடிவினையே இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிடிவாதம் அவரிடம் காணப்பட்டது. இந்தியா அவருடைய தலைமையை நாடினால் அது நம் நாட்டை எங்கேயோ கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். அவரே இங்கு உள்ள எல்லாவற்றையும் இயக்குபவர்; ஒரு நீதிபதி என்றும் கூறலாம். "சத்தியாக்கிரகம்" என்றும் அழியாது என்பது அவர் அறிந்த சூத்திரம். காந்திஜியே தன் செயல்களுக்குத் தாமே வழக்கறிஞரும், நீதிபதியும் எனலாம். அவரது அரசியல், பகுத்தறிவு இல்லாதது எனப் பெரும்பாலானோர் நினைத்தனர்.
அவர்கள் காங்கிரசில் இருந்து வெளியேற வேண்டும்; அல்லது அவர்களது அறிவுடைமயைக் காந்தியடிகளின் காலடியில் சமர்ப்பித்துவிட்டு சரண் அடைய வேண்டும்; பிறகு அவர் விரும்பியபடி செயல்புரிய விடவேண்டும். அவர் கண்டதோ, தோல்வி மேல் தோல்வி; அழிவு மேல் அழிவு. 33 வருடம் அரசியல் வாழ்வில் அவருடைய அரசியல் வெற்றி என்று எதையும் கூறமுடியாது. காந்தி வழி நடந்தால் நாம் அழிவைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். கைராட்டை, அகிம்சை, உண்மை எனக் கூறிக்கொண்டு புரட்சிகரமான கருத்துக்கும் எதிராக இருப்பார். 34 வருடம் கழிந்த பிறகு கை ராட்டையைத்தான் அவர் தந்தார். இவ்வாறு கோட்சே கூறினான்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment