தமிழ் விக்கிபீடியா

கலைக்களஞ்சியம் என்பது எழுத்துவடிவிலான அறிவுத்தொகுப்பு என்பர். ஒவ்வொரு மொழியிலும் கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக் கலைக்களஞ்சியங்கள் அம்மொழியின் அறிவுச் செழுமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அமைகிறது.

ஒரு மொழியில் உள்ள சொல்லுக்குப் பொருள் தருவது அகராதி ஆகும். அகராதியில் சொல்லுக்கு உரிய பொருள், சிறு விளக்கமாக இருக்குமே தவிர ஒரு சொல்லின் அனைத்து விவரங்களையும் பெற இயலாது. ஆனால் கலைக்களஞ்சியங்களில் அனைத்து விவரங்களையும் பெற்றுவிடலாம். அகராதிகளும், கலைக்களஞ்சியங்களும் அகர வரிசையில் சொற்களுக்கு விளக்கம் தருகின்றன.

அச்சு வடிவில் அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கிய நிலையிலிருந்து வளர்ந்து இன்று மின்னணு ஊடகங்களின் வழியாக அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பயன்பாட்டுக்கும் வந்துவிட்டன. ஒவ்வொரு கணிப்பொறி நிறுவனமும் இணைய தளங்களும் தங்கள் மென்பொருளில் அகராதியைப் பார்வையிடும் வசதியை வைத்துள்ளன. அதுபோல் இணையத்தில் கலைக்களஞ்சியங்களைப் பார்வையிடும் வசதியையும் வைத்துள்ளன. இணையத்தில் அனைவரும் பயன்படுத்தும் தமிழ்க் கலைக்களஞ்சியமாக விக்கிபீடியா (ரண்ந்ண்ல்ங்க்ண்ஹ) என்ற கலைக்களஞ்சியம் உள்ளது.

விக்கி (ரண்ந்ண்) என்னும் அவாய்மொழிச் சொல்லுக்கு ""விரைவு'' என்னும் பொருள் உண்டு. விரைவாகத் தகவல்களைத் தொகுப்பது என்ற அடிப்படையில் விக்கி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. விக்கி (ரண்ந்ண்)+ என்சைக்கிளோபீடியா (உய்ஸ்ரீஹ்ப்ர்ல்ங்க்ண்ஹ) என்னும் இரு சொற்கள் இணைந்து விக்கிபீடியா (ரண்ந்ண்ல்ங்க்ண்ஹ) என்ற சொல் உருவானது.

விக்கிபீடியா கலைக்களஞ்சியத் திட்டத்தை விக்கிமீடியா பவுண்டேசன் என்னும் நிறுவனம் தொடங்கியது. 2001-ம் ஆண்டு ஜனவரியில் ஆங்கில மொழியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் பல மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. விக்கிபீடியா தொழில்நுட்பம் உலகப்போக்கு உணர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று உலக அளவில் 267 மொழிகளில் விக்கிபீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தருகிறது. இதில் ஆங்கில மொழி 28,97,231 கட்டுரைகள் தாங்கி முதல் இடத்தில் உள்ளது. தமிழ்மொழி 18,226 கட்டுரைகள் கொண்டு உலக அளவில் 68-வது இடத்தில் உள்ளது.

அமெரிக்க இணையத்தொழில் வல்லவரான ஜிம்மி வேல்ஸ் என்பவரும் அமெரிக்க மெய்யியலாளர் லாரிசங்கரும் இணைந்து இந்தக் களஞ்சியப் பணியைத் தொடங்கினர். ஜிம்மி வேல்ஸ் முன்பு நூப்பிடியா என்ற களஞ்சியம் நடத்தியவர். அந்தக் களஞ்சியத்தில் வரையறை உண்டு. முழுக்கட்டுப்பாடும் அவரிடம் இருந்தது. பின்னாளில் உருவாக்கிய விக்கிபீடியா கட்டற்ற தளமாகத் திறந்துவிடப்பட்டது. அனைவரும் பங்கேற்கும் கூட்டு முயற்சித் தளமாக இது உலகுக்கு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு மொழியினரும் தங்கள் மொழியில் உள்ள அறிவுத்துறைச் செய்திகளை எழுதி விக்கி கலைக்களஞ்சியத்தில் இணைக்கலாம். இதற்குக் காலம் எல்லை கிடையாது. அறிவு வேறுபாடும், துறை சார்ந்த பேரறிவும் இருக்க வேண்டிய தேவை இல்லை. நமக்குத் தெரிந்த செய்திகளை எழுதி நாமே விக்கி கலைக்களஞ்சியத்தில் இணைக்கலாம். பிறர் எழுதிய கட்டுரைகளில் விளக்கம் குறைவாக இருந்தால் நாம் புதிய, விரிந்த விளக்கங்களைத் தரலாம். படங்களை, வரைபடங்களை, புள்ளிவிவரங்களை இணைக்கலாம்.

2003 நவம்பர் மாதம் முதல் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மயூரநாதன் ஒன்றரை ஆண்டுகள் தன்னந்தனியாக உழைத்துப் பல கட்டுரைகளை உருவாக்கி விக்கியின் தமிழ்ச்சேவையை வளப்படுத்தினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டடவியல் கலைஞராகப் பணிபுரியும் இவர் தமக்கு அமையும் ஓய்வு நேரங்களைப் பயன்படுத்திப் பல துறை சார்ந்த கட்டுரைகளை உருவாக்கித் தமிழ் விக்கிப் பகுதிக்குப் பங்களிப்பு செய்தார். இதுவரை 2760 கட்டுரைகள் வரைந்துள்ளார்.

தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்கு அயலகத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள்தான் மிகுதியான கட்டுரைகளை வழங்கியுள்ளனர். தமிழ் விக்கிபீடியாவில் 9000 பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். ஆனால் அனைவரும் தமிழ் விக்கி வளர்ச்சிக்கு எழுதுவதில்லை. குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்பவர்களாக ஐம்பது பேர் தேறுவர். இதிலும் தீவிரமாக எழுதுபவர்கள் சற்றொப்ப இருபத்தைந்து பேர் இருப்பர்.

விக்கிபீடியாவில் அனைவரும் பங்களிப்பு செய்தால் அனைத்துச் செய்திகளும் ஓரிடத்தில் கிடைக்கிறது என்ற நிலை உருவாகும். எனவே பங்களிப்போரும் பயன்படுத்துவோரும் அதிகமாவர். எனவே துறைசார்ந்த செய்திகள் என்றில்லாமல் ஊர் பற்றியும், உறவு பற்றியும், பண்பாடு, பழக்கவழக்கம், தெய்வ வழிபாடு, விளையாட்டுகள், நம்பிக்கைகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், சடங்குகள், மனக்கணக்குகள் என எதனை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்.

தமிழ் வளர்ச்சிக்கு உதவும் விக்கியைத் தமிழர்கள் அனைவரும் அறிய வேண்டும் என்ற நோக்கில் இன்று தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் விக்கிபீடியா பயிலரங்கம் நடைபெறுகிறது.

தொழில் நுட்பம் அறிந்தவர்கள் விக்கியின் பல்வேறு பயன்களை விளக்கி விக்கியில் கட்டுரைகள் உள்ளிடும் முறையைப் பயற்றுவிக்கின்றனர். படங்கள், விவரங்கள், இணைப்புகள் உள்ளிட்டவற்றை இணைக்கும் முறையையும் ஆர்வமுள்ளவர்களுக்கு விளக்கி வருகின்றனர்.

கலைக்களஞ்சியங்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றால் பல்லாயிரம் செலவாகும். பாதுகாக்க இடவசதி வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இந்த அறிவுக்கருவூலத்தை அனைவரும் பயன்படுத்துவோம். பலதுறை அறிவு பெறுவோம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes