மும்பை பங்குச் சந்தையில் கடந்த ஓராண்டில் எட்டப்படாத அளவுக்கு குறியீட்டெண் உயர்ந்தது. வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை 282 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டெண் 15,670 புள்ளிகளாக உயர்ந்தது.
இதற்கு முன்னால் 2008-ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி பங்குச் சந்தை குறியீட்டெண் 15,672 புள்ளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான நிறுவனங்கள் முதல் காலாண்டில் லாபம் ஈட்டியதால் அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து புள்ளிகள் உயர்வுக்குக் காரணமாக அமைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் 65 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 4,636 புள்ளியைத் தொட்டது. கடைசி அரை மணி நேர வர்த்தகம் தேசிய பங்குச் சந்தையில் புள்ளிகள் உயர வழிவகுத்தது.
நிறுவனங்களின் காலாண்டு லாபம் மற்றும் சர்வதேச அளவில் பொருளாதார மீட்சிக்கான அறிகுறி ஆகியன முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது என்று பங்குத் தரகர்கள் குறிப்பிட்டனர்.
எண்ணெய் நிறுவனங்கள், அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் தயாரிப்பு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன.
ரிலையன்ஸ் நிறுவனப் பங்கு விலை 3.01 சதவீதம் அதிகரித்து ரூ. 1,957.10-க்கு விற்பனையானது. இதேபோல ஓஎன்ஜிசி பங்குகள் 5.91 சதவீதம் உயர்ந்து ரூ. 1,164.50-க்கு விற்பனையானது.
உலோக நிறுவனங்களின் பங்குகளும் கணிசமான உயர்வைச் சந்தித்தன. ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு 2.91 சதவீதம் அதிகரித்து ரூ. 644.95-க்கும், ஹிண்டால்கோ பங்கு 6.65 சதவீதம் அதிகரித்து ரூ. 100.20-க்கும் விற்பனையானது. டாடா ஸ்டீல் பங்கு விலை 2.12 சதவீதம் அதிகரித்து ரூ. 462.70-க்கும், சீஸô கோவா நிறுவனப் பங்கு 3.82 சதவீதம் அதிகரித்து ரூ. 241.75-க்கும் விற்பனையானது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் நிறுவனப் பங்கு விலை 2.66 சதவீதம் அதிகரித்து ரூ. 2,063.90-க்கும், விப்ரோ பங்குகள் ரூ. 49.65-க்கும் விற்பனையானது.
இருப்பினும் இந்த வளர்ச்சியை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள கட்டுமான நிறுவனங்கள் தவறிவிட்டன. கட்டுமான நிறுவனங்களின் பங்கு விலை 1.36 சதவீதம் சரிவைச் சந்தித்தது.
பார்தி ஏர்டெல் நிறுவனம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஹீரோ ஹோண்டா, டிஎல்எஃப் மற்றும் என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகளும் சரிந்தன.
மொத்தம் 1,401 நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன. 1,299 நிறுவனப் பங்கு விலைகள் வீழ்ச்சியைச் சந்தித்தன
0 comments :
Post a Comment