பன்றிக் காய்ச்சல் டாக்டர்களுக்கும் பரவியது
இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. குறிப்பாக மராட்டிய மாநிலம் புனே நகரில் பன்றிக் காய்ச்சல் பரவுவது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது.
புனே பள்ளி மாணவி ரீடா கடந்த திங்கட்கிழமை பன்றிக்காய்ச்சலுக்கு பலியான பிறகே, அந்த நோயின் கொடூரத்தை இந்தியர்கள் உணரத்தொடங்கி உள்ளனர். காற்று மூலம் மிக, மிக, எளிதாக பரவி விடும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த நாடெங்கும் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் தாக்கியவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் முதல் கட்ட சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி விட்டனர். சுமார் 100 பேர் அரசு மருத்துவமனைகளில் தனி, தனி அறைகளில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், தினமும் நிறைய பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் வருவது பெரும் தலை வலியாக மாறி உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியா முழுக்க 94 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் தீவிர மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களில் 40 பேர் புனேவைச் சேர்ந்தவர்கள். 16 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக மராட்டியத்தில் மட்டும் பன்றி காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கை 204 ஆக உயர்ந்துள்ளது.
பன்றிக் காய்ச்சலின் தலை நகரம் என்று வர்ணிக்கப்படும் புனே நகரில் பன்றிக் காய்ச்சல் பீதி இன்னமும் குறையவில்லை. பன்றி காய்ச்சல் நோயாளிகளில் 35 வயது மருந்தாளுனர், ஒரு டாக்டர், 6 வயது சிறுமி மூவரும் அபாயக்கட்டத்தில் உள்ளனர். இந்த 3 பேரில் 2 பேர் செயற்கை சுவாச நிலையில் உள்ளனர்.
அவர்கள் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அவர்களைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். புனேயில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவிக்கொண்டிருப்பதால், அந்த நகருக்கு செல்வதைத் தவிர்க்குமாறு மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இதற்கிடையே டாக்டர்களுக்கும் பன்றிக்காய்ச்சல் பரவியபடி உள்ளது. புனேயில் ஏற்கனவே ஒரு டாக்டர் உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கும் நிலையில் டெல்லியில் 3 டாக்டர்களை பன்றிக்காய்ச்சல் பாதித்துள்ளது. அவர்கள் தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பன்றி காய்ச்சல் நோயாளிகளின் முகம் அருகில் சென்று சோதித்து சிகிச்சை அளித்ததால் டாக்டர்களும் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மருத்துவப் பணியாளர்கள் உஷாராக இருக்கும்படி மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் தற்போது அரசு மருத்துவ மனைகளில் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவ மனைகளிலும் இத்தகைய வசதி ஏற்படுத்த மத்திய சுகாதார துறை ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பை மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத் விரைவில் வெளியிடுவார் என்று தெரிகிறது.
விமானத்தில் பயணம் செய்பவர்கள் முக கவசம் அணிந்து செல்வது நல்லது என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடைய தேவை இல்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment