நாட்டின் பணவீக்க விகிதம் ஜூலை 25-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் மைனஸ் 1.58 சதவீதமாக இருந்தது. இது முந்தைய வாரம் மைனஸ் 1.54 சதவீதமாக இருந்தது.
அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை விலைக்கும், பணவீக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது கடந்த ஆண்டிலிருந்து நிரூபாணமாகி வருகிறது. பணவீக்கம் 13 சதவீதத்தை தொட்டதே விலைவாசி உயர்வுக்குக் காரணம் என அரசியல்வாதிகள் குறிப்பிட்டனர். ஆனால் தற்போது பணவீக்கம் மைனஸ் நிலைக்குக் கீழ் சரிந்தபோதிலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது அனைத்து பொருள்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
காய்கறிகள், பழங்கள், மீன், பருப்பு, கடலை எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றின் விலை உயர்ந்து காணப்பட்டது.
முட்டை, சோயாபீன்ஸ், கடலைப் பிண்ணாக்கு, இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை சிறிதளவு குறைந்து காணப்பட்டது. இலகு ரக இயந்திர எண்ணெய் மற்றும் மசகு எண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
பொருளாதார கொள்கை வகுக்கும் நிபுணர்களுக்கு தற்போது எந்த அடிப்படையில் பணவீக்கத்தை நிர்ணயிப்பது என்பது பிரச்னையாக உள்ளது. ஏனெனில் ஒருபுறம் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. மற்றொருபுறம் பணவீக்கம் மைனஸ் நிலைக்கும் கீழாக சரிந்து வருகிறது. இதை எவ்விதம் ஈடுகட்டுவது என்பது மிகப் பெரிய சவலாக உள்ளது என்று சர்வதேச பொருளாதார மைய இயக்குநர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற நிலை நீடிக்கும்பட்சத்தில் பணவீக்கம் மைனஸ் நிலையிலிருந்து மீண்டு உயர்ந்தாலும், அதன் பலனாக விலைவாசி குறைய வாய்ப்பே இல்லை என்று அவர் மேலும் கூறினார். அத்தியாவசிய பொருள்களின் விலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு எத்தகைய நடவடிக்கையையும் ரிசர்வ் வங்கி எடுத்தால் மட்டுமே எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த ஆண்டு இதே காலத்தில் நாட்டின் பணவீக்க விகிதம் 12.53 சதவீதமாக இருந்தது
0 comments :
Post a Comment