சென்னையில் அதிரடி சோதனை
தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மருத்துவ சிகிச்சைப் பெற தமிழ்நாடு முழுவதும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள் (இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள்) உள்ளன.
இதன் தலைமை அலுவலகம் சென்னை அயனாவரத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் 42 இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் உள்ளன.
இ.எஸ்.ஐ. இயக்குனராக டாக்டர் எழிலரசி உள்ளார். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்த இவர் முன்பு சுகாதார இணை இயக்குனராக இருந்தார். அதன் பிறகு பதவி உயர்வு பெற்று இ.எஸ்.ஐ. இயக்குனராக பணியாற்றி வந்தார்.
இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வாங்கி அனுப்பும் பொறுப்பு இவரது கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த மருந்து, மாத்திரைகள் இந்தியாவில் உள்ள பெரிய பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படும். இயக்குனர் எழிலரசி எந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு கை காட்டுகிறாரோ, அங்கிருந்துதான் மருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
மத்திய அரசு இதற்கான பணத்தை வழங்குகிறது. மருந்து விலையை உயர்த்தி விற்கலாம் என்பதால் இ.எஸ்.ஐ.க்கு மருந்து சப்ளை செய்ய நிறுவனங்களிடம் கடும்போட்டி நிலவுவதுண்டு.
கடந்த சில மாதங்களாக சில மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இ.எஸ்.ஐ. இயக்குனர் டாக்டர் எழிலரசி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். நல்ல தரமான மருந்து, மாத்திரை சப்ளை செய்வார்களா என்பதை கண்காணித்து நியாயமான முடிவு எடுக்க வேண்டிய அவர் கமிஷன் பணத்துக்கு ஆசைப்பட்டு சில மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டார்.
லட்சக்கணக்கில் கமிஷன் பணம் வாங்கிக் கொண்டு சில குறிப்பிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டும் அவர் ஆர்டர் கொடுத்ததாக தெரிகிறது. சில மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் அவர் வலுக்கட்டாயமாக லட்சக்கணக்கில் கமிஷன் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
கமிஷன் தராத நிறுவனங்கள், நல்ல மருந்து தயாரிப்பு நிறுவனங்களாக இருந்தாலும் டாக்டர் எழிலரசி, அந்த நிறுவனங்களை கண்டு கொள்வது இல்லை.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மாதந்தோறும் லட்சக்கணக்கில் கமிஷன் பணம் வாங்கி வந்த டாக்டர் எழிலரசி கோடிக்கணக்கில் லஞ்சப்பணத்தை வாங்கிக் குவித்து விட்டதாக மருத்துவ வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள். இந்த தகவல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் எட்டியது.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் துக்கையாண்டி உத்தரவின் பேரில் சூப்பிரண்டு லட்சுமி மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் இதற்கென தனிப்போலீஸ் படை உருவாக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் இயக்குனர் எழிலரசியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக பல நாட்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளுக்கு புதிய மருந்துகள் வாங்க 9 மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு டாக்டர் எழிலரசி அனுமதி கொடுத்தார். அந்த 9 நிறுவனங்களும் தலா ரூ. 1 லட்சம் வீதம் டாக்டர் எழிலரசிக்கு கமிஷன் பணம் கொடுக்க சம்மதித்திருந்தன. நேற்றிரவு மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கன்பாக்ஷா (டக்கார் பார்மசிஸ்ட்), சீனிவாசன் (டேப்லட் இண்டியா), புருஷோத்தமன் (அரவிந்த் பார்மசிஸ்ட்), சுரேஷ்பாபு மற்றும் ஆராவமுதன் (நியூ ஜெனரேசன் பார்மசிஸ்ட்) ஆகிய 5 பேர் கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவ அலுவலர்களின் குடியிருப்பில் உள்ள இயக்குனர் டாக்டர் எழிலரசி வீட்டுக்கு வந்தனர்.
ரூ. 8 லட்சத்து 53 ஆயிரம் கமிஷன் பணத்தை எடுத்து கொடுத்தனர். அப்போது குடியிருப்பில் பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று இயக்குனர் எழிலரசியை சுற்றி வளைத்தனர். விசாரணையில் மருந்து தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகள் லஞ்ச பணம் கொடுத்ததை ஒத்துக் கொண்டனர்.
இதையடுத்து உடனடியாக இ.எஸ்.ஐ. இயக்குனர் டாக்டர் எழிலரசியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
லஞ்சம் கொடுத்த மருந்து தயாரிப்பு நிறுவன பிரநிதிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இயக்குனர் எழிலரசி எந்தெந்த நிறுவனத்திடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினார் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அயனாவரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இங்கு 310 வார்டுகள் உள்ளன. ஆயிரம் படுக்கை வசதி இருக்கிறது.
இந்த மருத்துவமனையில் தொழிலாளர்கள் எல்லாவித நோய்க்கும் சிகிச்சை பெறலாம். அதற்கான எல்லா வசதிகளும் உள்ளன.
ஆனால் டாக்டர்கள் இங்கு காலை 9 மணிக்கு வந்து 11 மணிக்கு போய் விடுவார்களாம். இதன் காரணமாக அயனாவரம் இ.எஸ்.ஐ.க்கு வரும் தொழிலாளர்கள் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்துவிட்டது.
சென்னையில் டாக்டர் எழில் அரசி வீட்டில் சோதனை நடந்த அதே நேரத்தில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் போலீஸ் நிலையம் அருகே உள்ள டாக்டர் எழில் அரசியின் சொந்தவீட்டிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். திருச்சி லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு அம்பிகாபதி தலைமையிலான போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இரவு 12 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரை சோதனை நடந்தது. ஆனால் அந்த வீட்டில் பணம் எதுவும் சிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment