காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் மொரார்ஜி தேசாய்
இந்தியா சுதந்திரம் அடைந்த 1947_ல் இருந்து 30 ஆண்டுகள் டெல்லியில் ஆட்சி செலுத்தி வந்த காங்கிரஸ், ஆட்சியை விட்டு இறங்கியது. வரலாற்றில் முதல் முறையாக, காங்கிரஸ் அல்லாத பிரதமராக, மொரார்ஜி தேசாய் 1977 மார்ச் 24_ந்தேதி பதவி ஏற்றார்.
1964_ல், நேரு மரணம் அடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் ஆவதற்கு மொரார்ஜி தேசாய் விரும்பினார். ஆனால் அவர் ஆசை நிறைவேறவில்லை. லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். பின்னர், 1966 ஜனவரி மாதம் லால்பகதூர் சாஸ்திரி திடீர் என்று காலமானதால், பிரதமர் தேர்தல் நடந்தது.
அதில், இந்திராவை எதிர்த்து போட்டியிட்டு, தேசாய் தோல்வி அடைந்தார். 14 ஆண்டுகளாக தேசாய் கண்டு வந்த "பிரதமர் பதவி கனவு" 1977_ல் பலித்தது.
மார்ச் 24 ந்தேதி மாலை மொரார்ஜி தேசாய் பிரதமராக பதவி ஏற்றார். மற்ற மந்திரிகள் 26_ந்தேதி பதவி ஏற்றனர். அன்று பதவி ஏற்ற 14 மந்திரிகளின் பெயர்களும் இலாகா விவரமும் வருமாறு:-
1. சரண்சிங் - உள்நாட்டு இலாகா
2. வாஜ்பாய் - வெளிநாடு
3. எச்.எம்.படேல் - நிதி, ரெயில்வே, பாங்கிகள்
4. பாதல் - தபால் தந்தி
5. சாந்திபூஷண் - சட்டம், நீதித் துறை, கம்பெனிகள் விவகாரம்.
6. எல்.கே.அத்வானி - ரேடியோ, தகவல் இலாகா
7. பட்நாயக் - இரும்பு, சுரங்கம்
8. மதுதண்டவதே - ரெயில்வே
9. பி.சி.சுந்தர் - கல்வி, சமுதாயம், சுகாதாரம்
10. மோகன்தாரியா - வர்த்தகம், உணவு, கூட்டுறவு.
11. புருசோத்தம் கவுசிக் - சுற்றுலா, விமான போக்குவரத்து
12. சிக்கந்தர் பக்த் - வீட்டு வசதி, பொதுப்பணி வினியோகம், அகதிகள் மறுவாழ்வு
13. பா.ராமச்சந்திரன் - மின்சாரம்
14. ரவீந்திரவர்மா - பாராளுமன்ற விவகாரம், தொழிலாளர் விவகாரம் (இது தவிர மற்ற எல்லா இலாகாக்களையும் பிரதமர் மொரார்ஜி தேசாய் தன் வசம் வைத்துக்கொண்டார்)
ஜெக ஜீவன்ராம் ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற ஜனநாய காங்கிரஸ் தலைவர் ஜெகஜீவன்ராம் மற்றும் ராஜ்நாராயணன், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரை மந்திரிசபையில் சேர்த்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து 28 ந்தேதி ஜெகஜீவன்ராம் உள்பட 5 மந்திரிகள் பதவி ஏற்றார்கள். அவர்களது இலாகா விவரம்:-
1. ஜெகஜீவன்ராம் - ராணுவம்
2. பகுகுணா - ரசாயனம், உரம்
3. ஜார்ஜ் பெர்னாண்டஸ் - தபால் தந்தி
4. ராஜ்நாராயணன் - சுகாதாரம், கருத்தடை
5. பிரிஜ்லால் வர்மா - தொழில் பாதலிடம் இருந்த தபால் _ தந்தி பெர்னாண்டசுக்கு ஒதுக்கப் பட்டதால், பாதலுக்கு விவசாயம் _ நீர்ப்பாசனம் இலாகா கொடுக்கப்பட்டது. இந்திரா வாழ்த்து மார்ச் 25_ந்தேதி பாராளுமன்றம் கூடியது. புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றார்கள். அன்று பிரதமர் மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தியை சந்தித்து பேசினார்.
தேசாய்க்கு இந்திரா காந்தி வாழ்த்து தெரிவித்தார். ஜனதா கட்சியை உருவாக்கிய ஜெயப்பிரகாஷ் நாராயணன், "என் கடமை முடிந்துவிட்டது" என்று அறிக்கை வெளியிட்டார். அடுத்த நாளே அவர் உடல் நலம் மிகவும் மோசமானதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய சிறுநீரகம் பழுதடைந்துவிட்டதால், ரத்தத்தை சுத்திகரிக்க "டயாலிஸ்" சிகிச்சை அளிக்கப்பட்டது.
அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த சஞ்சய் காந்தி அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:_ "அரசியலில் தொடர்ந்து நான் இருக்க விரும்பவில்லை. வேறு வழிகளிலும் சமுதாயத்துக்கு பாடுபட வழி உண்டு. எனவே அரசியலை விட்டு ஒதுங்கி விடுகிறேன்.
அரசியலில் இனி ஈடுபடமாட்டேன். அமேதி தொகுதி மக்கள் தங்களுக்கு உரிய வரை தேர்ந்தெடுத்து விட்டார்கள். தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மனதார ஏற்கிறேன். இவ்வாறு சஞ்சய் காந்தி அறிவித்தார்.
1960 செப்டம்பர் மாதம் இந்திரா காந்தி கேரளா சென்றிருந்தார். திருவனந்தபுரத்தில் நடை பெற்ற காங்கிரஸ் பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். 7_ந்தேதி இரவு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் அவர் இறங்கியதும், ஒரு அதிர்ச்சியான தகவல் அவருக்குக் காத்திருந்தது.
கணவர் பெரோஸ் காந்திக்கு மாரடைப்பு ஏற்பட்டு வெலிங்டன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதே அந்தத் தகவல். பெரோஸ் காந்திக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. இது இரண்டாவது முறை. விமான நிலையத்திலிருந்து நேராக ஆஸ்பத்திரிக்கு விரைந்தார், இந்திரா.
அங்கு இந்திரா காந்தியின் உதவியாளர் உஷா பகத் உள்பட பலர் இருந்தனர். பெரோஸ் காந்திக்கு விட்டு விட்டு உணர்வு திரும்புவதாகவும், அப்போதெல்லாம் "இந்து எங்கே?" என்று அவர் கேட்பதாகவும் உஷா கூறினார். இதைக்கேட்டு இந்திரா கண் கலங்கினார். அன்று பகலில், நெஞ்சு வலிப்பதாக தன்னுடைய நண்பரான டாக்டர் கோசலாவுக்கு பெரோஸ் டெலிபோன் செய்திருக்கிறார். உடனே ஆஸ்பத்திரிக்கு வருமாறு அவர் கூறியிருக்கிறார். பெரோஸ் வந்ததும், டாக்டர் கோசலா மருத்துவ பரிசோதனை தொடங்கியுள்ளார்.
பரிசோதனை நடந்து கொண்டு இருக்கும்போதே, பெரோஸ் உணர்வு இழந்துவிட்டார். அன்றிரவு இந்திரா தூங்கவில்லை. கணவர் படுக்கை அருகிலேயே இருந்தார். விடியற்காலை 4.30 மணிக்கு பெரோஸ் காந்தி கண் விழித்துப் பார்த்தார். கண்களில் கண்ணீருடன் வாடிய முகத்துடன் இந்திரா சோகத்துடன் அமர்ந்திருப்பதைக் கண்டார்.
"இந்து! கவலைப்படாதே, போய் ஏதாவது சாப்பிடு" என்று கூறினார். ஆனால் இந்திரா சாப்பிட மறுத்துவிட்டார். பெரோஸ் காந்தி மீண்டும் நினைவு இழந்தார். இந்திரா துயரத்துடன் கணவர் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். காலை 7.45 மணிக்கு நினைவு திரும்பாமலேயே பெரோஸ் காந்தியின் உயிர் பிரிந்தது. 48_வது பிறந்த நாளுக்கு நான்கு நாள் இருக்கும்போது பெரோஸ் மரணம் அடைந்தார்
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment