தவறான பாதையில் தவறான சிந்தனை.

கல்வித்துறையின் சீர்திருத்தம் பற்றிய அறிவிப்புகளில் முக்கியமான ஒன்று பள்ளிகளின் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் திட்டம். இது சரியான ஒரு நடவடிக்கையா எனும் விவாதம் பல கல்வித்துறை அறிஞர்கள் மத்தியிலும் ஆசிரியர், பெற்றோர் மத்தியிலும் உருவாகியுள்ளது.

பொதுவாகவே ஒரு புதிய திட்டம் உருவாக்கப்படும்போது அதில் சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளை முழுமையாகப் பெற்று அதன் அடிப்படையில் நடவடிக்கை தொடரப்பட வேண்டும் என்பது மேலை நாடுகளில் நடைமுறையில் உள்ள ஆட்சிமுறை. ஆனால் நமது நாட்டில் அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் திட்டமாக உருவாகி, பின் அவற்றை உத்தரவுகளாக மாற்றி சம்பந்தப்பட்ட துறைகளிடம் அளித்து நிறைவேற்றச் சொல்வார்கள்.

இதனால்தான் முடிவுகள் எதிர்பார்த்த பலனை அளிப்பதில்லை என்பது அனுபவம் நமக்குக் கற்றுத்தந்த பாடம். மேல்மட்ட முடிவுகள் கீழ்மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல் கருத்தில் கொள்ளப்படுவதோ, விவாதிக்கப்படுவதோ கிடையாது. தற்போது விவாதத்தில் இருக்கும் 10-ம் வகுப்புத் தேர்வைக் கைவிடும் திட்டமும் அந்தவகையான ஒரு பயனற்ற முடிவை அளித்து நமது மக்களை - குறிப்பாக கிராமப்புறங்களின் இளம்மாணவர்களைப் பாதித்து விடுமோ எனும் கவலை உருவாகியுள்ளது.

இளம் வயதில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் பாடங்களை ஒழுங்காகப் படிப்பது முதல் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடத்தைக் கூர்ந்து கவனித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது வரையிலான ஒழுக்க நடவடிக்கைகளை உருவாக்கும் ஒரே அம்சம் தேர்வுகளே என்பது அனுபவம் தந்த பாடம்.

நான் பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளி மாணவனாக இருந்து படிக்கும்போது ஏற்பட்ட அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன். எங்கள் பள்ளியின் காலாண்டு, அரையாண்டுத் தேர்வின் மதிப்பெண்கள் வந்த பின்னர் தலைமை ஆசிரியரான பாதிரியார், குறிப்பிட்ட ஒருநாளில் குறிப்பிட்ட வகுப்பு நேரத்தில் எங்கள் வகுப்பிற்கு வருவார். அதற்கு முன்னரே நாங்கள் எடுத்த மதிப்பெண்களின் விவரங்கள் அடங்கிய முன்னேற்ற அட்டவணைகளில் மதிப்பெண்கள் குறிக்கப்பட்டு, பெற்றோர்களின் கையொப்பம் பெறப்பட்டு தயாராக ஆசிரியர்வசம் இருக்கும்.

தலைமை ஆசிரியர் வந்தபின் எத்தனை மாணவர்கள் குறைந்த மதிப்பெண் 35-க்கு குறைவாகப் பெற்றிருக்கிறார்கள் எனக் கூறப்பட்டு, அவர்கள் எல்லோரும் எழுந்து நிற்க வேண்டும். பின் வகுப்பாசிரியரிடம் ஏன் இவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என விசாரணை செய்யப்படும். ஒவ்வொரு மாணவனாக அழைக்கப்பட்டு தலைமை ஆசிரியர் முன்நிறுத்தப்பட்டு, அவரது கையிலிருக்கும் பிரம்பால் மாணவனின் உள்ளங்கையில் அடி கொடுக்கப்படும்.

எத்தனை அடிகள்? 31 மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு 4 அடிகளும், 32 மதிப்பெண் பெற்றவனுக்கு 3 அடிகளும் கிடைக்கும். 30 மதிப்பெண்களுக்குக் குறைவாக வாங்கிய மாணவன் முழங்காலிட்ட நிலையில் அடிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். சென்ற தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கித் தோல்வி அடைந்து இந்த முறை வெற்றி பெற்றவர்களுக்குத் தனியே பாராட்டுதல்கள் வழங்கப்பட்டு இனிப்பும் வழங்குவார் தலைமை ஆசிரியர்.

விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களில் 35 மதிப்பெண்களுக்குக் கீழே மதிப்பெண்கள் பெற்றவர்களின் பெற்றோர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டு அவர்கள் நேரில் வந்து தங்கள் பிள்ளைகளுடன் விடுதிக்காப்பாளரான பாதிரியாரைச் சந்தித்து ஏன் அந்த மாணவன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான் என்ற விவாதம் நடக்கும். தொடர்ந்து மூன்றுமுறை குறைந்த மதிப்பெண்கள் பெற்றுத் தோல்வியடைந்த மாணவன், ஒன்று பள்ளியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் அல்லது கீழ்வகுப்புக்கு இறக்கம் செய்ய ஒத்துக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற கடுமையான பல நடவடிக்கைகளின் விளைவாக மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளிகள் நடத்தும் தேர்வுகளை மிகவும் அக்கறையுடன் அணுகுவார்கள். விளைவு அந்தக் காலத்தில், 11-ம் வகுப்பு முடிவில் நடக்கும் பொதுத்தேர்வு எங்கள் பள்ளி மாணவர்களுக்கு மிக எளிதாக இருந்தது. 100 சதவிகிதம் பொதுத் தேர்வில் தேர்ச்சி என்பது எங்கள் பள்ளியில் சர்வசாதாரணம்.

பள்ளிகளுக்கு பொதுத்தேர்வு எனும் ஒன்று இல்லை என்றால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாட போதனையிலும், வகுப்புக்கு வராமல், வந்து அன்றாடம் பாடங்களை நன்றாகப் படித்து பொதுத் தேர்வை அணுக வேண்டும் எனும் சிரத்தையிலும் ஈடுபாடு இல்லாமல் போய்விடும். நமது மாநிலத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் தேர்வு முறையை ரத்து செய்துவிட்டு எல்லா மாணவர்களையும் ஒவ்வோராண்டும் அடுத்த வகுப்பிற்கு அனுப்பிவிடும் பழக்கம் சென்ற 10 ஆண்டுகளாகப் பழக்கத்தில் உள்ளது.

பஞ்சாப் மாநிலத்திலும் இதே நிலைமை. ஆனால் விளைவுகள் மிகவும் வருந்தத்தக்க நிலைமையில் உள்ளது என்பதை அம் மாநிலத்தின் ஓர் ஆய்வு கூறுகிறது. நிறைய ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கூட்டல், கழித்தல், வாசித்தல் போன்ற சாதாரணப் படிப்பு அம்சங்கள்கூடத் தெரிந்திருக்கவில்லை.

எனவே தரமான கல்வி எனும் உயரிய குறிக்கோளும் தேர்வு எனும் நடவடிக்கையும் பிரிக்க முடியாதவை. மேலும் ஆசிரியர்கள் தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்கிறார்களா என்பதை அவர்கள் போதிக்கும் பாடங்களில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதை வைத்துத்தான் நம்மால் முடிவு செய்ய முடியும். ஆசிரியர்களும் தங்கள் வேலைத்திறனின் வெளிப்பாடு தேர்வுகள்தான் என்பதால் மிகுந்த சிரத்தையுடன் பாடங்களைப் போதிப்பதிலும், மாணவர்களை இடைவிடாது படிக்க வைப்பதிலும் கவனம் செலுத்தினார்கள்


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes