மும்பையில் பன்றிக் காய்ச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஃபாஹிமா பன்வாலா (53) என்ற பெண் சனிக்கிழமை மாலை இறந்தார்.
இவரையும் சேர்த்து இந்தியாவில் இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. கடந்த திங்கள்கிழமை புணேயில் 14 வயது சிறுமி ரீடா ஷேக் இந்நோய்க்கு பலியானார்.
நாட்டில் பன்றிக் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வட இந்தியாவில் பல நகரங்களிலும் குறிப்பாக மகாராஷ்டிரத்தில் இந்நோய் தாக்குதலுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் கணிசமாக அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் மூலம் வரும் பயணிகளிடம் காணப்பட்ட பன்றிக் காய்ச்சல் நோய், தற்போது நாட்டில் பல பகுதிகளிலும் பரவலாக பரவி வருகிறது.
மும்பையைச் சேர்ந்த ஃபாஹிமா கடந்த நான்கு நாட்களாக லீலாவதி மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை கஸ்தூரிபா தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய ரத்த மாதிரி சோதனைக்காக அனுப்பப்பட்டது. மாலையில் சோதனை முடிவு வந்தபோது அவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் சோதனை முடிவு வருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக கூடுதல் தலைமைச் செயலர் (மருத்துவம்) சர்வாரி கோகலே பத்திரிகை நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
புணேயில்தான் அதிகம்! புணேயில் பன்றிக் காய்ச்சல் காரணமாக ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட டாக்டர் மற்றும் மருந்தாளுநர் ஆகிய இருவரும் அபாய கட்டத்தில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். புணேயில் புதிதாக 49 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புணேயில் இந்நோய்க்கு ஆளாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதால் அங்கு கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் இதுவரை 260 பேர் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் 160 பேர் புணேயைச் சேர்ந்தவர்கள்.
பன்றிக் காய்ச்சல் காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வர்த்தகர் சந்தீப் கெய்க்வாட் (28) மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சண்டீகரில் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் பானிபட் சுத்திகரிப்பு ஆலையின் பொறியாளருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவரும் அவருடைய குடும்பத்தாரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹரியாணாவில் 22 பேர் இந்நோய்க்கு ஆளாகியிருப்பது உறுதியாகியுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் கோல்கத்தா திரும்பிய இரண்டு டாக்டர்கள் உள்பட 8 பேருக்கு இந்நோய்க்கான அறிகுறி தென்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தில்லியில் 215 பேர்: தில்லியில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் பல்வேறு மருத்துவமனைகளில் 215 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை மட்டுமே ஒரே நாளில் நாடு முழுவதும் 96 பேருக்கு இந்நோய் தாக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது
0 comments :
Post a Comment