மக்களிடம் ஏற்பட்டுள்ள நுகர்வு கலாசாரம் நாட்டின் பொருளாதாரத்தின் போக்கையே மாற்றுகிறது என்றார் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வேணுஸ்ரீனிவாசன்.
வேலூரில் சனிக்கிழமை நடைபெற்ற விஐடி பல்கலைக்கழகத்தின் 24-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், சுமார் 3,500 மாணவ -மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கியும், 46 பேருக்கு தங்கப் பதக்கங்களை வழங்கியும் அவர் பேசியது:
"நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தற்போது ஏற்பட்டுள்ள சுணக்கம் தாற்காலிகமானதுதான். இன்றைய தேவை தொழில்நுட்பத் திறன் வாய்ந்த இளைஞர்களே. இதற்கேற்ப புதியவற்றைப் பழகுவதிலும், அவற்றைச் செயல்படுத்திப் பார்ப்பதிலும் இளைஞர்கள் தங்களது திறமையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். சிறந்ததைத் தருபவர்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றனர்.
வீடு, சந்தை ஆராய்ச்சி, உயிரி தொழில்நுட்பம், நிதி, சுகாதாரம், காப்பீடு, டேட்டா அனாலிசஸ் போன்ற துறைகளில் முன்னேற்றம் உள்ளது. இதில், தங்களது திறமையை மேம்படுத்திக்கொள்வோர் வெற்றி பெறுவார்கள்' என்றார் வேணுஸ்ரீனிவாசன்.
விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் பேசும்போது, "நாட்டில் உயர் கல்வியின் தரத்தை உயர்த்தவும், இவை அனைவருக்கும் கிடைக்கவும் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். மேலும், பல உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இப் பிரச்னையையும் கவனத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் கடின உழைப்பு மற்றும் நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்' என்றார். இணை வேந்தர்கள் சேகர் விஸ்வநாதன், ஜி.வி.செல்வம், துணை வேந்தர் டி.பி.கோத்தாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
0 comments :
Post a Comment