சென்னை அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஐந்து மாணவிகள் உள்பட 10 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சளிப் பரிசோதனையில் ஐந்து மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; மீதமுள்ள ஐந்து பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அனைவரும் நலமுடன் உள்ளதாகவும், ஒரு மாணவர் விரைவில் வீடு திரும்ப உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
தனி சிகிச்சைப் பிரிவுகளில்...: பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள ஐந்து மாணவர்களுக்கு தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ள நான்கு மாணவர்கள் தண்டையார்பேட்டை புறநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு மாணவர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பரவியது எப்படி? பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான மாணவர்கள் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் இந்த மாதம் 3-ம் தேதி சேர்ந்தவர்கள். அனைவரும் விடுதி மாணவர்கள்.
விடுமுறை நாளுக்கு கேரளம் சென்று வந்த ஒரு மாணவர் மூலம் மற்ற மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பரவியதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
90 பேர் பாதிப்பு: தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் வைரஸ் (ஏ எச்1 என்1) வைரஸ் தாக்குதல், பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனைகளில் 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் பலருக்கு சளிப் பரிசோதனையில் பன்றிக் காய்ச்சல் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்டோர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் 18 பேர், கோவை அரசு மருத்துவமனையில் 10 பேர் எனப் பல்வேறு இடங்களில் மொத்தம் 90 பேர் தனிப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெளிநாடுகளிலிருந்து...: சிங்கப்பூர், துபை போன்ற நாடுகளிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து இறங்குவோரில் தினமும் 2 அல்லது 3 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment