ராவணனின் ரசிகன் நான் என்று கூறினார் நடிகர் கமல்ஹாசன்.
நடிகை ஷோபனா நடத்திய நாட்டிய நாடக நிகழ்ச்சியை ஷமாரோ என்ற நிறுவனம் குறுந்தகடாக வெளியீட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை நடந்தது. கமல்ஹாசன் வெளியிட கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார்.
விழாவில் கமல்ஹாசன் பேசியது:
""நான் ராவணனின் பரம ரசிகன். அது ஏன் என்பது உங்களுக்கு தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள். அவர்கள் ஹீரோவையும் ரசிப்பார்கள். ஆண்ட்டி ஹீரோவையும் ரசிப்பார்கள். ராவணன் காலந்தொட்டே எங்களுக்கு பெருமை பேச தெரியாது. எங்களின் பெருமைகளை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும்.
சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்று இன்றும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். அந்த நிலை இன்றும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டு இருக்கிறது. வர்த்தகமும், கலையும் கலப்பது கடினம். ராவணனைப் போல் மாயா நரகாசுரனையும் ஷோபனா வெளிக் கொண்டு வர வேண்டும்.
பயிற்சி இல்லாதவன் நடனத்தைப் பற்றி பேச அருகதையற்றவன். ஆனால் அதை மதிக்கிற பண்பும் பணிவும் என்னிடம் இருக்கிறது.
தமிழர்களுக்கு விளம்பரம் செய்யத் தெரியாது. ஆனால் நன்றாக பாராட்டுவோம். மண்ணுக்குள் இருந்தாலும் வைரம் வைரம்தான் ஆனால் அது வெளிவந்தால்தான் அதற்கு மதிப்பு. வைரத்தைத் தோண்டி எடுப்பது போல திறமைகளைத் தோண்டி எடுக்க வேண்டும்'' என்றார் கமல்ஹாசன்.
விழாவில் ஷமாரோ நிறுவன இயக்குநர் அதுல்மாரு, நடிகர் பிரபு, நல்லி குப்புசாமி, கமலா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
0 comments :
Post a Comment