அவசியம்தானா?

தமிழகக் காவல்துறையின் மாநில நுண்ணறிவுப் பிரிவு, தமிழ்நாடு அதிதீவிரப்படை, சிறப்பு இலக்குப்படை, கடலோரப் பாதுகாப்புக் குழுமம் ஆகியவற்றுக்கு நவீன கருவிகளை வாங்க ரூ. 51 கோடிக்கு கருத்துருக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன;

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர்கள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட தமிழக முதல்வர் கருணாநிதியின் உரை வலியுறுத்துகிறது.

அத்துடன், உள்நாட்டுப் பாதுகாப்பு மேலாண்மையில் பணியாற்றுபவர்களுக்காகும் செலவை மத்திய அரசு முழுவதுமாக ஈடுகட்டலாம் என்ற யோசனையும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உள்நாட்டுப் பாதுகாப்பைச் சிறப்பாகக் கையாண்டு வரும் மாநிலங்களுக்கு அதுபோன்ற உதவிகள் கிடைக்க வேண்டும், இல்லாவிட்டால் அது அந்த மாநிலங்களின் செயல்திறனைப் பாதிக்கும் என்ற எச்சரிக்கையும் அந்த உரையில் விடுக்கப்பட்டிருக்கிறது.

உள்நாட்டுப் பாதுகாப்புக்காக மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களில் இயங்கிவரும் "விரைந்து செயல்படும் குழுக்களுக்கான' (ஆர்.ஏ.எஃப்.) செலவுகளையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு உரிய பயிற்சிகளை அளிக்கத் தனியாக ஒரு நிதியத்தையும் அமைக்க வேண்டும் என்று முதல்வர் தமது உரையில் கோரியிருக்கிறார்.

சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், குற்றச் செயல்களைக் கண்டுபிடிப்பதிலும் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழகம் இப்போதும் திகழ்கிறது என்பதில் ஐயம் இல்லை. இன்றும்கூட தமிழ்நாட்டுக்கு வரும் வெளிமாநில காவல்துறை அதிகாரிகளும் வல்லுநர்களும் அதன் கட்டமைப்பையும் செயல்திறனையும் பாராட்டாமல் போவது இல்லை.

கடந்த ஆட்சிக்காலத்தில், ""தமிழகக் காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது, அதன் ஈரல் கெட்டுவிட்டது'' என்று இலக்கியச் சுவை பொங்க வர்ணித்தவர்தான் இன்றைய முதல்வர்.

இந்த ஆட்சியிலோ சட்டக் கல்லூரி மாணவர்களில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல்களின்போதும், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுடனான மோதலின்போதும் தமிழகக் காவல்துறை செயல்பட்ட விதத்தை அல்லது செயல் இழந்துநின்ற நிலையை தமிழகம் மட்டும் அல்ல, அகில இந்தியாவே பதைபதைப்புடன்தான் பார்த்துக் கொண்டிருந்தது. எப்படி இருந்த தமிழகக் காவல்துறை எப்படி ஆகிவிட்டது என்று வருந்தாத தமிழர்களே இருக்க முடியாது.

இந்த நிலையில் இத்துறையின் வளர்ச்சிக்காகவும், மீட்சிக்காகவும் முதல்வர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் வரவேற்கத்தக்கதே. அப்படி இருக்க 51 கோடி ரூபாய்க்கும் மேலும் சில கோடி ரூபாய்களுக்கும் தில்லி மன்றத்திலே போய் நீட்டோலை வாசிப்பதும், அதற்காகச் சிலமுறை தில்லிக்குக் காவடி எடுப்பதும் அவசியம்தானா என்ற கேள்வியும் எழுகிறது.

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்க இதுவரை 4 கட்டங்களில் சுமார் 3,500 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழக அரசு செலவிட்டிருக்கிறது. ஐந்தாவது கட்டமாக, வண்ணத் தொலைக்காட்சி இல்லாத அனைவருக்கும் சுமார் 25 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக அரசே அறிவித்திருக்கிறது.

நமக்குத் தெரிந்து வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கதர் கிராம கைத்தொழில் வாரியத்தாலோ, தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தொழிலாளர்களாலோ தயாரிக்கப்படுவதில்லை. இந்தப் பணம் எல்லாம் யாருடைய தொழில் செழிக்க, யாருடைய வங்கிக் கணக்கு பெருக்கச் செல்கின்றனவோ தெரியவில்லை. இதில் ஊழல் நடப்பதாகவும் கூறிவிட முடியாது. ஏன் என்றால் இந்தக் கொள்முதலுக்கான சர்வகட்சி கூட்டுக்குழுவில் கம்யூனிஸ்டுகள், பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ் என்று அதிமுகவைத் தவிர ஏனைய அத்தனை மக்கள் நலன் பேணும் கட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

கல்வி, சுகாதாரம், சாலை வசதி, மின்னுற்பத்தி, பாசன மேம்பாடு போன்றவற்றுக்குக் கிடைக்காத அரிய நிதியை இப்படி வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குச் செலவிடும்போது, காவல்துறைக்காக வெறும் ரூ. 51 கோடிக்காக மத்திய அரசிடம் கையேந்துவது அவசியம்தானா? உள்துறை அமைச்சரே நம்மவர் எனும்போது, அதிநவீன வசதிகளை உரிமையுடன் கேட்டுப் பெறாமல், ஒரு சில கோடிகளுக்காக "காவடி' எடுப்பது அவசியம்தானா?


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes