பங்கு மார்க்கெட்டில் லாபம் வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி
குரோம்பேட்டை, ராதாநகர் பாஷியம் தெருவை சேர்ந்தவர் அன்புச்செல்வம், இவருக்கு விருகம்பாக்கத்தை சேர்ந்த வாலிபர் அன்பரசு அறிமுகமானார்.
அவர் அன்புச்செல்வத்திடம் நீங்கள் எளிதாக சம்பாதிக்க வழி இருக்கிறது. நான் சொல்லும் கம்பெனி மூலம் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்யுங்கள். மாதம் 20 சதவீதம் லாபம் கொடுக்கிறேன் என்றார்.
அன்பரசு சொன்னதை உண்மை என்று நம்பிய அன்புச்செல்வமும் அவரது உறவினர்களும் விருகம்பாக்கம், தியாகராயநகர், அபிபுல்லா ரோடு ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீ கிங்டம் ஷேர் மார்க்கெட் கன்சல்டன்சி என்ற கம்பெனியில் ரூ.13 லட்சம் முதலீடு செய்தனர். ஆனால் சொன்னபடி அன்பரசு 20 சதவீத லாபம் கொடுக்கவில்லை.
இதையடுத்து அன்புச்செல்வமும் அவரது உறவினர்களும் அன்பரசுவிடம் சென்று பணத்தை திருப்பி கேட்டனர். இந்த நிலையில், அன்பரசு திடீர் என்று தலைமறைவு ஆகிவிட்டார். இது குறித்து புறநகர் மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டது.
புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவுப்படி உதவி கமிஷனர் ஜெயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ரூ.13 லட்சம் மோசடி செய்த வாலிபர் அன்பரசு கொளத்தூர் காந்தி தெருவில் இருப்பது தெரிய வந்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். அவர் ஈக்காட்டுதாங்கல் பஸ் நிறுத்தத்துக்கு சென்று தப்ப முயன்றார். போலீசார் அன்பரசுவை கைது செய்தனர். பின்னர் அவர் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment