பன்றிகாய்ச்சல்: சினிமா தியேட்டர்- கடைகளில் கூட்டம் குறையவில்லை
இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் மும்பை, புனே, ஆமதாபாத் போன்ற நகரங்களில் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. மக்கள் ரத்த பரிசோதனை செய்ய மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
மராட்டியத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தியேட்டர்கள் மற்றும் மக்கள் கூடும் காம்ப்ளக்ஸ்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மும்பை, புனே போன்ற நகரங்கள் வெறிச்சோடியது.
மக்கள் அதிகம் உள்ள இடங்களில் முக கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பன்றிக்காய்ச்சல் தொடர்பாக மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டில் சென்னையில் 17 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு அவர்கள் தண்டையார்பேட்டை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கிண்டியில் உள்ள பரிசோதனை கூடத்தில் ரத்த பரிசோதனை செய்ய கூட்டம் அலை மோதுகிறது.
பன்றிக் காய்ச்சல் ஒருபக்கம் பயமுறுத்தினாலும் சென்னையில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியிலும் வியாபார நிறுவனங்களிலும், தியேட்டர்களிலும், மக்கள் கூட்டம் குறையவில்லை.
சென்னையில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கில் மக்கள் கூடும் முக்கிய வர்த்தகஸ்தலமாக விளங்கும் தியாகராய நகரில் வழக்கம் போல் வியாபாரம் களைகட்டி இருந்தது.
தற்போது ஆடி சீசன் என்பதால் அனைத்து கடைகளிலும் ஆடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு வியாபாரம் அமோகமாக இருப்பதாக ரங்கநாதன் தெரு வியாபாரி ஒருவர் கூறினார்.
இதே போல் கோயம்பேடு காய்கறி மார்க்கெட், பழ மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் வழக்கம் போல் இருந்தது. நேற்று கிருஷ்ணஜெயந்திக்கு பூஜை சமான்கள் வாங்க பெரிய மார்க்கெட் முதல் சிறிய மார்க்கெட் வரை கடும் நெருக்கடியில் திணறியது.
பன்றிக் காய்ச்சல் பீதி எங்கள் வியாபாரத்தை பாதிக்கவில்லை. மக்கள் எந்தவித பயமும் இல்லாமல் கடைகளுக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதாக வியாபார பிரமுகர்கள் தெரிவித்தனர்.
இதே போல் சென்னை நகரில் உள்ள சினிமா தியேட்டர்களிலும் கூட்டம் குறையவில்லை. அண்ணா சாலையில் உள்ள தியேட்டர் களில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சில ரசிகர்கள் மட்டும் முக கவசம் அணிந்து வந்திருந்தனர்.
சாந்தி தியேட்டர் உள்பட பெரிய சினிமா தியேட்டர்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர். இது பற்றி தியேட்டர் நிர்வாகிகள் கூறும் போது சினிமா பார்க்க வந்த ரசிகர்களில் சிலர் முக கவசம் அணிந்து இருந்தனர். சிலர் கைக்குட்டையால் முகத்தை மறைத்து இருந்த னர். இதனால் எங்கள் ஊழியர்களுக்கும், நாங்கள் முக கவசம் அணியுமாறு கட்டாயப்படுத்தி உள்ளோம் என்றனர்
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment