கல்வித் தரகர்கள்

அயல்நாடுகளில் வேலைவாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றுவது அல்லது சொன்ன வேலைக்குப் பதிலாக வேறொரு வேலையை குறைந்த சம்பளத்தில் பெற்றுத்தருவது போன்ற மோசடிகள் கேள்விப்பட்டு சலித்துப்போன நிலையில், இப்போது அயல்நாட்டுக் கல்வியில் மோசடி வெளிப்படத் தொடங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் விமானப் பயிற்சி பெறுவதற்காக ரூ.22 லட்சம் (43500 டாலர்கள்) செலுத்தியும்கூட, இந்திய மாணவர்களுக்கு அந்தக் கல்வி நிறுவனங்கள் உறுதிகூறிய 200 மணிநேரப் பயிற்சியை குறிப்பிட்ட காலத்தில் அளிக்கவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் இதுகுறித்து ஆஸ்திரேலிய தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் விமானப் பயிற்சி தரும் தரமான கல்லூரிகள் இருக்கும்போது, இத்தகைய தரமற்ற கல்லூரியை இந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கக் காரணம், கல்வித் தரகர்கள்!

"ஆஸ்திரேலியாவில் 52 வாரங்களில் விமானி ஆகலாம்' என்று விளம்பரங்கள் கொடுத்து, இந்தியாவின் முக்கிய நகரங்களில் முகாமிட்டு, பெற்றோர்களை நம்பவைத்து, மாணவர்களை இத்தகைய தரம் குறைந்த கல்லூரிகளுக்கு ஆள்பிடித்துத் தருகிறார்கள் இந்தக் கல்வித் தரகர்கள். இதற்காக அக்கல்லூரிகளிடம் ஒவ்வொரு மாணவருக்காகவும் "சேவைக் கட்டணம்' பெறுகிறார்கள்.

ஏற்கெனவே, இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் பிரச்னையால் முகம்தொய்ந்து கிடக்கும் ஆஸ்திரேலிய அரசு, இந்தப் பிரச்னை புறப்பட்டவுடன் நடவடிக்கை எடுத்து, தரமற்ற கல்வி நிறுவனங்களை மூடிவிட்டது. இதனால் வெளிநாட்டு மாணவர்கள் 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் இந்திய மாணவர்கள். இவர்களுக்கு வேறு கல்லூரிகளில் இடம் பெற்றுத் தரப்படும் அல்லது அவர்கள் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு உறுதி கூறினாலும், இதன் மூலம் வெளிப்படும் ஓர் உண்மை; விமானப் பயிற்சிக் கல்லூரிகள் மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும் தரமற்ற கல்லூரிகள் அங்கே செயல்பட்டுள்ளன.

இதேபோன்று அயல்நாட்டில் மருத்துவப் பட்டம் பெறுவது குறித்தும் ஆலோசனை வழங்கவும் நிறைய கல்வித் தரகர்கள் இருக்கிறார்கள். அடுத்ததாக, அயல்நாடுகளில் தரமற்ற மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பேட்டி, துயரங்கள் வெளியாகக்கூடும்.

அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் நடத்தும் கல்விக் கண்காட்சிகளில் தரமான நிறுவனங்கள் மட்டுமே முன்னிலைப் படுத்தப்படுகின்றன என்பதில் சந்தேகம் இல்லை. அந்தக் கல்லூரிகளில் சேர வேண்டுமானால் அவர்கள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் அளிக்க வேண்டும். அதற்கு இயலாத நிலைமை ஏற்படும்போது, இப்படியான தரமற்ற, எதற்கும் வளைந்துபோகிற கல்வி நிறுவனங்களைக் கல்வித் தரகர்கள் அறிமுகம் செய்கிறார்கள். அயல்நாட்டுக் கல்வி, அயல்நாட்டில் வேலை என்ற ஆசை கண்களை மறைக்கிறது.

அயல்நாட்டு கல்வியில் மட்டுமல்லாது, உள்நாட்டிலும் இத்தகைய கல்வித் தரகர்கள் ஆண்டுதோறும் கைநிறைய கமிஷன் பெறுகிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் முதல் கட்டம் முடிந்துள்ள நிலையில், இன்னமும் முழு எண்ணிக்கையில் மாணவர்கள் சேராத கல்லூரிகளுக்கும்கூட, நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை திருப்திகரமாக முடிந்துள்ளது என்றால், கல்வித் தரகர்கள் எந்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்பதைக் காண முடிகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல்கட்ட கலந்தாய்வில் 53,898 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில் 12,105 பேர் (22 சதவீதம்) கலந்தாய்வுக்கே வரவில்லை. 167 பேர் கலந்துகொண்டும் கல்லூரியைத் தேர்வு செய்யாமல் சென்றனர். இவர்களில் 3 சதவீதம்பேர் அகில இந்திய நுழைவுத் தேர்வில் பங்குகொண்டு இடம் கிடைத்து சேர்ந்திருக்கலாம். மற்றவர்கள் ஏன் இந்த முடிவை மேற்கொண்டனர்? காரணம், கல்வித் தரகர்கள்

""முன்பதிவு செய்துகொண்டால்தான் ஆயிற்று, இல்லையானால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சீட் கிடைக்காது என்று அச்சுறுத்தி, பாதி நன்கொடையை முன்பணமாக கல்லூரிக்குப் பெற்றோர் செலுத்தும்படி செய்கிறார்கள். கொஞ்சம் தயங்கினால், "உங்கள் குழந்தைக்கு கலந்தாய்வில் இதே கல்லூரியில் சீட் கிடைக்கும் என்றால் அதில் சேர்ந்துகொள்ளுங்கள், இந்தப் பணத்தை வேறு மாணவர் கொடுத்தவுடன் திருப்பித் தந்து விடுவார்கள்' என்று உத்தரவாதம் கொடுப்பார்கள்.

முன்பணம் செலுத்தியவர்கள் கலந்தாய்வுக்கு முதல்நாள் இரவு கணினியில் பார்த்தே அல்லது கலந்தாய்வுக்கு வந்து, அக்கல்லூரியில் இடம் கிடைக்காது என்பது தெரிந்தவுடன், வேறு தரமான கல்லூரியில் இடம் கிடைக்கும் என்றாலும், முன்பணம் செலுத்தியதால் வேறுவழியின்றி அதே கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டிலேயே சேர்கிறார்கள்.

மாணவர்களை மாடு பிடிப்பதுபோல பிடிக்கிற கல்வித் தரகர்களும் கல்வியாளர்களும் தங்கள் விலை மற்றும் கமிஷனை கைகள் மீது துண்டுபோட்டுத் தீர்மானிப்பதில்லை; துண்டுச்சீட்டில் தீர்மானிக்கிறார்கள்


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes