வண்ண விளக்குகளின் ரகசியம்


Light
ஒளி உமிழும் டையோடுகள் (LED) என்பவை மின்னோட்டம் பாயும்போது ஒளியை உமிழும் தன்மை உடையவை. இவை குறைமின்கடத்திகளால் ஆனவை. மின்னியல் சாதனங்களில் இந்த விளக்குகள் நீலநிற அல்லது பச்சைநிற ஒளியை உமிழ்கின்றன. பாஸ்பரஸ் பூச்சு பூசப்பட்டால் வெண்மை நிற ஒளியைத்தரக்கூடியவை. இந்த விளக்குகளில் காலியம் நைட்ரைடு (GaN) என்னும் வேதிப்பொருள் பயன்படுகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்புதான் காலியம் நைட்ரைடு உருவாக்கப்பட்டது.

இரண்டு அங்குல தடிமனுள்ள விலையுயர்ந்த நீலக்கல்லில் காலியம் நைட்ரைடு சேர்மத்தை பொதிந்து வளர்க்கும் தொழில்நுட்பம் இதுவரை நடைமுறையில் இருந்தது. இதனால் இந்த விளக்குகளின் விலை மிகவும் அதிகம். ஆனால் புதிய கண்டுபிடிப்பின்படி ஆறு அங்குல தடிமனுள்ள சிலிகான் தட்டில் பத்துமடங்கு காலியம் நைட்ரைடு சேர்மத்தை வளர்க்க முடியும். சிலிகான் விலைகுறைவான தனிமம் என்பதால் உற்பத்தி செலவு பத்தில் ஒரு பங்காக குறையும் வாய்ப்பு இருக்கிறது.

ஒளிஉமிழும் டையோடுகளை குறைந்தசெலவில் தயாரிக்கும் தொழில்நுட்பம் தற்போது கண்டறியப்பட்டுள்ளதால் இன்னும் ஐந்தாண்டுகளில் விளக்குகளுக்கான மின்கட்டணத்தில் முக்கால்பங்கு சேமிக்கலாம் என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் காலின் ஹம்ப்ரிஸ்.

ஒளி உமிழும் டையோடுகளின் விலை பத்தில் ஒரு பங்காக குறையும்போது ஒளி உமிழும் டையோடுகளைப் பயன்படுத்திய விளக்குகளின் விற்பனை நிச்சயமாக அதிகரிக்கும். விளைவாக, நமது மின்கட்டணத்தில் முக்கால் பங்கு குறைந்துபோகும் என்கிறார் காலின் ஹம்ப்ரிஸ்.

அதாவது மின்சார உபயோகத்தில் நான்கில் ஒருபங்கு சிக்கனம் ஏற்படுமாம். இப்போது உள்ள மின் உற்பத்தி நிலையங்களைக்கூட மூடவேண்டி வருமாம். நம்முடைய மின்வெட்டு அமைச்சருக்கு இது நிச்சயம் நல்ல செய்திதான். ஆனால் இந்தக்கனவு நனவாவதற்கு அவர் ஐந்து வருடங்கள் காத்திருக்கவேண்டுமே! யாருக்கு அந்த யோகம் அடிக்கப்போகிறது என்பதுதான் தெரியவில்லை.

காலியம் நைட்ரைடு சேர்மத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு ஒளி உமிழும் டையோடு விளக்கு ஒரு லட்சம் மணிநேரத்திற்கு எரியக்கூடியது. அதாவது 60 ஆண்டுகள் வரை தொடர்ந்து அந்த விளக்கு எரியும். இவற்றில் பாதரசம் இல்லை. எனவே சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுத்தும் சிக்கலும் இல்லை. மேலும் காலியம் நைட்ரைடு ஒளி உமிழும் விளக்குகளை தேவைப்படும்போது பிரகாசமாகவோ, மங்கலாகவோ எரியச்செய்துகொள்ளலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes