சாதாரணமாக நாம் நெஞ்சுவலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று எண்ணும் அளவுக்கே மருத்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறோம்.
வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கேற்ப உரிய மருத்துவர்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும்.
அதைவிடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்புதான் ஏற்பட்டு விட்டதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.
உடல் வலி, அழுத்தம், இறுக்கம் போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன.
ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான வலி இருக்கும். ஆனால், நோய் தீவிரம் அதிகம் இருக்கக்கூடும்.
உங்களுக்குத் தோன்றும் அறிகுறிகளை மருத்துவப் பரிசோதனையின்போது மருத்துவரிடம் எடுத்துரைக்க வேண்டும்.
குறிப்பாக உடலின் எந்தப் பாகத்தில் வலி ஏற்படுகிறது? ஓய்வின்போது வலி குறைகிறதா? இரவு பகல் வேளைகளில் எப்போது வலி அதிகமாக உள்ளது? என்பன போன்றவற்றை சொன்னால், அதற்கேற்ப சிகிச்சை முறைகள் உள்ளன.
மாரடைப்பு நோயானது பல்வேறு விதமான அறிகுறிகளை உடையது. இதயத் தசைகள் இறந்து சிதைவுறுவதாலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாததால் ஏற்படும் அறிகுறிகளாவன:
நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது; அதிக வியர்வை; நெஞ்சு இறுக்கம்; மூச்சுத் திணறல்; இடது தோள்பட்டை கைகள், தாடை மற்றும் பற்களில்கூட வலி பரவுதல் போன்றவை.
ஆண்களுக்குப் பொதுவாக நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவதுபோல் தோன்றும். பெண்களுக்கு மூச்சுத் திணறல், மேல்வயிறு எரிச்சல் தோன்றி வாந்தி, குமட்டலுடன் அதிக வியர்வை தோன்றக்கூடும்.
அறிகுறிகளைத் தெரிந்து கொண்ட பிறகு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம். இதற்காக மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.
பரிசோதனைகளைச் செய்து கொள்வதன் மூலம் நோய் தீவிரமாவதைத் தடுக்கலாம்.
எனவே நெஞ்சுவலிக்கு ஏராளமான காரணங்கள் உள்ள நிலையில், அதனை மாரடைப்பு என்று தவறாக நினைத்து வருந்தத் தேவையில்லை
0 comments :
Post a Comment