இதய வால்வு கோளாறு உள்ளிட்ட இதயநோய் உள்ளவர்கள் நாள்தோறும் ஒரு வேளை சாப்பிட வேண்டிய உயிர்காக்கும் மாத்திரை "டிகாக்ஸின்'. இதன் விலை 60 பைசா. ஆனால் இந்த மாத்திரைக்கு தமிழ்நாட்டில் பெரும்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த மாத்திரையைச் சாப்பிட்டு வரும் நோயாளிகள், கடந்த ஒரு மாதமாக மருந்தே இல்லை என்ற நிலைமையில், இதயத்தைக் கையில் பிடித்துக்கொண்டு தவித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்தில் ஏறக்குறைய 1.25 லட்சம் மாத்திரைகள் விற்பனையாகும். அதாவது சுமார் 5000 இதயநோயாளிகள் தினமும் ஒரு மாத்திரை சாப்பிடுவார்கள். ஆனால் தற்போது ஒரு மாத்திரைகூட கிடைப்பது அரிதாக இருக்கிறது. இந்த மாத்திரைக்கு சமமாக வேறு மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டாலும், அவை டிகாக்ஸின் மாத்திரைக்கு ஈடாகாது என்று இதயநோய் மருத்துவர்கள் அறுதியிட்டுச் சொல்கின்றனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவப் பணிகள் கழகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் காரணமாக, தற்போது டிகாக்ஸின் மருந்து அரசு மருத்துவமனைகளில் இருப்பு உள்ளது. ஆனால் எல்லா இதய நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் பதிவு செய்துகொண்டவர்கள் அல்ல. மேலும் ஒப்பந்தம் காலாவதியானதும் இந்த மாத்திரை அரசு மருத்துவமனையிலும் கிடைக்காது என்கின்றன மருத்துவ வட்டாரங்கள்.
இந்த மாத்திரையை கிளாக்úஸô மருந்து தயாரிப்பு நிறுவனம் "லெனாக்ஸின்' என்ற பெயரிலும், மேக்லாய்ஸ் நிறுவனம் "டிஜிட்ரான்' என்ற பெயரிலும் தயாரித்து வந்தன. மேக்லாய்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பை ஏற்கெனவே நிறுத்திவிட்டது.
மாத்திரையின் விலையே 60 பைசா, இதில் மொத்த விற்பனையாளர்களுக்கு 6.5 முதல் 8 விழுக்காடு வரையிலும், சில்லறை விற்பனையாளர்களுக்கு 15 முதல் 18 விழுக்காடு வரையிலும் லாபம் வழங்க வேண்டியுள்ளதால், மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு பைசா முதல் 2 பைசா வரைதான் லாபம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இந்த மாத்திரையின் "மறைவு'க்கு காரணம் வேறு பெயரில் பல நூறு மடங்கு விலையில் சந்தையில் இறக்குவதற்கான ஆயத்தம்தான் எனப்படுகிறது. இதயநோய் உள்ளவர்கள் கட்டாயம் மாத்திரையைச் சாப்பிட வேண்டும். என்ன விலை வைத்தாலும்!
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கட்டாயமாக உற்பத்தி செய்ய வேண்டிய மருந்து பட்டியலில் இந்த மருந்தும் உள்ளது. ஆகவே குறைந்த உற்பத்தியை அரசு மருத்துவமனைகளுக்கு மட்டும் கொடுக்கின்றன. மாத்திரைகள் வெளியே கிடைக்காத நிலையில், மருத்துவர்களும் வேறு விலைஉயர்ந்த மாத்திரையை பரிந்துரைக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.
"இந்த மாத்திரைக்கு சரியான மாற்று மாத்திரை இல்லை. வேறு மாத்திரைகளின் விலை மிகமிக அதிகம் என்பதுடன், டிகாக்ஸின் காம்பினேஷன் மட்டுமே இதயநோயாளிக்கு பாதுகாப்பானது. மத்திய, மாநில அரசுகளின் சுகாதார துறைக்கு இது தெரியும். சட்டபூர்வமான நடவடிக்கைகளை அரசுதான் மேற்கொள்ள வேண்டும்' என்கிறார் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் அப்பு.
பெரும்பாலான மாத்திரைகளில் கூடுதல் லாபம் பார்க்கும் உற்பத்தியாளர்கள், உயிர்காக்கும் இந்த மருந்தில் குறைந்த லாபம் கிடைத்தாலும் சேவை மனப்பான்மையுடன் இந்த மாத்திரைகளை தயாரிக்க வேண்டும் என்கிறார் மொத்த மருந்து விற்பனையாளர் கலையரசன்.
மத்திய, மாநில அரசு நினைத்தால் இந்தத் தட்டுப்பாட்டை மிக எளிதில் போக்கிவிட முடியும் என்பது மட்டும் நிச்சயம்.
0 comments :
Post a Comment