ஒரு காலத்தில் செங்கல்கற்களைப் போல அடுக்கி வைத்து எடுத்துச் செல்லும் வி.எச்.எஸ்.வீடியோ டேப்புகளைப் பயன்படுத்தி வந்தோம்.பொறுமையாக அவற்றை ரீவைண்ட் செய்தும் பார்வேர்ட் செய்தும் படங்களைப் பார்த்து வந்தோம்.இப்போது அத்தகைய வீடியோ ரெகார்டர்களும் பிளேயர்களும் தூங்குகின்றன.0,1 என டிஜிட்டல் உலகம் தலை காட்டிய பின் இவற்றிற்கு வேலையே இல்லை என்றாகிவிட்டது.பழைய அனலாக் வி.எச்.எஸ்.டேப்புகளைக் காண்பது அரிதாகி விட்டது.அரிதாகி விட்டது என்று எழுதுவதைக் காட்டிலும் கடினமாகி விட்டது எனலாம்.எனென்றால் டிஜிட்டல் பார்மட்டில் வீடியோவும் ஆடியோவும் வந்தபின் அவற்றைக் கையாள்வதும் தூக்கிச் செல்வதும் மிக மிக எளிதான ஒன்றாக மாறிவிட்டன.
ஆனாலும் டிஜிட்டல் வடிவங்களிலும் குழப்பங்கள் இருக்கத் தான் செய்கின்றன.பலவகையான பார்மட்டுகள் உலவுகின்றன.மூவிங் பிக்சர் எக்ஸ்பர்ட்ஸ் குரூப் (Moving Picture Experts Group)MPEG 1,MPEG 2,MPEG 4 எனப் பலவகையான பார்மட்டுகளை வெளியிட்டுள்ளது.இருப்பினும் இந்த பார்மட்டுகளின் இடையே மாற்றிக் கொள்ளக் கூடிய வழிகளும் நமக்குக் கிடைக்கின்றன.இந்தக் கட்டுரையில் அது போன்ற மாற்றித் தரும் வீடியோ கன்வெர்டர் புரோகிராம்கள் சிலவற்றைப் பற்றித் தகவல்கள் தரப்படுகின்றன.எடுத்துக் காட்டாக உங்களிடம் டிவிடி ஒன்றில் எடுத்த உங்களின் திருமண வைபோக விழாவின் வீடியோ உள்ளது.இதனை ஐ-பாட் சாதனம் ஒன்றில் பார்க்கும் வகையிலான பார்மட்டில் அமைத்து மனைவிக்குத் தர விரும்புகிறீர்கள்.எப்படி அதற்கேற்ற பார்மட்டிற்கு மாற்றுவது?
இந்த சூழ்நிலையில் உங்களுக்கு உதவுவதற்கென்று பல மீடியா கன்வெர்டர்கள் உள்ளன .சில இலவசமாக டவுண்லோட் செய்திடக் கிடைக்கின்றன.சிலவற்றிற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.சில புரோகிராம்கள் விண்டோஸ்,மேக் மற்றும் லினக்ஸ் என அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கும் தனித்தனி புரோகிராம்களாகக் கிடைக்கின்றன.
1.Any Video Converter:இந்த புரோகிராம் பல அருமையான மாற்றங்களுக்கான வசதிகளைக் கொண்ட கட்டணம் செலுத்திப் பெறும் புரோகிராம் ஆகும்.பலவகையான பார்மட்டுகள் இடையே பல கோடக் விஷயங்களைத் தேர்ந்தெடுத்து அதனுடன் பிரேம் ரேட் மற்றும் ரெசல்யூசன் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நம் அறியாமையைக் காட்டும் சூழ்நிலைகளை இந்த புரோகிராம் தருவதில்லை.இதன் கிராபிகல் யூசர் இன்டர்பேஸ் மிக மிக எளிமையாக உள்ளது.மூன்றே மூன்று நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.முதலில் எந்த வீடியோவினை இன்புட் செய்திட வேண்டுமோ அதனை இயக்கி உள்ளிட வேண்டும்.அடுத்த எந்த பார்மட்டில் வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்மட்டில் வீடியோ கிடைக்கும்.இது மாற்றும் பார்மட்டுகளின் பல்வேறு பிரிவுகள் நம்மை வியக்க வைக்கின்றன.இதன் இலவசப் பதிப்பு கூட avi,asf,mov,rm,rmvb,flv,mkv,mpg,3gp,m4v,and vob to avi,wmv,mp4,3gp,mpg(PAL or NTSC),MPEG 1 and MPEG2,wmv மற்றும் flv என அனைத்து பார்மட்டுகளையும் கையாள்கிறது.இதன் மூலம் யு-ட்யூப் வீடியோ காட்சிகளைக் கூட உங்கள் மொபைல் போனில் பார்த்து ரசிக்கும் வகையில் பார்மட்டினை மாற்றிக் கொள்ளலாம்.இதனை டவுண்லோட் செய்திட http://www.anyvideoconverter.com/downloadavcfree.php என்ற முகவரிக்குச் செல்லவும்.
இந்த புரோகிராமில் ஒரு சிறிய பிரச்சினை உள்ளது.இதனால் மாற்ற முடியாத வீடியோ பார்மட் என ஒன்று இருந்தால் உடனே எர்ரர் மெசேஜ் கொடுக்காமல் ஆடியோவை மாற்றி விட்டு பின்னர் இறுதியில் எர்ரர் மெசேஜ் கொடுக்கிறது.இதனைத் தவிர்த்திருக்கலாம்.ஏனென்றால் இறுதியில் ஆர்வத்துடன் நாம் பார்மட் மாறியிருக்கும் என எண்ணிப் பார்க்கையில் கருப்பு திரையில் அதன் ஆடியோ மட்டும் கிடைத்தால் எப்படி இருக்கும்!!
2.ஹேண்ட் பிரேக்(Handbrake) : இது ஓர் இலவச சாப்ட்வேர் .இதற்கான மேக் மற்றும் லினக்ஸ் வடிவங்களும் கிடைக்கின்றன.ஏறத்தாழ அனைத்து டிவிடி பார்மட் பைல்களையும் இது மாற்றித் தருகிறது.இதனுடன் கிடைக்கும் கூடுதல் வசதிகளும் அருமையாக உள்ளன.இன்புட் வீடியோவிற்கான பிட் ரேட் கால்குலேட்டர்,ஓரளவிற்கு கிடைக்கும் சப் டைட்டில் வசதி,வீடியோ படங்களை இன்டர்லேஸ் செய்வது,கிராப் மற்றும் ஸ்கேலிங் செய்வது போன்றவற்றையும் இதில் மேற்கொள்ளலாம்.இதில் சிரமம் தரும் விஷயம் எதுவும் இல்லை என்றாலும் இதன் கிராபிகல் யூசர் இன்டர்பேஸை இன்னும் எளிதாக வடிவமைத்திருக்கலாம்.இந்த சாப்ட்வேர் புரோகிராம் அனைத்து பார்மட்டுகளையும் .m4v என்ற பார்மட்டுக்கு மாற்றுகிறது.இது மேக் மற்றும் ஐபாட் சாதனங்களில் பிரச்சினை எதனையும் ஏற்படுத்தாது.ஏனென்றால் அவற்றிற்கு .m4v பார்மட் தான் தேவைப்படுகிறது.ஆனால் வேறு இடங்களில் இயக்கப்பட வேண்டுமென்றால் அங்கு .mp4 தேவைப்படலாம்.எடுத்துக் காட்டாக XBox360 என்ற சாதனத்தில் இயக்க mp4 தான் வேண்டியிருக்கும்.இந்த பார்மட் பல இடங்களில் தேவைப்படுவதால் இதனை டிபால்ட் பார்மட்டுகளில் ஒன்றாக வைத்து பயன்படுத்துபவரிடம் ஆப்ஷன் கேட்கும் வகையில் அமைக்கலாம்.இருப்பினும் அவுட்புட் பைல் எந்த பார்மட்டில் வேண்டும் என்ற ஆப்ஷன் கேட்கப்பட்டு எம்பி4 கிடைப்பது ஆறுதலைத் தருகிறது.இந்த சாப்ட்வேர் புரோகிராமினை டவுண்லோட் செய்திட http://handbrake.fr/?article=download என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும்.
3.சூப்பர்(Super) : அடுத்ததாக Super என்ற புரோகிராமினை இங்கு சொல்லியே ஆக வேண்டும்.மேலே கூறப்பட்ட இரண்டு புரோகிராம்களைக் காட்டிலும் அப்படி ஒன்றும் சிறப்பான கூடுதல் வசதிகள் இதில் இல்லை என்றாலும் இதன் கிராபிகல் யூசர் இன்டர்பேஸ் மிக மிகச் சிறப்பாக உள்ளது.அது மட்டுமின்றி அவற்றின் வழியாக பயன்படுத்துபவர் தேர்ந்தெடுக்கப் பல ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால் இதுவே சராசரி பயனாளரை பயப்படவைக்கிறது.பரவலாகக் கேள்விப்படாத பார்மட்டுகளெல்லாம் இதன் வழி மாற்றப்படுகின்றன.அதனால் அவற்றின் பெயர்களைப் (TS or M2TS/FFmpeg/MEncoder/MPlayer) படித்துப் பார்க்கையில் சாதாரணப் பயனாளர் குழப்பமடையலாம்.
மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் மீடியா மாற்றுகையில் இது சற்று அதிக நேரம் எடுக்கிறது.சி,பி,யு.விற்கு அதிக வேலை அளிக்கிறது.இதனை டவுண்லோட் செய்திட http://www.erightsoft.com/Superdc.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தை அணுகவும்.
இன்னும் பல மீடியா கன்வெர்டர்கள் இணையத்தில் கிடைக்கின்றன.MediaCoder மற்றும் Formatfactory ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்கன.இவையும் மேலே குறிப்பிட்ட மீடியா கன்வெர்டர்கள் போலச் செயல்படுகின்றன.ஒவ்வொன்றும் ஒரு சில கூடுதல் வசதிகளையும் தவிர்த்திருக்கக் கூடிய குறைகளையும் கொண்டுள்ளன.நமக்கு எது எளிது எனத் தெரிகிறதோ,அவற்றை டவுண்லோட் செய்து இயக்கிப் பயன்படுத்துவது நல்லது.
0 comments :
Post a Comment