கார்கில் போரின் 10-வது ஆண்டு வெற்றி விழா ஜம்மு - காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. போரில் வீரமரணடைந்தவர்களுக்கு அவர்களது குடும்பத்தினர் உணர்ச்சிபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
தங்கள் குடும்பத்தில் ஒருவர் நாட்டுக்காக செய்த தியாகம் குறித்து அவர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.
கார்கில் போரில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்ததன் 10-வது ஆண்டு வெற்றி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
போர் நடைபெற்ற கார்கில் மாவட்டம் திராஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
பரம் வீர் சக்ரா விருது பெற்ற மறைந்த கேப்டன் மோகன் சந்திராவின் தாயார் மோகினி கூறுகையில், "10 ஆண்டுகளுக்கு முன் எனது மகன் செய்த தியாகத்துக்காக நான் இப்போதும் மதிக்கப்படுகிறேன். அவனை பெற்றதற்காகப் பெருமையடைகிறேன். எனது மகன் என்னுடன் இல்லை என்றாலும் நாட்டுக்காகத்தான் அவனை இழந்துள்ளேன் என்பதை நினைத்து ஆறுதல் அடைகிறேன்' என்றார்.
"எனது மகன் தேசத்தின் நாயகனாக மதிக்கப்படுகிறான். அவன் இறந்த பின்னர் அவனது தியாகத்தை நினைவு கூர்ந்து நாட்டுமக்கள் அஞ்சலி செலுத்தும் இந்த நாள்தான் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது' என்று போரில் உயிரிழந்த கேப்டன் விக்ரம் பாந்ராவின் தந்தை ஜி.எல். பாந்ரா தெரிவித்தார்.
கார்கில் போரில் வீரமரணமடைந்த நூற்றுக்கணக்கான வீரர்களின் குடும்பத்தினரும் விழாவில் கெüரவிக்கப்பட்டனர்.
கடந்த 1999-ல் பாகிஸ்தானியர்கள் கார்கில் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவினர். 59 நாள்கள் நடைபெற்ற போருக்குப் பின்னர் இந்தியப் பகுதி முழுமையாக மீட்கப்பட்டது. இதில் சுமார் 500 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது நடைபெற்றது. அதனால் இதுவரை கார்கில் வெற்றி விழாவை காங்கிரஸ் அரசு விமரிசையாக நடத்தவில்லை. இந்த ஆண்டுதான் தில்லியில் நடைபெற்ற வெற்றி விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் முதல்முறையாகக் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment