வேண்டாம், வெட்டி பந்தா!

வருண் காந்திக்கும் வி.ஐ.பி.க்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அவரது தாயார் மேனகா காந்தியிடமிருந்து கோரிக்கை எழுந்திருக்கிறது. வரவர, கறுப்புப் பூனைக் கமாண்டோக்களுடன் உலா வருவது என்பது ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் கெüரவப் பிரச்னையாகிவிட்டதோ என்றுகூடத் தோன்றுகிறது.

"உயிருக்கு ஆபத்து' என்பது அதிர்ச்சி அளிக்கும், மன வேதனை தரும் விஷயம். ஆனால், உயிருக்கு ஆபத்து என்று கேள்விப்பட்டாலே, சிவப்பு விளக்குக் காரும், கமாண்டோக்களின் பாதுகாப்புமாக உலா வரலாம் என்கிற கனவுடன் நமது அரசியல் தலைவர்கள் இருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. மக்களுக்குப் பாதுகாப்புத் தர வேண்டிய தலைவர்கள், தங்களுக்கே பாதுகாப்பில்லை என்று வெட்கமில்லாமல் கூறும்போது, அப்பாவி இந்தியக் குடிமகனின் நிலைமைதான் என்ன? நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, அப்போதைய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி தலைவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு விஷயத்தில் மறுபரிசீலனை வேண்டும் என்று கருத்துத் தெரிவித்ததுடன், சில மாற்றங்களையும் செய்ய முற்பட்டார். அதன் முதல் கட்டமாக, முன்னாள் பிரதமர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்களுக்குப் பதவி விலகிய முதல் பத்து ஆண்டுகளுக்கு மட்டும் அதிகபட்ச பாதுகாப்பு தந்தால் போதும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏனைய வி.வி.ஐ.பி.க்களுக்கும், பாதுகாப்புப் பெறும் அரசியல்வாதிகளுக்கும் தரப்பட்டு வந்த பாதுகாப்பைக் குறைக்க கூட்டணி நிர்பந்தம் தடுத்தது என்று கருதவும் இடமிருக்கிறது.

கூட்டணி நிர்பந்தங்களிலிருந்து ஓரளவுக்கு விடுபட்ட நிலையில் வி.வி.ஐ.பி.க்களின் பாதுகாப்புப் பற்றிய மறுபரிசீலனையில் இறங்கி இருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். ஆளுங்கட்சிப் பிரபலங்களின் அதிருப்திக்கு ஆளாக நேரும் என்பது தெரிந்தும் துணிந்து இந்த மறுபரிசீலனையில் இறங்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் என்பது பாராட்டுக்குரிய விஷயம். தனக்கு மிகக் குறைவான பாதுகாப்பையே வைத்துக் கொண்டிருக்கும் உள்துறை அமைச்சர், இந்த விஷயத்தில் முன்மாதிரியாகவும் இருப்பதால், மற்றவர்கள் அவரைக் குறை கூற முடியாத நிலைமை.

அதிகபட்ச பாதுகாப்பு பிரதமருக்கும், முன்னாள் பிரதமர்களுக்கும் (10 ஆண்டுகள் வரை), சோனியா காந்தியின் குடும்பத்தினருக்கும் மட்டுமே அளிக்கப்படுகிறது. சிறப்புப் பாதுகாப்புப் படை (எஸ்.பி.ஜி.) எனப்படும் இந்த பாதுகாப்புப் படையினர் மிகக் குறைந்த அளவே உள்ளனர். அடுத்தபடியாக, குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கும், மக்களவைத் தலைவருக்கும் பாதுகாப்புத் தருவது தேசியப் பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி.) எனப்படும் பிரிவினர்.

ஏனைய முக்கியமான தலைவர்களுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்தப் பிரமுகர்கள் வெளியில் செல்லும்போது தேசியப் பாதுகாப்புப் படையின் கமாண்டோக்களும், ஏனைய நேரங்களில் மாநிலக் காவல் துறையினரும் மூன்றடுக்குப் பாதுகாப்பை இவர்களுக்கு அளிக்கிறார்கள். எல்.கே. அத்வானி, மாயாவதி, ஜெயலலிதா உள்பட சுமார் 30 முக்கிய அரசியல் தலைவர்களுக்கு இந்தப் பாதுகாப்பு தரப்படுகிறது.

இது அல்லாமல், சுமார் 68 பேருக்கு இசட் பாதுகாப்பும், 243 பேருக்கு "ஒய்' பாதுகாப்பும், 81 பேருக்கு "எக்ஸ்' பாதுகாப்பும் தரப்படுகின்றன. ஏனைய குட்டி வி.ஐ.பி.க்களுக்கு மாநில அரசுகள் தரும் காவல் துறையின் பாதுகாப்பு என்பது இந்தப் பட்டியலில் இடம்பெறாது. 2007 - 08-ல் ரூ. 117 கோடி ரூபாயாக இருந்த சிறப்புப் பாதுகாப்புப் படையின் நிதி ஒதுக்கீடு 2008-09-ம் ஆண்டில் ரூ.180 கோடியாக அதிகரித்துள்ளது.

தேசியப் பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி.) என்பது, மும்பையில் நடந்தது போன்ற தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறும்போது அதை எதிர்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்பு. இதில் பயிற்சி பெற்ற 1700 கமாண்டோக்கள் இருக்கிறார்கள். அவர்களில் 60% பேர் முக்கிய அரசியல்வாதிகளைப் பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறார்கள். 422 வி.ஐ.பி.க்களின் பாதுகாப்புக்காக 10,000-க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினரும், காவல் துறையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த அரசியல் பிரமுகர்களில் சிலர் கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் வி.ஐ.பி.க்கள் என்பதுதான்.

உள்துறை அமைச்சகம் செய்த ஆய்வின்படி, நாடு முழுவதும் சுமார் 13,000 வி.ஐ.பி.க்களின் பாதுகாப்புக்காக 45,000-க்கும் அதிகமான காவல் துறையினர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களுக்காகும் செலவுகள், வாகனங்களுக்கான செலவு, சம்பளம், குண்டு துளைக்காத உடை மற்றும் பாதுகாப்பு ஆயுதங்கள் என்று கணக்குப் போட்டுப் பார்த்தால் ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.600 கோடிக்கும் மேல் மக்களின் வரிப்பணம் செலவிடப்படுகிறது.

சிதம்பரம் உள்துறை அமைச்சராகப் பதவி ஏற்றது முதலே, வி.வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பு விஷயத்தில் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். சுமார் 50 பிரமுகர்களின் பாதுகாப்பு அளவு குறைக்கப்பட்டு விட்டது. மேலும் 150 பேருக்கான பாதுகாப்பு விஷயத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிகிறது. தேவையில்லாமல் வெட்டி பந்தாவுக்காகப் பாதுகாப்பு வைத்திருப்பவர்களின் சலுகைகளை அகற்றுவதில் உள்துறை அமைச்சர் முனைப்பாக இருப்பதாகத் தெரிகிறது.

தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சிலர் கருதினால், அவர்கள் பொது வாழ்க்கையிலிருந்து விலகிக் கொள்வதை யாரும் தடுக்கவில்லை. அதற்கு மனதில்லாதவர்கள் தங்களது பாதுகாப்பை சொந்தச் செலவில் செய்து கொள்வதிலும் தவறில்லை. உள்துறை அமைச்சகம் இந்த விஷயத்தில் அரசியல் நிர்பந்தங்களுக்கு தலை வணங்கிவிடக் கூடாது என்பதுதான் நமது வேண்டுகோள்


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes