காந்தி கொலை வழக்கு 7

கோட்சே பிடிபட்டதைத் தொடர்ந்து பிர்லா மாளிகையில் இருந்து நழுவிய ஆப்தேயும், கார்கரேயும் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பித்துவிடவேண்டும் என்று தீர்மானித்தார்கள். 30_ந்தேதி இரவை டெல்லி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் தங்கியிருந்த அகதிகள் கூட்டத்துடன் தங்கியிருந்தார்கள். மறுநாள் (31_ந்தேதி) பிற்பகல் டெல்லியில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில், ஆப்தே இரண்டாம் வகுப்பிலும், கார்கரே மூன்றாம் வகுப்பிலும் பிரயாணம் செய்தார்கள்.

பிப்ரவரி இரண்டாம் தேதி பம்பாய் சென்று, "சீகிரீன்" ஓட்டலில் அறையெடுத்து தங்கினார்கள். பின்னர் போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க புனாவுக்கும், மற்றும் பல இடங்களுக்கும் சென்று தலைமறைவாக இருந்தார்கள். இதற்கிடையே ஜனவரி 20_ந்தேதி காந்தியடிகளைக் கொல்ல பிர்லா மாளிகையில் குண்டு வீசி போலீசில் சிக்கிய மதன்லால், கொலை சதித்திட்டம் பற்றி முக்கிய விவரங்களையெல்லாம் கூறியிருந்தான்.

காந்தியடிகளை சுட்டுக்கொன்ற கோட்சேயிடமும் தீவிர விசாரணை நடந்தது. தங்களுக்குக் கிடைத்த தகவல்களைக் கொண்டு இந்தக் கொலைத்திட்டத்தின் "மூளை"யாக செயல்பட்டவன் ஆப்தே என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவனைப் பிடிக்க பல இடங்களில் வலை விரித்தனர். பம்பாய், புனா நகரங்களில் உள்ள பல்வேறு ஓட்டல்களுக்கும் யார் யார் வருகிறார்கள் என்று ரகசியமாகக் கண்காணித்தனர்.

ஓட்டல்களுக்கு வரும் டெலிபோன்களும் ஒட்டு கேட்கப்பட்டன. பிப்ரவரி 13_ந்தேதி ஆப்தேயும், கார்கரேயும் பம்பாய் சென்றனர். அங்குள்ள "அப்பல்லோ பைரக்ஸ்" என்ற ஓட்டலில் தங்கினர். இந்த சமயத்தில் ஆப்தேயின் காதலி (டாக்டரின் மகள்) அந்த ஓட்டலுக்கு போன் செய்தாள். "ஆப்தே அங்கு வந்திருக்கிறாரா? எந்த நெம்பர் அறையில் தங்கியிருக்கிறார்?" என்று கேட்டாள். ஓட்டல் வரவேற்பாளர் ஓட்டல் ரிஜிஸ்தர் புத்தகத்தைப் புரட்டிப்பார்த்துவிட்டு, ஆப்தேயின் ரூம் நெம்பரை சொன்னார். "நான் இன்னும் அரை மணி நேரத்தில் அங்கு வந்து அவரை சந்திக்கிறேன்" என்று கூறிவிட்டு டெலிபோனை வைத்துவிட்டாள் அந்தப்பெண்.

ஓட்டல் வரவேற்பாளர் இன்டர்காம் மூலம் ஆப்தேயுடன் தொடர்பு கொண்டு, "டாக்டரின் மகள் டெலிபோனில் பேசினார். இன்னும் அரை மணி நேரத்தில் ஓட்டலுக்கு வந்து உங்களைச் சந்திப்பதாகச் சொன்னார்" என்று தகவல் தெரிவித்தார். போலீசுக்கு பயந்து கவலையுடன் தலைமறைவாகத் திரிந்தாலும், தன் காதலி தன்னைச் சந்திக்க இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகிறாள் என்ற தகவல், ஆப்தேயின் மனதில் மகிழ்ச்சி அலைகளை எழுப்பியது. அவள் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தான்.

ஓட்டலுக்கு அவன் காதலி போன் செய்து பேசியபோது, போலீசார் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்தது அவனுக்குத் தெரியாது. பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும். அறைக்கதவு "டொக், டொக்" என்று தட்டப்படும் ஓசை கேட்டது. "காதலி வந்துவிட்டாள்" என்ற பரவசத்துடன் ஓடிச்சென்று கதவைத் திறந்தான் ஆப்தே. வெளியே அவன் கண்ட காட்சி அவனை நிலைகுலையச் செய்தன. அவன் கண்கள் நிலைகுத்தி நின்றன. பேயறைந்தவன்போல் ஆனான். காரணம் வெளியே நின்று கொண்டிருந்தது அவன் காதலி அல்ல; போலீசார்! காமத்தால் மதியிழந்த ஆப்தே அதற்கு மேல் தப்பிக்க வழி இல்லை என்பதை உணர்ந்தவனாக போலீசாரிடம் சரண் அடைந்தான்.

போலீசார் தயாராகக் கொண்டு போயிருந்த விலங்கை அவன் கைகளில் மாட்டினர். அதே அறையில் பதுங்கியிருந்த கார்கரேயும் கைது செய்யப்பட்டான். இதைத்தொடர்ந்து காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் பிப்ரவரி 15_ந்தேதிக்குள் கைது செய்யப்பட்டனர்.

கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே, மராட்டியத்தில் உக்சான் என்ற இடத்துக்கு அருகே கைது செய்யப்பட்டான். புனாவில் உள்ள காடுகளில் அலைந்து திரிந்துவிட்டு திரும்பிய திகம்பர் பாட்ஜே, ஒரு காளி கோவில் அருகே பிடிபட்டான். பாட்ஜேயின் வேலைக்காரன் இஸ்தியா பம்பாயில் போலீசாரிடம் சிக்கினான். ஜனவரி 20_ந்தேதி பிர்லா மாளிகையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தபோது கடைசி நேரத்தில் காந்தியைக் கொல்ல முடியாது என்று மறுத்துவிட்ட சாமியார் பாட்ஜே போலீஸ் தரப்பு சாட்சியாக ("அப்ரூவர்") மாறினான்.

"ஒருநாள் கோட்சேயும், ஆப்தேயும் இந்து மகா சபை தலைவர் வீரசவர்க்காரை சந்தித்தார்கள். பேச்சு முடிந்ததும் வாசல் வரை வந்து அவர்களை சவர்க்கார் வழியனுப்பினார். அப்போது வெற்றியோடு திரும்புங்கள்" என்று வாழ்த்தினார்" என்று போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் பாட்ஜே கூறினான். அந்த அடிப்படையில் வீரசவர்க்காரும் கைது செய்யப்பட்டார். சுதந்திரப் போராட்ட வீரரும், இந்து மகா சபையின் தலைவருமான சவர்க்கார் கைது செய்யப்பட்டது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. துப்பாக்கி வாங்க உதவி புரிந்ததாக குவாலியரை சேர்ந்த சதாசிவ பார்ச்சூர் என்ற டாக்டரும் கைதானார்


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes