உலகிலேயே மிகவும் விலை குறைந்த டாடா நிறுவனத்தின் "நானோ' கார் வெள்ளிக்கிழமை விற்பனைக்கு வருகிறது.
முதல் காரை தனது வாடிக்கையாளருக்கு நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா வழங்குகிறார்.
2003-ம் ஆண்டு ஒரு லட்சம் ரூபாயில் காரை அறிமுகப்படுத்தப் போவதாக ரத்தன் டாடா அறிவித்தார். டாடாவின் கனவு திட்டம் ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்குப் பிறகு நனவாகியுள்ளது.
மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் இந்த கார், கடந்து வந்த பாதை மிகவும் கரடு முரடானது. தனது கனவு கார் திட்டத்தை மேற்கு வங்கத்தில் சிங்கூர் எனுமிடத்தில் தொடங்க முடிவு செய்தார். சுமார் 75 சதவீத பணிகள் முடிந்த நிலையில் திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்பு காரணமாக அம்மாநிலத்திலிருந்து தனது கார் திட்டத்தை வாபஸ் பெற்றார் ரத்தன் டாடா. இதனால் குஜராத் மாநிலத்தில் கார் ஆலையை அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கார் வெளிவருவது தாமதமாவதை விரும்பாத ரத்தன் டாடா, பந்த் நகர் ஆலையில் இக்காரைத் தயாரிக்கத் திட்டமிட்டார். அதன்படி புதிய தொழிற்சாலை அமைக்கும் பணிகள் ஒருபுறம் குஜராத்தில் நடைபெற்றாலும், "நானோ' காரை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டதால் வெள்ளிக்கிழமை வாடிக்கையாளர்களிடம் வந்து சேர உள்ளது நானோ.
முதல் கட்டமாக 1.55 லட்சம் பேருக்கு இந்த ஆண்டுக்குள் காரை தயாரித்து அளிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போதைய பொருளாதார தேக்க நிலையிலும் "நானோ' காரை வாங்க 2.5 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்
0 comments :
Post a Comment