சித்த மருத்துவம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மூலிகைகள்தான். மூலிகைகள் இன்றி சித்த மருத்துவம் இல்லை என்றே கூறலாம்.
மிகக் கொடிய நோய்களுக்கான மருந்துகள் சித்த மருத்துவத்தில் இருந்தாலும்கூட, "வேர் பாரு தழை பாரு மிஞ்சினாக்கால் மெல்ல மெல்ல பற்பஞ் செந்தூரம் பாரு' என்பது சித்தர்களின் கூற்று.
அதாவது, நோய்களை மூலிகைகளைக் கொண்டு தீர்க்க முயல வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால்தான், மேம்படுத்த மருத்துவ முறைகளைக் கையாள வேண்டும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.
அரிய மூலிகைகள்: அத்தகைய மகத்துவம் வாய்ந்த மருத்துவ மூலிகைகளை இந்த நாள்களில் நாம் காண்பதே மிகவும் அரிதாகி விட்டது.
எனவே பெரும் பயன் மிக்க மூலிகைகளையும் அதன் பயன்களையும் மக்களுக்கு எளிதில் புரிய வைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இலவச "மூலிகைக் கண்காட்சி'க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி அண்ணா மருத்துவமனை வளாகத்தில் மூன்று தினங்கள் இந்த மூலிகைக் கண்காட்சி நடைபெறுகிறது.
கண்காட்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. இந்தக் கண்காட்சிக்கு சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கண்காட்சியில் 500-க்கும் மேற்பட்ட அரிய மூலிகைகள் இடம்பெறுகின்றன. இந்த அரிய மூலிகைகளின் மருத்துவப் பயன்களின் குறிப்புகளும் எழுதி வைக்கப்படும்.
சிறுநீரகத்தைக் காக்கும்...: ""சிறுநீரகத்துக்கு ஏற்ற சிறுபீளை, பூனைமீசை, கல்லீரலைக் காக்கும் கீழாநெல்லி, அதியமான் நெடுநாள் வாழ ஒளவை வழங்கிய ஆயுள் காக்கும் நெல்லி மற்றும் அதன் வகைகள், ஆண்மைக் குறைவைப் போக்கும் பூனைக்காலி, கருப்பைக் கோளாறுகளைத் தீர்க்கப் பயன்படும் அசோக மரம், புற்று நோயைப் புறக்கணிக்க உதவும் கொடிவேலியும் அதன் வகைகள் உள்பட பல்வேறு மூலிகைகள் மற்றும் அவற்றின் மருத்துவப் பயன்கள் விளக்கப்படும்.
உடல் உறுப்புகள்: மேலும் மனித உடலின் உறுப்பு மண்டலங்கள் செயல்பாடு குறித்தும் அவற்றில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கும் மூலிகைகள் பற்றியும் விளக்கப்படும்.
இலவச ஆலோசனை: இன்றைய வாழ்வியல் நோய்களான சர்க்கரை நோய், ஆஸ்துமா, சிறுநீரகக் கல் அடைப்பு, வயிற்றுப் புண், மூட்டு வலி, கழுத்து வலி, மாதவிடாய்க் கோளாறுகள், ஆண்மைக் குறைவு உள்ளிட்டவற்றுக்கு கண்காட்சி நடைபெறும் இடத்திலேயே இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.
புத்தகம், குறுந்தகடுகள்: வீட்டில் உள்ள பொருள்களையே மருந்தாகப் பயன்படுத்தும் வகையில் சித்தர்களின் எளிய வீட்டு மருத்துவக் குறிப்புகள் எனும் புத்தகமும் அரிய மூலிகைகள் அடங்கிய குறுந்தகடுகளும் கண்காட்சியின் சிறப்பு அம்சங்களாக வெளியிடப்பட உள்ளன.
தடுப்பே பிரதானம்: அனைவரும் நோயின்றி நெடுநாள் வாழவும், நோய்கள் வராமல் தடுத்துக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த அரிய மூலிகைகள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் சித்த மருத்துவ இறுதியாண்டு மாணவரும் கல்லூரி மாணவர் பேரவைச் செயலாளருமான சோ. தில்லைவாணன்
0 comments :
Post a Comment