முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்கு சென்ற போது டெல்லி விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அமெரிக்காவைச் சேர்ந்த காண்டினென்டல் விமான நிறுவன ஊழியர் ஒருவர் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அப்துல்கலாமிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டார்.
அப்துல்கலாமின் காலணியை கழற்ற வைத்து அவர் சோதனை நடத்தியுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றிய தகவல் சுமார் 2 1/2 மாதத்துக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை தான் வெளியில் தெரிய வந்தது.
இந்தியர்களின் மனதில் பாசத்தோடு பதிந்து இருக்கும் அப்துல்கலாமுக்கு செய்யப்பட்ட இந்த அவமரியாதை சம்பவம் பற்றி நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் பிரச்சினை கிளப்பப்பட்டது.
எல்லா கட்சி உறுப்பினர்களும் கொந்தளித்தனர்.இதையடுத்து அமெரிக்கா விமான நிறுவனம் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த திடீர் அதிரடி நடவடிக்கையால் காண்டினென்டல் விமான நிறுவனம் கதி கலங்கிப்போனது. அப்துல்கலாம் மனம் புண்படும்படி சம்பவம் நடத்திருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக நேற்று அந்த விமான நிறுவனம் ஒருஅறிக்கை வெளியிட்டது. ஆனால் அந்த மன்னிப்பு முறைப்படி அப்துல்கலாமுக்கு அனுப்பபடவில்லை என்று தெரிகிறது.
இது தொடர்பாக அப்துல்கலாமிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
காண்டினென்டல் விமான நிறுவனத்திடம் இருந்து யாரும் என்னிடம் இதுவரை தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கவில்லை மன்னிப்பு கடிதம் எதுவும் எனக்கு வரவில்லை.
இவ்வாறு அப்துல்கலாம் கூறினார்.
டெல்லி விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையை நீங்கள் அவமரியாதையாக கருதுகிறீர்களா? என்று அவரிடம் ஒரு நிருபர் கேட்டார். அதற்கு அப்துல்கலாம் பாராளுமன்றத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதுபற்றி அமெரிக்க விமான நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி அபர்னாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது:-
அப்துல்கலாமின் டெல்லி அலுவலகத்துக்கு நாங்கள் மன்னிப்பு கடிதம் அனுப்பிவிட்டோம். அவர் சுற்றுப்பயணத்தில் உள்ளதால் மன்னிப்பு கடிதம் பற்றி அவர் உதவியாளர் தகவல் தெரிவிக்க இயலாமல் இருக்கலாம்.
அப்துல்கலாம் டெல்லி திரும்புவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவர் வந்ததும் எங்கள் ஊழியர் நேரில் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்பார்.
இவ்வாறு அவர் கூறினார்
0 comments :
Post a Comment