மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாரத ஸ்டேட் வங்கியின் 154 கிளைகள் மற்றும் 1,540 ஏடிஎம்களை தொடங்கிவைத்தார். ஒரே நாளில் அதிகபட்சமான கிளைகள், ஏடிஎம்கள் திறக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
நாடு முழுவதும் புதிதாகத் திறக்கப்பட்ட வங்கிக் கிளைகள் மற்றும் தானியங்கி பணப்பட்டுவாடா மையத்தை (ஏடிஎம்) ஆன்லைன் மூலம் தொடங்கி வைத்தார் பிரணாப்.
சர்வதேச அளவில் 500 இடங்களில் உள்ள நிறுவனங்கள் பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கி 363-வது இடத்தில் உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 1,000 முதல் 1,200 கிளைகளைத் தொடங்க வங்கி முடிவு செய்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் வங்கிக்கு 11,849 கிளைகளும் 13,983 ஏடிஎம்களும் உள்ளன.
கிராமப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் கிளைகளைத் தொடங்குவதில் எஸ்பிஐ கவனம் செலுத்துகிறது. கடந்த ஆண்டு 807 கிளைகளை புதிதாகத் திறந்தது இவ் வங்கி. இதில் 479 கிளைகள் கிராமப் பகுதிகளில் திறக்கப்பட்டன.
விடியோ கான்ஃபரன்ஸிங் வசதி மூலம் திறக்கப்பட்ட வங்கிக்கிளை மேலாளர்களுடன் எஸ்பிஐ தலைவர் உரையாடினார். பல்வேறு தேவைகளுக்கு கடன் பெற விண்ணப்பித்தவர்களுக்கு ரூ. 9.73 கோடி கடன் வழங்கப்பட்டது. இதில் பெருமளவு தொகை விவசாயம் சார்ந்த கடனுதவியாகும்.
வங்கியின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான பெண் குழந்தையை தத்தெடுக்கும் திட்டத்தின்படி 25 சிறுமிகளை வங்கி தத்தெடுத்தது. 6 வயது முதல் 14 வயது வரையிலான இச்சிறுமிகளுக்கு கல்வி உதவித் தொகை ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை வங்கி வழங்கியது. இத்திட்டத்தின்கீழ் இதுவரை 18,921 சிறுமிகளை வங்கி தத்தெடுத்துள்ளது.
0 comments :
Post a Comment