புதிய சலுகை, புதிய கடன்

நிலுவையில் இருக்கும் பண்ணை சாரா கடன்களுக்கான வட்டியைக் குறைத்து, சில சலுகைகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதன் மூலமான ரூ.251 கோடி வட்டித் தள்ளுபடியை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று நிதியமைச்சர் க. அன்பழகன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு சலுகைகள் அளிப்பது அரசின் கடமை. அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருக்கவே முடியாது. ஆனால் இந்தச் சலுகைகள் உண்மையாகவே விவசாயிகளுக்குப் போய்ச் சேர்வதில்லை என்கிறபோது இந்த நோக்கம் முழுவதுமாக அடிபட்டுப் போகிறது என்பதுதான் கவலை அளிப்பதாக இருக்கிறது.

பண்ணை சாரா கடன் என்பது நேரடி விவசாயத்துக்கு ஆகும் செலவுகள் நீங்கலாக, விவசாயத்துக்கு நேரடியாகத் தொடர்பு இல்லாத செலவினங்களுக்காகத் தரப்படுவதாகும். இந்த வரையறைக்குள் கடன், வட்டிச் சலுகை அளிக்கப்படும்போது, விவசாயிகள் மட்டுமே பயன் பெறுவார்கள். ஆனால், சிறு தொழில் நடத்தவும், கட்டடம் கட்டவும் வாங்கிய கடன்களையும் பண்ணா சாரா கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்வதால் அந்தப் பலன் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை என்பதுடன் இதில் வேறு சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன.

ஏற்கெனவே, 2006-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி அறிவிக்கப்பட்ட வட்டிச் சலுகைத் திட்டத்தின் கீழ் ரூ.509 கோடி வசூலாகியுள்ளதாகவும் ரூ.127 கோடி வட்டிச் சலுகை பெற்றுள்ளனர் (இத்தொகையை அரசு வங்கிகளுக்கு வழங்க வேண்டும்) என்று கூறிய நிதியமைச்சர் தற்போது இன்னொரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். "31.3.2007க்குள் கட்ட வேண்டிய இறுதித் தவணையைக் கட்டத் தவறிய பண்ணை சாரா கூட்டுறவுக் கடன்களுக்கு மட்டுமே இந்த வட்டிச் சலுகை' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை எப்போது தரப்படும் என்றால், நிலுவைத் தொகையில் 25 சதவீதத்தை உடனடியாகச் செலுத்தி, அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீதி 75 சதவீதத் தொகையைச் செலுத்தினால் 12 சதவீத வட்டியில் 6 சதவீத வட்டிச் சலுகை பெறலாம் என்பது அரசின் அறிவிப்பு.

கடன்பெற்றவர், உண்மையாகவே தொழிலில் நஷ்டப்பட்டிருந்தால், எடுத்த எடுப்பில் 25 சதவீதக் கடன்தொகையைச் செலுத்தவும், அடுத்த மூன்று மாதத்தில் 75 சதவீதத் தொகையைச் செலுத்தவும் முடியாது என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால் கூட்டுறவு வங்கிகள் தங்கள் கடன் நிலுவையை முழுமையாக வசூலித்த சாதனையை நிகழ்த்தும் இந்த வாய்ப்பைத் தவற விடாது. இத்தகைய கடனாளிகளுக்கு, தற்போதைய கடனை அடைக்கத் தேவையான பணத்தைப் புதிய கடனாக அளிப்பார்கள். வங்கியைப் பொருத்தவரை நிலுவையை வசூலித்து சாதனை. ஆனால், அந்த நஷ்டத்தில் இருக்கும் கடனாளிக்கு 6 சதவீத வட்டிச் சலுகை கழிந்ததுபோக மீதித் தொகை, அதே 12 சதவீத வட்டிக்கு புதிய கடன்சுமையாக நீடிக்கும்.

அதேவேளையில், லாபம் சம்பாதித்தாலும்கூட கடனைச் செலுத்தத் தவறிய, வேண்டுமென்றே இத்தகைய கடன் தள்ளுபடிக்காக காத்திருந்த வசதி படைத்தவர்கள் பயன் பெற்றுவிடுவார்கள். அரசு சொல்வதைப் போல முதலில் 25 சதவீதத் தொகையை செலுத்தி, 3 மாதங்களில் மீதித் தொகையைச் செலுத்தி வட்டிச் சலுகையில் பயன் பெறுவார்கள்.

கடன் தள்ளுபடி, வட்டித் தள்ளுபடி, அபராத வட்டித் தள்ளுபடி ஆகியவற்றை அரசு பொதுப்படையாக அறிவிப்பதால்தான் இந்த ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. கடனாளி நிரந்தக் கடனாளியாகவும், வசதி படைத்திருந்தும் கடன்செலுத்தாமல் காத்திருந்தவர்கள் பயனாளிகளாகவும் மாறுகிறார்கள்.

கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்கும்போது கடன் பெறுபவரின் சொத்து விவரம், சொத்துப் பத்திரங்கள், நிலப் பத்திரங்களை வாங்கி வைத்துக்கொண்டுதான் கடன் வழங்குகின்றன. கடன் பெற்றவர் உண்மையிலேயே கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவரா என்பதைக் கண்டறிவது மிகச் சுலபம்.

மேலும், சில ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியவருக்கும் இதே சலுகை, சில லட்சம் கடன் வாங்கியவர்களுக்கும் இதே சலுகை என்பது அர்த்தமற்றது.

கடன் பெறுபவரின் வசதி, சொத்து விவரங்களுக்கு ஏற்பவும், வாங்கிய கடன்தொகை அளவு, முறையாகத் தவணை செலுத்திய காலங்களும், செலுத்த முடியாமல் போன காலங்களும் என வகைப்படுத்தி, சலுகைகளை நிர்ணயித்தால்தான் அரசின் திட்டம் உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களுக்குப் போய்ச் சேரும். இல்லையென்றால், கூட்டுறவு வங்கிகளின் கணக்கு ஏடுகளில் வரவு வைக்கப்பட்டு, புதிய கடன்கள்தான் கணக்கில் ஏறும். இடையில் மக்கள் பணம் வீணாகும்


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes