காந்தி கொலை வழக்கு 2
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகும் இரு நாடுகளிலும் கலவரங்கள் நீடித்தன. பாகிஸ்தானில் இருந்து சொத்து சுகங்களை இழந்து லட்சக்கணக்கான இந்துக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு ஓடிவந்தனர். பாகிஸ்தானில் இருந்து அகதிகள் வந்த ரெயில்களும் நடுவழியில் தாக்கப்பட்டன. வாஹ் என்ற இடத்தில் இருந்து வந்த அகதிகள் ரெயில் அடித்து நொறுக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
பஞ்சாப் எல்லையில் இருந்த கூஜ்ராத் என்ற ரெயில் நிலையத்துக்கு வந்த பல ரெயில்கள் தாக்கப்பட்டு, 500 பயணிகள் கொல்லப்பட்டனர். 1948 ஜனவரி 1_ந்தேதி குவெட்டாவில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த "குவெட்டா மெயில்", நடுவழியில் தாக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 850 அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர். பம்பாயில் நடந்த இந்துக்கள் கூட்டம் ஒன்றில், மாஸ்டர் தாராசிங் பேசுகையில், "முஸ்லிம்கள் எவரும் இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்கமாட்டார்கள். எனவே முஸ்லிம்களை இந்தியாவை விட்டே விரட்டவேண்டும்" என்று கூறினார்.
இதன் எதிரொலியாக பாகிஸ்தானில் உள்ள ராவல் பிண்டியில் இந்துக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். ஏராளமான பெண்கள் கற்பை காப்பாற்றிக் கொள்ள தீக்குளித்து மாண்டனர். 1947 நவம்பர் 30_ந்தேதி நடந்த இந்த சம்பவம் "ராவல்பிண்டி கற்பழிப்பு" என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்தது முதலே, அவரை கோட்சேயும், ஆப்தேயும் வெறுத்து வந்தனர்.
"ஹிந்து ராஷ்டிரா" பத்திரிகையில் 9.7.1947 இதழில் கோட்சே எழுதியிருந்ததாவது:_ "சகோதரர்களே! நம் தாய்நாடு கூறுபோடப்பட்டுவிட்டது. கழுகுகள் அவள் சதையை துண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு விட்டன. இந்துப் பெண்களின் மானம் நடுத்தெருவில் பறிக்கப்படுகிறது. எவ்வளவு நாட்கள் இதை சகித்துக்கொண்டிருப்பது? இந்துக்களின் நாட்டில் இந்துக்கள் லட்சக்கணக்கில் அகதிகளாக வசிப்பது எவ்வளவு கொடுமை? இந்துப் பெண்கள் கற்பழிக்கப்படுவது என் மனதைச் சுடுகிறது." _இவ்வாறு கோட்சே எழுதியிருந்தான்.
"காந்திஜி! பாகிஸ்தான் பிரிவினைக்கு நீங்கள் ஒப்புதல் அளித்ததன் மூலம் தேசத்தை கத்தியால் குத்தியிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எங்கள் தாய் நாட்டைத் துண்டு போடுகிறவர்களை தேசத்துரோகிகள் என்று கருதுகிறோம்" என்று காந்திக்கு எச்சரிக்கை விடுத்தான்.
கல்கத்தாவில் நவகாளியில் கலவர பகுதிகளில் பாத யாத்திரை செய்துவிட்டு டெல்லி திரும்பிய மகாத்மா காந்தி, டெல்லியிலும் கலவரங்கள் நடப்பதைக்கண்டு மனம் வருந்தி, மீண்டும் அமைதி ஏற்பட "சாகும் வரை உண்ணாவிரதம்" தொடங்கினார். டெல்லியில் பிர்லா மாளிகையில் 1948 ஜனவரி மாதம் 13_ந்தேதி பகல் 11.55 மணிக்கு இந்த உண்ணாவிரதம் ஆரம்பம் ஆயிற்று. உண்ணாவிரதத்தை நிறுத்த வேண்டுமானால் (1) சமீபத்தில் டெல்லியில் நடந்த கலவரத்தின்போது கோவில்களாகவும், அகதிகளின் குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட மசூதிகளை மீண்டும் மசூதிகளாக மாற்ற வேண்டும்.
(2) பாகிஸ்தானுக்கு ஓடிய முஸ்லிம்கள் இந்தியாவுக்கு திரும்ப விரும்பினால் அவர்களை இந்துக்கள் அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட 7 நிபந்தனைகளை விதித்திருந்தார். இந்த உண்ணாவிரதத்தின்போது, காந்தியின் உடல் நிலை கவலைக்கிடமாகியது. சிறுநீரகம் பழுதடையத் தொடங்கியது. இன்னும் சில நாட்கள் உண்ணாவிரதம் நீடித்தால், காந்தி உணர்வு இழந்து "கோமா" நிலைக்குப் போய்விடுவார், அதன் பிறகு பிழைக்க மாட்டார் என்று டாக்டர்கள் கூறினர்.
"காந்தி ஒருவேளை உயிர் பிழைத்தாலும் அவர் செயல்பட முடியாதபடி உடல் உறுப்புகள் நிரந்தரமாக பாதிக்கப்படலாம்" என்றும் கவலை தெரிவித்தனர். பிரதமர் நேருவும், பட்டேலும் மற்றும் பல தலைவர்களும் கேட்டுக்கொண்டும், உண்ணாவிரதத்தை நிறுத்த காந்திஜி மறுத்துவிட்டார். "என் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றால்தான் உண்ணா விரதத்தைக் கைவிடமுடியும்" என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
7 அம்ச கோரிக்கைகளுடன் இன்னொரு நிபந்தனையையும் விதித்தார் காந்தி. இந்தியா _ பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்கு இந்தியா ரூ.75 கோடி தரவேண்டும். இதில் உடனடியாக ரூ.20 கோடி தரப்பட்டது. மீதமுள்ள 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு தந்தால் அதை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தும் என்று இந்திய அரசாங்கம் நினைத்தது. அதனால் பணத்தை அனுப்பாமல் நிறுத்தி வைத்திருந்தது.
"பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுக்கவேண்டிய ரூ.55 கோடியை உடனே தந்துவிட வேண்டும். தயக்கம் காட்டக் கூடாது" என்று காந்தி வலியுறுத்தினார். அவருடைய உயிரைக் காப்பாற்ற, வேறு வழியின்றி இந்தக் கோரிக்கையை இந்திய அரசு ஏற்றது. "பாகிஸ்தானுக்கு சேரவேண்டிய ரூ.55 கோடியை உடனே அனுப்பி வைப்போம்" என்று துணைப்பிரதமர் வல்லபாய் பட்டேலும், நிதி மந்திரி ஆர்.கே.சண்முகம் செட்டியாரும் அறிவித்தனர்.
அமைதி காப்பதாக அனைத்து மதத்தலைவர்களும் கையெழுத்திட்டு உறுதிமொழி அளித்தனர். அதன் பிறகு ஜனவரி 18_ந்தேதி பகல் 12.45 மணிக்கு காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். காந்தியடிகள் தமது கடைசி உண்ணாவிரதத்தை தொடங்கியபோதே (ஜனவரி 13) அவரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் புனாவில் உருவாகத் தொடங்கியது. "பாகிஸ்தானுக்கு ரூ.55 கோடி கொடுக்கக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி விட்டார் மகாத்மா காந்தி" என்ற செய்தி "ஹிந்து ராஷ்டிரா" அலுவலகத்தில் இருந்த டெலிபிரிண்டரில் வந்தபோது, அதை கோட்சேயும், ஆப்தேயும் பார்த்தனர்.
"காந்தியின் போக்கு இந்துக்களுக்கு எதிராக இருக்கிறது. இந்துக்கள் மானத்துடன் வாழவேண்டும். காந்தி உயிரோடு இருக்கும்வரை அது நடக்காத காரியம். எனவே இந்துக்களின் நலனுக்காக அவரை கொலை செய்வது ஒன்றுதான் வழி" என்று கோட்சே கூறினான். அதை ஆப்தே ஆமோதித்தான். காந்தியைக் கொலை செய்வது எப்படி என்று இருவரும் தீவிர ஆலோசனை நடத்தினார்கள்.
"இனியும் காலம் கடத்தக்கூடாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் காந்தியின் கதையை முடித்துவிட வேண்டும்" என்ற முடிவுக்கு வந்தார்கள். "டெக்கான் கெஸ்ட் அவுஸ்" ஓட்டலை நடத்தி வந்த விஷ்ணு கார்கரே ஆப்தேயின் நண்பன். இந்து தீவிரவாதி. அவ்வப்போது முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வந்தவன். கோட்சே, ஆப்தே ஆகியோர் தங்கள் சதித்திட்டத்தை அவனிடம் கூற அவன் உடனே அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
பிறகு மதன்லால் பாவாவுடன் கோட்சேயும், ஆப்தேயும் பேசினார்கள். பாகிஸ்தானில் இருந்து அகதியாக ஓடிவந்தவன் பாவா. பாகிஸ்தான் பிரிவினையில் பல இன்னல்களை அனுபவித்தவன். அவனும் காந்தியை ஒழிப்பதற்கு உதவி செய்ய முன்வந்தான். "காந்தியை எந்த முறையில் கொலை செய்வது?" என்று இவர்கள் ஆலோசித்தார்கள்.
"துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதே உசிதமானது" என்றான் ஆப்தே. "ஒரு துப்பாக்கியும், கொஞ்சம் பணமும் இருந்தால் போதும். வெகு சீக்கிரம் காந்தியை தீர்த்துக்கட்டி விடலாம்" என்றான் அவன். துப்பாக்கிக்கு எங்கே போவது என்ற கேள்வி எழுந்தது. அப்போது ஆப்தே மனக்கண்ணில் தோன்றியவன் திகம்பர பாட்ஜே. புனாவில் "புத்தக வியாபாரம்" என்ற பெயரில் புரட்சிக்காரர்களுக்கு ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் சப்ளை செய்து வந்த போலிச்சாமியார்
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment