காந்தி கொலை வழக்கு 5

கோட்சேயும், ஆப்தேயும் பம்பாயில் இருந்தபோது, அவர்களை கோபால் கோட்சே, கார்கரே ஆகியோர் சந்தித்தனர். மறுநாள் (26_ந்தேதி) இரவு 9 மணிக்கு எல்லோரும் ஆள் சந்தடி இல்லாத ரெயில்வே குட்ஷெட்யார்டில் சந்தித்துப் பேசுவது என்று தீர்மானித்தனர். அதன்படி அன்றிரவு சந்தித்தனர். 20_ந்தேதி மேற்கொண்ட காந்தி கொலை முயற்சி ஏன் தோல்வியில் முடிந்தது என்பது பற்றி அலசி ஆராய்ந்தார்கள். அடுத்து என்ன செய்வது என்பது பற்றியும் விவாதித்தனர். "பல பேர் கூட்டமாகச் சேர்ந்து மகாத்மாவை கொலை செய்யத் திட்டமிட்டோம். அது மாபெரும் தவறு. தனி நபராக இருந்து கொலை செய்வதுதான் பலனளிக்கும்" என்றான் ஆப்தே.

"இந்துக்களுக்காகவும், இந்தியாவுக்காகவும் நான் என்னை தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன். நானே தனி மனிதனாக காந்தியை சுட்டுக்கொல்கிறேன்" என்று சபதம் செய்தான் கோட்சே. "ஒருவேளை இம்முறை காந்தி உயிர் தப்பிவிட்டால் பிறகு அவரை மீண்டும் கொல்ல முயற்சி செய்யமாட்டேன்" என்றும் தெரிவித்தான்.

கோட்சேயும், ஆப்தேயும் முயற்சி செய்து எப்படியாவது ஒரு நல்ல துப்பாக்கியை வாங்கவேண்டும், பிறகு கோபால் கோட்சே, கார்கரே ஆகியோரை பழைய டெல்லி ரெயில் நிலையம் அருகே சந்திக்கவேண்டும் என்று முடிவாயிற்று. பம்பாயில் துப்பாக்கி வாங்க கோட்சேயும், ஆப்தேயும் முயற்சி செய்தார்கள். வெற்றி பெறவில்லை. எனவே டெல்லியில் போய் பார்த்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்தனர். "பாங்க் சில்வர்" என்ற கம்பெனிக்கு சென்று ஹிந்து ராஷ்டிரா அமைப்புக்காக ரூ.10 ஆயிரம் கடன் பெற்றுக்கொண்டார்கள்.

27_ந்தேதி காலை 6.30 மணி விமானத்தில் பம்பாயில் இருந்து டெல்லிக்குப் பயணம் ஆனார்கள். வி.விநாயக்ராவ் என்ற பெயரில் கோட்சேயும் டி.நாராயணராவ் என்ற பெயரில் ஆப்தேயும் பயணம் செய்தனர். விமானத்தில் பயணம் செய்தபோது ஒரு விமானப் பணிப்பெண் ஆப்தேயை வெகுவாக கவர்ந்தாள். சரளமாக ஆங்கிலத்தில் பேசி அவளை மயக்கினான் ஆப்தே. "எனக்கு கைரேகை பார்க்கத் தெரியும். எங்கே உன் கையை நீட்டு!" என்று கூறி, அவள் கை ரேகையைப் பார்த்தான். "உனக்கு விரைவில் திருமணம் நடக்கும். என் கை ரேகைக்கும் உன் கை ரேகைக்கும் வெகு பொருத்தம். நாம் திருமணம் செய்து கொண்டால் இருவரும் சந்தோஷமாக வாழலாம்" என்றான் ஆப்தே.

அவனுடைய தோற்றமும், சரளமான ஆங்கிலமும் அந்த அழகிக்குப் பிடித்திருந்தது. "கல்யாணம்" என்ற சொல்லைக் கேட்டதுமே சொக்கிப்போனாள். "எனக்கு சம்மதம்" என்றாள். "அப்படியானால் இதுபற்றி இன்றிரவே பேசி முடிவுக்கு வரலாம். இம்பீரியல் ஓட்டலில் நாம் சந்திப்போம்" என்றான், ஆப்தே. அதற்கு அவள் சம்மதித்தாள். (ஆனால், பிறகு நடந்த சம்பவங்களால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை) டெல்லி போய்ச்சேர்ந்ததும், துப்பாக்கி வாங்குவதற்கு கோட்சேயும், ஆப்தேயும் முயற்சி செய்தார்கள்.

ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. அதனால் ரெயில் மூலம் குவாலியர் நகருக்கு சென்றார்கள். அங்கு இந்து தீவிரவாதியான டாக்டர் பார்ச்சூரை சந்தித்து துப்பாக்கி தேவைப்படுவதாக கூறினார்கள். இதில் ஏதாவது பிரச்சினை வரலாம் என்று நினைத்த டாக்டர் பார்ச்சூர், "கங்காதர் தாந்த்வாதே என்பவரை சந்தியுங்கள். அவரிடம் துப்பாக்கி கிடைக்கும்" என்றார். அதன்படி தாந்த்வாதேயை சந்தித்தனர். அவன், ஜகதீஷ் பிரசாத் கோயல் என்பவன் மூலமாக 300 ரூபாய்க்கு கறுப்பு நிற துப்பாக்கி (பெராட்டா பிஸ்டல்) ஒன்றை வாங்கித் தந்தான்.

மகிழ்ச்சி அடைந்த கோட்சேயும், ஆப்தேயும் குவாலியரை விட்டு ரெயிலில் புறப்பட்டு, 29_ந்தேதி காலை பழைய டெல்லிக்குப் போய்ச்சேர்ந்தார்கள். ரெயில்வே நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறை ஒன்றை "விநாயக் ராவ்" என்ற பெயரில் எடுத்து தங்கினார்கள். அங்கு அவர்களை கார்கரே சந்தித்தான். "துப்பாக்கி கிடைத்துவிட்டது" என்று அவனிடம் கோட்சே மகிழ்ச்சியுடன் கூறினான். "நாளை (30_ந்தேதி) காந்தியை சுடப்போகிறோம். இன்றிரவு நல்ல சாப்பாடு சாப்பிடுவோம்" என்று கோட்சே கூறினான். கார்கரே எப்போதும் சைவ சாப்பாடு சாப்பிடுபவன். எனவே மூவரும் சைவ சாப்பாடு சாப்பிட முடிவு செய்தனர். அரிசி சோறு, தயிர், சப்பாத்தி, காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டனர். பின்னர் அறைக்குத் திரும்பினர். தனக்கு மறுநாள் உள்ள பெரும் பொறுப்பை உணர்ந்திருந்த கோட்சே நன்றாக ஓய்வு எடுக்க விரும்பி படுக்கையில் போய் படுத்துக்கொண்டான். தூக்கம் வராததால் ஒரு துப்பறியும் நாவலை எடுத்து படிக்க ஆரம்பித்தான். ஆப்தேயும், கார்கரேயும் ரெயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு சினிமாத் தியேட்டருக்குச் சென்று ஆங்கிலப்படம் பார்த்தனர். மறுநாள் காலை ரெயில்வே கேண்டினில் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு மூவரும் பிர்லா மாளிகைக்கு சென்றனர். பிரார்த்தனை கூட்டத்துக்கு காந்தி வரும்போது நேருக்கு நேர் நின்று அவரை சுடப்போவதாக கோட்சே தெரிவித்தான்.

காந்தியை கோட்சே சுடும்போது அவனுக்கு இடைஞ்சலாக எதுவும் நிகழாமல் தடுக்க அவனுக்கு இரு புறத்திலும் ஆப்தேயும், கார்கரேயும் பாதுகாப்பாக நிற்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. பிறகு பிர்லா மாளிகையின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்கள். துப்பாக்கியை இயக்குவது எப்படி என்று அங்கு பயிற்சி பெற்றான் கோட்சே. மொத்தம் இருந்த 20 குண்டுகளில் 13 குண்டுகளை சுட்டுப் பழகுவதற்கு செலவிட்டான். காட்டில் இருந்த மரம், அதில் ஒரு குறிப்பிட்ட பகுதி ஆகியவற்றை ஆப்தே குறிப்பிட்டுக்காட்ட மிகச்சரியாக சுட்டான்கோட்சே. மீதி 7 குண்டுகளை துப்பாக்கியில் நிரப்பிக் கொண்டான். பின்னர் ரெயில் நிலைய ஓய்வு அறைக்குத் திரும்பினார்கள். காந்தியை சுடுவதற்கு பிர்லா மாளிகைக்குள் எப்படி நுழைவது என்று ஆலோசிக்கப்பட்டது.

இரண்டு வழிகள் யோசிக்கப்பட்டன. முதலாவது கோட்சே புகைப்படம் எடுப்பவர்போல கேமராவுடன் உள்ளே நுழையவேண்டும். கேமராவுக்குள் துப்பாக்கியை மறைத்துக்கொண்டு போகலாம். அடுத்தது முஸ்லிம் பெண் போல உடம்பை கறுப்பு நிற பர்தா துணியால் மூடிக்கொண்டு துப்பாக்கியை மறைத்துக்கொண்டு செல்லலாம். "முஸ்லிம் பெண் போல சென்றால் யாரும் சோதனை போடமாட்டார்கள். காந்தியின் அருகே செல்ல முடியும்" என்றான் கார்கரே.

"முஸ்லிம் பெண்மணி போல பர்தாவுக்குள் ஒளிந்துகொண்டுபோக நான் தயாராக இல்லை. அதைவிட காந்தியை சுடாமலேயே விட்டுவிடலாம்" என்றான் கோட்சே. "பெண் வேடத்தில் காந்தியை சுட முயன்று அதில் தோல்வி அடைகிறேன் என்று வைத்துக்கொள்வோம். முஸ்லிம் பெண் வேடத்தில் என் படம் பத்திரிகைகளில் வரும். அதைவிட வேறு அவமானம் எனக்கும், இந்து மதத்துக்கும் வேறு என்ன இருக்கமுடியும்? உலகமே என்னைப் பார்த்து சிரிக்கும்" என்று கூறினான் அவன். புகைப்படக்காரன் போல கேமராவுக்குள் துப்பாக்கியைக் கொண்டு போகும் திட்டத்தை ஆப்தே விரும்பவில்லை. "இப்போது சிறிய கேமராக்கள் வந்துவிட்டன. நிகழ்ச்சிகளுக்கு பெரிய கேமராக்களை யாரும் கொண்டு போவதில்லை. தவிர கடந்த 20_ந்தேதி புகைப்படக்காரர்கள் என்ற வேடத்தில்தான் பிர்லா மாளிகைக்குச் சென்றோம். மீண்டும் அதே தோற்றத்தில் போவது ஆபத்து" என்று கூறினான். நீண்ட ஆலோசனைகளுக்குப்பின் கடைசியாக ஆப்தே ஒரு யோசனையைச் சொன்னான்.

அப்போது, டெல்லி இளைஞர்களிடையே ராணுவ மாடல் உடை என்பது பிரபலமாக இருந்தது. முழுக்கால் சட்டையில் லூசான சட்டையை "இன்" செய்து கொள்ளவேண்டும். இடுப்புப்பகுதியில் சட்டை தொளதொளப்பாக இருக்கும். அந்தப் பகுதியில் சிறிய கைத்துப்பாக்கியை சொருகிக் கொள்ளலாம். யாரும் கண்டுபிடிக்க முடியாது. ஆப்தே சொன்ன இந்த யோசனையை கோட்சே ஏற்றுக்கொண்டான்.

பிறகு கோட்சேயும், ஆப்தேயும் கடைக்குச்சென்று சாம்பல் நிறத்தில் ராணுவ மாடல் உடையை வாங்கிக்கொண்டு ரெயில் நிலைய ஓய்வு அறைக்கு சென்றார்கள். அந்த அறையில் தங்குவதற்கான நேரம் முடியவும் முதல் வகுப்பு பிரயாணிகளுக்கான ஓய்வு அறையை எடுத்து அங்கு தங்கினார்கள். மாலை 4 மணியாகியது. காந்தியைக் கொலை செய்யும் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் கோட்சேயும், மற்ற இருவரும் புறப்படத் தயாரானார்கள்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes