காந்தி கொலை வழக்கு 8

மகாத்மா காந்தி கொலையையொட்டி கோட்சே உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தயாரிக்க நான்கு மாத காலம் பிடித்தது. இந்த வழக்கை விசாரிக்க டெல்லி செங்கோட்டையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக ஆத்மசரண் நியமிக்கப்பட்டார். இந்த நீதிமன்றத்தில் 1948 மே 27_ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 9 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்:

(1) நாதுராம் விநாயக் கோட்சே. வயது 37. ஆசிரியர், "ஹிந்து ராஷ்டிரா" நாளிதழ், புனா.

(2) நாராயண் தாதாத்ரேய ஆப்தே. வயது 34. நிர்வாக இயக்குனர், "ஹிந்து ராஷ்டிரா" நாளிதழ், புனா.

(3) விஷ்ணு ராமகிருஷ்ண கார்கரே. வயது 38. "டெக்கான் கெஸ்ட் அவுஸ்" உரிமையாளர். ஆமத்நகர்.

(4) திகம்பர ராமச்சந்திர பாட்ஜே. வயது 37. ஆயுத விற்பனையாளர், புனா. இவர் அரசாங்க தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

(5) கோபால் கோட்சே. வயது 27. நாதுராம் கோட்சேயின் தம்பி. ஸ்டோர் கீப்பர், ராணுவ கிடங்கு, புனா.

(6) மதன்லால் பாவா. வயது 20. அகதி. புனா.

(7) சங்கர் கிஸ்தியா. வயது 20. பாட்ஜேயின் வீட்டு வேலைக்காரன்.

(8) சதாசிவ பார்ச்சூர். வயது 47. டாக்டர். குவாலியர்.

(9) விநாயக் தாமோதர் சவர்க்கார். வயது 65. பாரிஸ்டர் மற்றும் நிலக்கிழார், பம்பாய். (மேற்கண்ட 9 பேர்களுடன் கங்காதர் தாந்த்வாதி, கங்காதர் ஜாதவ், சூர்யோதவ் சர்மா என்ற மூவரும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் என்று, குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்கள் இறுதிவரை போலீசாரிடம் சிக்கவில்லை) இந்த வழக்கில், போலீஸ் தரப்பு சாட்சிகளாக 149 பேர் இடம் பெற்றிருந்தனர்.

காந்தியை சுட்டுக் கொல்ல கோட்சே பயன்படுத்திய "கறுப்பு பெரட்டா" துப்பாக்கி, கொலையாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கொலையாளிகளின் உடைகள், சாமியார் பாட்ஜே கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் ஆகியவையும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கு விசாரணை திறந்த நீதிமன்றத்தில் நடந்தது. பத்திரிகை நிருபர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் விசாரணையைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரும்பிய வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ளவும், வாதத்தை எடுத்து வைக்கவும், ஆவணங்களை பார்வையிடவும் அனுமதிக்கப்பட்டனர். 1948 ஜுன் 22_ந்தேதி விசாரணை தொடங்கியது.

காந்தி கொலையை தடுக்க முடியாமல் போனாலும், குற்றவாளிகளைப் பிடிப்பதிலும், சாட்சிகளை தயார் செய்வதிலும் போலீசார் திறமையாக செயல்பட்டார்கள். போலீஸ் தரப்பு சாட்சிகள் சிலரின் சாட்சியங்கள் வருமாறு:-

மிஸ் மனோரமா சால்வே:_ எனக்கு ஆப்தேயைத் தெரியும். ஜனவரி 28_ந்தேதி பம்பாயில் உள்ள "ஸீ கிரீன்" ஓட்டலில் அவரை சந்தித்தேன். ஜனவரி 31_ந்தேதி டெல்லி வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடு செய்யுமாறும் டெல்லி "இந்து மகா சபை"க்கு அவர் பெயரில் தந்தி அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி தந்தி கொடுத்தேன்.

ராம்சிங் (இந்து மகாசபை அலுவலக கூர்க்கா):_ ஜனவரி 20_ந்தேதி குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேரை இந்து மகாசபை அலுவலகத்தில் பார்த்தேன். அவர்கள் பகல் 12 மணிக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். இரவு 8 மணிக்கு பதற்றத்துடன் திரும்பி வந்தார்கள். தங்கள் சாமான்களுடன் அவசரமாகத் திரும்பினார்கள்.

பேச்சிகா (மெரினா ஓட்டல் மானேஜர்):_ கோட்சேயும், ஆப்தேயும் எங்கள் ஓட்டலில் தங்கியிருந்தார்கள். அப்போது, கார்கரே, மதன்லால், பாட்ஜே ஆகியோர் வந்து அவர்களை சந்தித்தார்கள் (கோட்சேயையும், மற்றவர்களையும் அடையாளம் காட்டினார்).

காளிராம் (மெரினா ஓட்டல் சிப்பந்தி):_ கோட்சே தன் துணிகளை என்னிடம் கொடுத்து சலவை செய்து கொடுக்குமாறு சொன்னார். அந்தத் துணிகளை சலவைத் தொழிலாளியிடம் கொடுத்தேன்.

கன்யாலால் (மெரினா ஓட்டல் சிப்பந்தி):_ கோட்சேயின் துணிகளில் "என் வி ஜி" என்று ஆங்கிலத்தில் சலவைக்குறி போடப்பட்டிருந்தது. அந்தத் துணிகளை நான் சலவை செய்து கொடுத்தேன்.

சோத்ராம் (பிர்லா மாளிகை தொழிலாளி):_ ஜனவரி 20_ந்தேதி குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக கார்கரே, மதன்லால் ஆகியோர் பிர்லா மாளிகையை ஒட்டியுள்ள என் குடியிருப்பு வழியாக பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு பின்புறம் சென்றார்கள். அங்கு செல்ல அனுமதிப்பதற்காக எனக்கு 20 ரூபாய் கொடுத்தனர்.

பேராசிரியர் ஜெயின்:_ காந்தியை கொலை செய்யப்போவதாக மதன்லால் என்னிடம் சொன்னான். இவ்வாறு கொலை சதி பற்றி பல சாட்சிகள் கோர்ட்டில் சாட்சியம் அளித்தனர். சாட்சிகள் இந்தி, மராத்தி, தெலுங்கு முதலிய மொழிகளில் சாட்சியம் அளித்தனர். அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டியிருப்பதால், சாட்சியத்தை பதிவு செய்ய நீண்ட நேரம் பிடித்தது.

"கொலை செய்வதற்கு நான் சதி செய்யவில்லை" என்று ஆப்தே மறுத்தான். வீரசவர்க்காரும், கொலையில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று மறுத்தார். அவர் கூறியதாவது:-

"நான் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவன். பின்னர் இந்துமகாசபையைத் தொடங்கினேன். இந்து மகாசபை அலுவலகத்திற்கு பலரும் வந்து போவார்கள். அதுபோல் கோட்சேயும், ஆப்தேயும் வந்திருக்கிறார்கள். என்னை கோட்சேயும், ஆப்தேயும் சந்தித்து காந்தியைக் கொலை செய்யப்போவது பற்றி பேசியதாகவும், நான் வாசல் வரை வந்து "வெற்றியுடன் திரும்புங்கள்" என்று வாழ்த்தி வழியனுப்பியதாகவும் போலீஸ் தரப்பு சாட்சி பாட்ஜே கூறுவது பொய்.

நாங்கள் பேசியபோது பாட்ஜே அந்த இடத்தில் இல்லை. அப்படியிருக்க என்ன பேசினோம் என்று அவனுக்கு எப்படித் தெரியும்? அவன் கூறுவது அனைத்தும் கற்பனை." இவ்வாறு சவர்க்கார் கூறினார்.

தனக்கு மரண தண்டனை கிடைக்கப்போவது உறுதி என்று கோட்சேக்குத் தெரிந்திருந்தது. எனவே, கொலைக்கு முழுப்பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டு நண்பர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று அவன் விரும்பினான்.

எனவே, தனது வாக்குமூலத்தை மிக கவனமாகத் தயாரித்தான்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes