கல்லூரி விரிவுரையாளர்கள் பணி நியமனத்தில் வெளிப்படைத் தன்மையை நிரூபிக்க, கவுன்சலிங் மூலம் விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,500 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
இதன்படி, தமிழ்-92 விரிவுரையாளர்கள், ஆங்கிலம்-181, கணிதம்-101, இயற்பியல்-121, மைக்ரோபயாலஜி-1, தெலுங்கு-4, இந்தி-3, தாவரவியல்-68, விலங்கியல்-67, வரலாறு-97, புவியியல்-36, பொருளாதாரம்-84, கம்ப்யூட்டர் சயின்ஸ்-35, வேதியியல்-151, புள்ளியியல் 9, ஜியாலஜி-6 என 1,056 விரிவுரையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பணி நியமன ஆணை ஜூலை 8-ம் தேதி (புதன்கிழமை) வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட விரிவுரையாளர்களில் சிலர், குடும்ப சூழ்நிலை காரணமாக தாங்கள் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தவறான வழியைப் பின்பற்றுகின்றனர் என்று கூறப்படுகிறது.
இதனால், விரிவுரையாளர் பணி நியமனத்தில் வெளிப்படைத் தன்மை கேள்விக் குறியாகி உள்ளது.
விரிவுரையாளர் பணி நியமனத்தில் நம்பகத் தன்மையை நிரூபிக்கும் வகையில், கல்லூரிகளில் இட மாறுதல் கவுன்சலிங் நடத்துவது போல், கவுன்சலிங் மூலம் விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதாவது, கல்லூரிகளில் துறை வாரியாக உள்ள காலிப் பணியிட நிலவரம் பற்றிய பட்டியல் வெளியிட்டு, பணி வழங்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விரிவுரையாளர்கள் கல்விப் பணியில் முழுமையாக ஈடுபட முடியும் என்று கல்லூரி பேராசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆசிரியர் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்வது குறித்த அறிவிப்பு வெளியானபோது, உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி, "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தேர்வு வெளிப்படையாக, நியாயமான முறையில் நடைபெறும். எனவே, யாரும் இடைத் தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்' என்று வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment