மும்பை பங்குச் சந்தை வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையும் ஏற்றம் கண்டது. கடந்த சில மாதங்களாக வார இறுதி நாளில் வர்த்தகம் மந்தமாக புள்ளிகள் சரிவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது இந்நிலை மாறி 148 புள்ளிகள் அதிகரித்தது. இதனால் குறியீட்டெண் 15,378 ஆக உயர்ந்தது.
தேசிய பங்குச் சந்தையிலும் 44 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 4,578 புள்ளியாக அதிகரித்தது.
மாருதி சுஸýகி நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 25 சதவீதம் உயர்ந்ததால் அந்நிறுவனப் பங்கு விலை அதிகரித்தது. இதேபோல டாடா மோட்டாஸ் நிறுவனம் உள்ளிட்ட 23 நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன.
ஒட்டுமொத்தமாக ஆட்டோமொபைல் துறை பங்கு விலைகள் உயர்ந்தன. மாருதி நிறுவனப் பங்கு விலை 6 சதவீதம் உயர்ந்து ரூ. 1,377-க்கு விற்பனையாயின.
டாடா மோட்டார் நிறுவனப் பங்கு விலை 9 சதவீதம் அதிகரித்து ரூ. 373.50-க்கு விற்பனையானது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு விலை 1.20 சதவீதம் சரிந்தது. இந்நிறுவனத்தின் காலாண்டு நிதி நிலை அறிக்கை வெளியாகும் முன்னரே பங்கு விலைகள் சரிந்தன.
முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததைப் போல இந்நிறுவனத்தின் லாபம் 11.36 சதவீதம் சரிந்தது.
இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் நிறுவனப் பங்கு விலை 2.22 சதவீதம் அதிகரித்து ரூ. 2,003.35-க்கு விற்பனையானது. ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனப் பங்கு 5.16 சதவீதமும், ஹீரோ ஹோண்டா 4.19 சதவீதமும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 3.62 சதவீதமும், ஹிண்டால்கோ 3.31 சதவீதமும், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் 3.20 சதவீதமும், ஓஎன்ஜிசி பங்கு விலை 3.05 சதவீதமும் உயர்ந்தது.
ஓஎன்ஜிசி நிறுவனத்தின் லாபம் முதல் காலாண்டில் 27 சதவீதம் குறைந்தபோதிலும் அந்நிறுவனப் பங்கு விலை அதிகரித்தது.
சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வர்த்தக ஏற்றத்துக்கு ஏற்ப மும்பை பங்குச் சந்தையிலும் ஏற்றம் காணப்பட்டது. ஆசியச் சந்தையில் காணப்பட்ட ஏற்றம் பிற்பகலில் புள்ளிகள் உயர்வுக்குக் காரணமாக அமைந்தது.
நிறுவனங்களின் முதல் காலாண்டு செயல்பாடு லாபகரமாக இருந்ததைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள், புதிதாக பங்குகளை வாங்கத் தொடங்கியதாக தரகர்கள் குறிப்பிட்டனர்.
அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியதும் உள்ளூர் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை தோற்றுவித்தது. வியாழக்கிழமை வரை அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீட்டு அளவு ரூ. 511.94 கோடியாக இருந்தது
0 comments :
Post a Comment