அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் வடிவமைக்கப் பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான ராக்கெட்டின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.
நிலவுக்கு செல்வதற்காக, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால், உலகிலேயே மிக உயரமான ராக்கெட் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் 327 அடி உயரம் உடையது. அதிர்வுகள், வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றை கணிப்பதற்காக 700க்கும் மேற்பட்ட சென்சார் கருவிகள் இதில் உள்ளன.
இதற்கு "எரிஸ்-1 எக்ஸ்' என, பெயரிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக இயங்கினால், "ஸ்பேஸ் டாக்சி சர்வீஸ்'ஆக செயல்படும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறி வந்தனர். 2,225 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டின் பரிசோதனை ஓட்டத்திற்கான ஏற்பாடுகள் புளோரிடா மாகாணத்தில் உள்ள, கென்னடி ஏவுதளத்தில் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டன. வானிலை மோசமாக இருந்ததால், ராக்கெட் சோதனை 3 மணி நேரம் தாமதமானது.
பின்னர், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை ஓட்டம் இரண்டு நிமிடங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட இரண்டு நிமிடங்களில் பாராசூட் மூலம் அட்லாண்டிக் கடலில் இறக்கப்பட்டது. பின்னர், திட்டமிட்டபடி கப்பல் மூலம் மீட்கப்பட்டது.
கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பாப் கபன்னா கூறுகையில், "இதை என்னால் நம்ப முடியவில்லை. இது என் வாழ்நாளில் மிகவும் அற்புதமான நேரம். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டபோது, என் கண்களில் கண்ணீர் வடிந்தது' என்றார்.
எரிஸ் ராக்கெட் பரிசோதனை மேலாளர் பாப் எஸ் கூறுகையில், "நாங்கள் எதிர்பார்த்ததை விட, பரிசோதனை ஓட்டம் அதிகம் வெற்றிகரமாக முடிந்தது. இது மிகப்பெரிய வெற்றி' என்றார்.
0 comments :
Post a Comment