தற்போது, டில்லி, உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் இந்த, '3 ஜி' சேவை வர்த்தக ரீதியாக பயன்பாட்டில் உள்ளது. சென்னையில், '3 ஜி' சேவை அறிமுக விழா கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.
மத்திய அமைச்சர் ராஜா தலைமையில் நடந்த விழாவில், மருத்துவமனையில் இருந்துகொண்டே வீடியோ கான்பரன்சிங் மூலம், '3 ஜி' சேவையை, முதல்வர் கருணாநிதி துவக்கிவைத்தார். இந்த சேவைக்காக புதிதாக '3 ஜி' டவர்கள் அமைப்பது, ஏற்கனவே உள்ள '2 ஜி' டவர்களில் '3 ஜி'க்கான கருவிகளை பொருத்தும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளிலும் இந்த சேவை துவக்கப்படுகிறது. முதல் கட்டமாக 1.5 லட்சம் இணைப்புகள் வழங்க பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி முடிவெடுத்துள்ளது.
அத்துடன் 6.4 லட்சம், '2 ஜி' மொபைல் இணைப்புகளையும் வழங்குவதற்கான பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. இதற்காக ஆயிரம் '2 ஜி' மற்றும் 561 '3 ஜி' பேஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த இணைப்புகள் வழங்கப்படுவதன் மூலம் சென்னையில் 19 லட்சம் மொபைல் இணைப்புகள் என்ற இலக்கை சென்னை தொலைபேசி எட்டிவிடும். '3 ஜி' சேவை வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில், சென்னை நகர மக்களுக்கு, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே பேசும் வீடியோ காலிங் வசதி கிடைக்கும்.
அத்துடன், வீடியோ ஸ்ட்ரீமிங், வீடியோ கேம், அதிவிரைவு இன்டர்நெட் வசதி, வீடியோ கான்பரன்சிங் வசதி, மொபைல் 'டிவி' வசதி ஆகியவை கிடைக்கும். இந்த சேவைக்கான, '3 ஜி' வசதியுள்ள மொபைல் போன்கள் தற்போதே கடைகளில் விற்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்த '3 ஜி' சேவையில், மொபைல் போன் இருப்பிடத்தை எளிதில் கண்டறியும் வசதியும் உள்ளது.
புதிதாக வழங்கப்படும் '3 ஜி' சேவை எண்கள் 94455 என துவங்குமாறு அமைக்கப்பட்டுள்ளன. புதிய எண்கள் தவிர ஏற்கனவே '2 ஜி' சேவையில் உள்ள வாடிக்கையாளர்கள் '3 ஜி' சேவைக்கு மாறும்போது, பழைய எண்ணையே பயன்படுத்தும் வசதியும் அளிப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், '3 ஜி'க்குரிய கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, '3 ஜி'க்கான புதிய சிம்கார்டு 59 ரூபாய்க்கு கிடைக்கும். பிரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு திட்டங்களும் இதில் உள்ளன. பிரீபெய்டு திட்டத்தில் 120 ரூபாய், சூப்பர் 300, 600 மற்றும் 1,350 ஆகிய நான்கு திட்டங்கள் உள்ளன.
இத்திட்டத்தில் உள்ளூர் வீடியோ அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 1.50 காசுகளும், எஸ்.டி.டி., அழைப்புகளில் சூப்பர் 1,350 திட்டத்தைத் தவிர மற்ற திட்டங்களுக்கு 2.50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் 1,350 திட்டத்திற்கு இரண்டு ரூபாய் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டணத்தை குறைப்பதற்கான சூப்பர் வேல்யூ வவுச்சர்களும் உள்ளன. போஸ்ட் பெய்டு திட்டத்தில், '2 ஜி'யில் உள்ள 225 ரூபாய் மாத கட்டண திட்டம் இதிலும் உள்ளது.
இது தவிர 500, 800, 1,000 மற்றும் 2,500 ரூபாய் மாத கட்டண திட்டங்களும் உள்ளன. இதில்,ரூ. 2,500 மாத கட்டண திட்டத்தை தவிர மற்ற திட்டங்களில் உள்ளூர் வீடியோ கால் அழைப்புகளுக்கு 1.50 ரூபாயும், 2,500 திட்டத்திற்கு ஒரு ரூபாயும் நிமிடத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எஸ்.டி.டி., அழைப்புகளுக்கு 1,000 மற்றும் 2,500 மாத கட்டண திட்டங்களுக்கு நிமிடத்திற்கு இரண்டு ரூபாயும் மற்ற திட்டங்களுக்கு நிமிடத்திற்கு 2.50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் அனைத்துக் கட்ட பணிகளும் முடிவடைந்து '3 ஜி' சேவை வர்த்தக ரீதியாக மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.
விரைவில் இந்த சேவை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது
0 comments :
Post a Comment