மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை 270 புள்ளிகள் உயர்ந்தது. இதனால் குறியீட்டெண் 17 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து 17,126 புள்ளியைத் தொட்டது.
கடந்த ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு தற்போதுதான் பங்குச் சந்தை குறியீட்டெண் 17 ஆயிரம் புள்ளிகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 16 மாதங்களுக்குப் பிறகு புள்ளிகள் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் லேமன் சகோதரர்கள் நிறுவனம் திவாலானதைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் புள்ளிகள் மளமளவென சரியத் தொடங்கியது.
ஒரு கட்டத்தில் 8 ஆயிரம் புள்ளிகள் வரை கீழிறங்கியது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து குறியீட்டெண் படிப்படியாக முன்னேறி தற்போது 17 ஆயிரம் புள்ளிகளைக் கடந்துள்ளது.
இம்மாதம் 7-ம் தேதி 16 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியத் தொழில் நிறுவனங்களின் காலாண்டு வருவாய் உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியதால் புள்ளிகள் உயர்ந்ததாக பங்குச் சந்தை தரகர்கள் தெரிவித்தனர்.
இதேபோல தேசிய பங்குச் சந்தையிலும் 77 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 5,007 ஆக உயர்ந்தது.
30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 26 நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு விற்பனையாயின. பார்தி ஏர்டெல், கிராஸிம், ஐடிசி, ஓஎன்ஜிசி ஆகிய நான்கு நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு விலை 1.63 சதவீதம் உயர்ந்து ரூ. 2,201.20-க்கு விற்பனையானது. இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்கு 0.90 சதவீதம் உயர்ந்து ரூ. 2,308.40-க்கு விற்பனையானது. இரு நிறுவனங்களின் பங்கு விலைகள் மொத்த பங்கு விற்பனையில் 23 சதவீதத்தை பிடித்தன.
நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சியை எட்டும் என்ற செய்தி வெளியானதால் வங்கிகள் மற்றும் நிதித்துறை நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன. பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு விலை 5 சதவீதம் அதிகரித்து ரூ. 2,195.70-க்கு விற்பனையானது.
ஆயில் இந்தியா நிறுவன பங்கு விலை மிக அதிகபட்சமாக 8.62 சதவீதம் உயர்ந்து ரூ. 1,140.55-க்கு விற்பனையானது.
மாருதி சுஸýகி நிறுவனப் பங்குகள் 3.70 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி பங்கு 4.63 சதவீதமும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் ஸ்டெர்லைட் பங்குகள் தலா ரூ. 3.46 சதவீதமும் உயர்ந்தன.
மொத்தம் 1,598 நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிக விலைக்கு விற்பனையாயின. 1,181 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன
0 comments :
Post a Comment