"மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" -டென்ஷன் டென்ஷன் ..!

நரம்புகள் விம்மிப் புடைக்கும் அளவுக்கு சில நிகழ்ச்சிகள் நம்மை டென்ஷனாக்கி விடுகின்றன.பல சமயத்தில் படபடப்பு உச்சகட்டத்துக்கு போய் கை கால்களெல்லாம் உத்தர ஆரம்பித்து விடுகின்றன! இன்னும் சில சமயம் இரண்டடி தள்ளி நிற்பவனுக்குக் கேட்கும் அளவுக்குக் கூட நம் இதயம் வேகமாகத் துடிக்கிறது ! ஏதோ இனம் புரியாத கவலைக் கடலுக்குள் மூழ்குவது போன்ற பீதி நம் நெஞ்சைக் கவ்விக்கொள்கிறது.எல்லாவற்றுக்கும் காரணம் டென்ஷன் !

பல சமயங்களில் நாம் டென்ஷன் ஆவதே தேவையில்லாத விஷயங்களால் தான் ! உதாரணத்துக்கு ஒரு சம்பவம்.

"பேராசிரியர் ஒருவர் மாற்றலாகி இரு ஊரிலிருக்கும் கல்லூரிக்குப் போகிறார்.அவரை வழி அனுப்புவதற்காக அவருடன் பணிபுரியும் நான்கு பேராசிரியர்களும் ரயில் நிலையத்துக்கு வந்திருக்கிறார்கள்.ரயில் புறப்பட கொஞ்சம் நேரம் இருக்க ..பேராசிரியர்கள் பிளாட்பாரத்தில் நின்று ஜாலியாக பேச ஆரம்பிக்கிறார்கள்.பேச்சு சுவாரஸ்யத்தில் ரயில் நகர ஆரம்பித்து விட்டதையும் அவர்கள் கவனிக்கவில்லை.சடாரெனப் படபடப்பு வந்துவிடுகிறது.எந்த கம்பார்ட்மென்ட்டில் ஏறினாலும் பரவாயில்லை...அடுத்த ஸ்டேஷனில் சரியான கம்பார்ட்மென்ட்டுக்கு வந்துவிடலாம்" என்று நெரிசலில் முட்டி மோதி நான்கு பேராசிரியர்கள் எப்படியோ ரயிலேறி விடுகிறார்கள்.ஆனால்,கையில் பெட்டி படுக்கையுடன் இருந்த ஒரு பேராசிரியரால் மட்டும் ரயிலில் ஏற முடியவில்லை ! அவரைப் பார்த்து பரிதாபப்பட்ட போர்ட்டர் ஒருவர் ,"கவலைப்படாதீர்கள்.. பத்து நிமிடத்தில் இன்னும் ஒரு ரயில் இருக்கிறது.அதிலே நீங்கள் போய்விடலாம்" என்று ஆறுதல் வார்த்தை சொல்கிறார்.

அதற்கு அந்தப் பேராசிரியர் ."அடுத்து பத்து நிமிடத்தில் இன்னொரு ரயில் இருப்பது எனக்குத் தெரியும்.ஆனால் நான் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை.என் சக பேராசிரியர்களை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது.காரணம் அவர்கள் என்னை வழியனுப்ப வந்தவர்கள்.ஆனால் இங்கே ஏற்பட்ட அமளி துமளியில் அவர்கள் ரயிலில் ஏறிவிட்டார்கள் !' என்றார்.இப்படித் தான் படபடப்பும் டென்ஷனும் சாதாரண விசயங்களிக் கூட நம் கண்ணிலிருந்து மறைத்து விடுகின்றன ! நாம் பதட்டத்தில் இருக்கும் போது எத்தனை கஷ்டப்பட்டு ஒரு வேலையைச் செய்தாலும் சரி,அதனால் ஏற்படும் பலன் பெரும்பாலும் பூஜ்யமாகத் தான் இருக்கும் !

ஒரு சமயம் நான்கு குடிகாரர்கள் ஒன்றாக மது அருந்தப் போனார்கள்.போதை தலைக்கேறும் மட்டும் குடித்த அவர்கள் வீட்டுக்குத் திரும்புவதற்காகப் புறப்பட்ட நேரத்தில் நன்றாக இருட்டி விட்டது.ஆற்றை கடந்து தான் மறு கரைக்கும் போக வேண்டும்.எனவே பரிசல்காரனைத் தேடினார்கள்.அவனைக் காணவில்லை.ஆனால் பரிசல் மட்டும் இருந்தது.பரிசலை தாங்களே ஓட்டிச் சென்று விடலாம் என்ற நம்பிக்கையில்,பரிசலில் ஏறி உட்கார்ந்து துடுப்புப் போட ஆரம்பித்தார்கள்.ஒரு மணி நேரமானது..இரண்டு மணி நேரமானது..மூன்று மணி நேரமும் ஆனது ஆனால் மறுகரை மட்டும் வரவே இல்லை ! அதற்குள் மெல்லப் பொழுதும் விடிந்து..போதையும் மெல்லத் தெளிய ..அப்போது தான் கரையில் இருக்கும் மரத்தில் பரியல் கட்டப்பட்டிருப்பதை அந்தக் குடிகாரர்கள் கவனித்தார்கள் !

குடிகாரர்கள் கண்களிப் போதையும் இருட்டும் மறைத்து போல பதட்டம் நம்முடைய கண்களைப் பலசமயம் உண்மையையும் நிதர்சனத்தையும் பார்க்கவிடாமல் மறைத்து விடுகிறது.

புத்த மதத்தில் ஒரு பிரிவாக விளங்கும் இலக்கியத்தில் உள்ள ஒரு கதை இது !

ஓர் அரசர் தன் நாட்டுக்கு முதலமைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க நினைத்தார்.சம தகுதி பெற்ற நான்கு பேர் அவரது அமைச்சரவையில் இருந்ததால்,ஏதாவது ஒரு பரீட்சை வைத்து அந்த நால்வரில் ஒருவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்க முடிவெடுத்தார்.ஒரு நாள் அந்த நால்வரையும் அழைத்து, "என்னிடம் ஒரு பூட்டு இருக்கிறது.கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட இந்த விஞ்சான பூட்டைத் திறக்க நாளை காலை உங்கள் நால்வருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.யார் இந்தப் பூட்டிக் குறைவான நேரத்தில் திறக்கிறாரோ அவரே நாட்டின் முதலமைச்சர்" என்று அறிவித்தார்.

முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில்,அன்று இரவு முழுதும் விடிய விடியப் பூட்டு பற்றிய ஓலைச் சுவடிகளையும் கணிதம் பற்றிய எல்லாக் குறிப்புகளையும் அந்த அமைச்சர்கள் தேடினார்கள்.எதுவும் கிடைக்கவில்லை.அந்த நால்வரில் ஒருவர் மட்டும்,ஒரு சில ஓலைச் சுவடிகளை புரட்டிவிட்டுத் தூங்கப் போய்விட்டார்.

மறுநாள் அரசவையில் ..கணிதத் தந்திரத்தால் மட்டுமே திறக்கக்கூடிய பூட்டை அரசரின் சேவகர்கள் தூக்கிக் கொண்டு வந்து நால்வரின் முன்பும் வைத்தார்கள்.எதிரே அரசர் வீற்றிருந்தார்.பூட்டின் பிரமாண்டம் எல்லோரின் படபடப்பையும் இன்னும் அதிகரித்து.கையோடு எடுத்து வந்த ஓலைச்சுவடிகளை அவர்கள் முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள்.ஆனால்,கணிதப் பூட்டைத் திறக்கும் வழி மட்டும் அவர்களுக்குப் புலப்படவில்லை! தோல்வியை ஒப்புக் கொண்டார்கள்.

இரவிலே நன்றாகத் தூங்கிய அந்த ஓர் அமைச்சர்,கடைசியாக எழுந்து வந்தார்.அவர் பூட்டின் அருகில் வந்து பார்த்தார்.என்ன ஆச்சர்யம் ! பூட்டு பூட்டப்படவே இல்லை.சாவியே இல்லாமல்,சூத்திரமே இல்லாமல் வர பூட்டை எளிதாகத் திறக்க,அரசர் அவரையே முதலமைச்சர் ஆக்கினார்.

பிரச்னையைத் தீர்க்க வேண்டுமன்றால்,முதலில் பிரச்னையைப் புரிந்து கொள்ள வேண்டும்.பிரச்சனையைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் மனம் பதட்டம் இல்லாமல் சமன் நிலையில் இருக்க வேண்டும்.



0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes