பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் உயிருக்கு டெமரால் என்ற ஊசிதான் எமனாகிவிட்டது என்று அவருடைய குடும்ப வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இதை உறுதிப்படுத்த முடியவில்லை.
மைக்கேல் ஜாக்சன் (50) இசை உலகில் மீண்டும் புகழ்பெற மிகப்பெரிய நிகழ்ச்சிக்கு தயார் செய்துகொண்டிருந்தார். அதற்கான ஒத்திகைகளிலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டார்.
அந்த ஒத்திகைகளின்போது உற்சாகமாகச் செயல்படவும், தூக்கம், ஓய்வு குறைவாக இருந்ததால் உடல் சோர்வு ஏற்படாமல் இருக்கவும் டெமரால் என்ற ஊசியை அவர் தினமும் போட்டுவந்தாராம். அது மார்பைன் என்ற ஊசியைப் போல வலி மறப்பு ஊசியாகும். அந்த ஊசியை அளவுக்கு அதிகமாகப் போட்டுக்கொண்டால் மயக்கம் ஏற்பட்டு சுய நினைவு தப்பிவிடும்.
புதன்கிழமை நள்ளிரவுவரை நடன, இசை ஒத்திகையில் தீவிரமாக ஈடுபட்ட மைக்கேல் ஜாக்சன் அடுத்த நாள் காலை 11.30 மணிக்கு டெமரால் ஊசி போட்டுக்கொண்டார். லாஸ்-வேகாஸ் நகரைச் சேர்ந்த டாக்டர் கான்ராட் ராபர்ட் முர்ரே இதய சிகிச்சை நிபுணர் ஆவார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டராகப் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். அவர்தான் சம்பவம் நடந்த வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு அவருக்கு டெமரால் ஊசி மருந்தைச் செலுத்தியிருக்கிறார்.
அதன் பிறகு மைக்கேல் ஜாக்சனுக்கு மூச்சு நின்றுவிட்டது. அதிலிருந்து அந்த மருந்து அளவுக்கு அதிகமாகச் செலுத்தப்பட்டது தெரியவருகிறது.
கட்டுமஸ்தாக இருந்த மைக்கேல் ஜாக்சன் இறப்பின்போது வெறும் எலும்புக்கூடாகத்தான் இருந்தார் என்று அவருடைய குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். அந்த நிலைமை ஒரே நாளில் வந்திருக்க முடியாது.
டெமரால் போல வேறு சில போதை ஊசிகளையும் அவர் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கலாம்.
2007-ம் ஆண்டு பெவர்லி ஹில்ஸ் (ஹாலிவுட்) பகுதியைச் சேர்ந்த மருந்துக் கடை ஒன்று, மைக்கேல் ஜாக்சன் தங்களிடம் மருந்து வாங்கிவிட்டு ஒரு லட்சம் டாலர் பாக்கி வைத்திருக்கிறார் என்று வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியது. பிறகு மாதம் 10,000 டாலர்கள் என்று தந்து கடனை அடைப்பதாக சமரசம் செய்துகொள்ளப்பட்டது.
மைக்கேல் ஜாக்சன் தன்னுடைய முக அழகை மாற்றிக்கொள்ள செய்துகொண்ட முக மாற்று அறுவைச் சிகிச்சையால்தான் தன்னுடைய உடல் நலத்தைப் பெரிய அளவில் இழந்தார். முகம் மாறினாலும் அதைத் தொடர்ந்து அவர் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்து, மாத்திரைகளின் அளவு அதிகரித்தது. அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனது.
2 உயில்கள்: மைக்கேல் ஜாக்சன் குறைந்தபட்சம் 2 உயில்களையாவது விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்கிறார்கள் அவருடைய முன்னாள் நிதி ஆலோசகர்கள். பிரிட்டனில் வெளியாகும் "தி இன்டிபென்டன்ட்' என்ற பத்திரிகை இதைத் தெரிவிக்கிறது. அவருடைய சொத்து மதிப்பு கோடிக்கணக்கான ரூபாய்கள் இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் மொத்த சொத்து என்ன என்று அவருடைய குடும்பத்தாராவது அறிவார்களா என்பது சந்தேகம்தான். அவருடைய சொத்தைவிட கடன் அதிகம் என்பாரும் உண்டு.
அவர் சம்பாதித்த பணத்தைப் போலவே வம்பு, வழக்குகளில் சிக்கி தொலைத்த பணமும் அதிகம். பீட்டில்ஸ் பாடல்களை மிக அதிக விலை கொடுத்து வாங்கினார் மைக்கேல் ஜாக்சன். பிறகு அவற்றில் ஒரு பகுதியை சோனி நிறுவனத்துக்கு 1995-ல் விற்பனை செய்தார்.
ஜாக்சன் பணம் சம்பாதித்தாலும் கடன் சம்பாதித்தாலும் பெரும் தொகையாகத்தான் சம்பாதித்தார். அவருடைய குடும்பத்தார் யாரும் அவருடைய வரவு, செலவு கணக்கைப் பார்க்கும் நிலையில் இல்லாததால் இடைத்தரகர்கள் பலர் பிழைக்க நேர்ந்தது என்பதே உண்மை.
0 comments :
Post a Comment