விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் ஓர் அருமையான மீட்பு சாதனம் ""சிஸ்டம் ரெஸ்டோர்.” விண்டோஸ் ஏதேனும் பிரச்னையால், கிராஷ் ஆகி முடங்கிப் போகும்போது, இந்த சிஸ்டம் ரெஸ்டோர் நமக்கு உதவிடுகிறது.
இதனை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமே உருவாக்கி வைக்கிறது. நாமாகவும் குறிப்பிட்ட சில நிகழ்வுகளில் சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட்களை ஏற்படுத்தி வைக்கலாம்.
சிஸ்டம் கிராஷ் ஆவது மட்டுமின்றி, கம்ப்யூட்டரில் வேறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், இந்த சிஸ்டம் ரெஸ்டோர் பயன்படுகிறது. விண்டோஸ் சிஸ்டம் நன்றாக இயங்கிய எந்த ஒரு நாளில் இருந்ததோ, அந்த நிலைக்கு சிஸ்டத்தினைக் கொண்டு செல்வதே, சிஸ்டம் ரெஸ்டோர் ஆகும்.
இதனைப் புரிந்து கொள்ள அது எப்படி செயல்படுகிறது என்பதனைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். இது குறித்த தகவல்களை இங்கு காணலாம்.
சிஸ்டம் ரெஸ்டோர் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைய முடியாது. எடுத்துக் காட்டாக, நீங்கள் உருவாக்கிய அல்லது பயன்படுத்திய பெர்சனல் பைல்களை, தவறுதலாக அழித்துவிட்டால், அவற்றை மீட்டுப் பெறுவதில் சிஸ்டம் ரெஸ்டோர் உதவிட முடியாது. ஆனால், கம்ப்யூட்டர் சரியாக இயங்காத போது, முழுக்கவே இயங்காத போது இது பயன்படும்.
ரெஸ்டோர் பாய்ண்ட்ஸ்:
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், தானாகவே வாரம் ஒருமுறை ரெஸ்டோர் பாய்ண்ட்களை ஏற்படுத்திக் கொள்கிறது. மேலும், ஏதேனும் புரோகிராம் அல்லது சாதனம் ஒன்றை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து கொள்ளும் போதும், சாதனம் ஒன்றை இணைத்துப் பதிந்திடும் போது, அதற்கு முன்னதாகவே, இந்த சிஸ்டம் ரெஸ்டோர் ஏற்படுத்தப்படுகிறது.
அத்துடன், ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றிலிருந்து நீங்கள் பழைய நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்ல முயற்சிக்கும் போதும், ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்று ஏற்படுத்தப்படும். இதன் மூலம் நீங்கள் மேற்கொள்ளும் ரெஸ்டோர் பாய்ண்ட் இயக்கம், நீங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றாலோ, அல்லது, மேலும் பிரச்னையைத் தருவதாக இருந்தாலோ, பழைய நிலைக்கே கம்ப்யூட்டரைக் கொண்டு செல்ல இது உதவும்.
ரெஸ்டோர் பாய்ண்ட்களில் விண்டோஸ் சிஸ்டம் பைல்ஸ், புரோகிராம் பைல்ஸ் மற்றும் ரெஜிஸ்ட்ரி செட்டிங்ஸ் ஆகியவை அனைத்தும் அமைக்கப்படுகின்றன. சிஸ்டம் ரெஸ்டோர் உங்களுடைய சொந்தப் பைல்களை ஒரு போதும் மீட்டுக் கொண்டு வரும் வகையில் அமைத்துக் கொள்ளாது. எனவே, எந்த ஒரு அவசர அல்லது ஆபத்து நிலையிலும், உங்களுடைய பெர்சனல் பைல்களை மீட்டு எடுக்க ரெஸ்டோர் பாய்ண்ட்டைப் பயன்படுத்தக் கூடாது.
சிஸ்டம் ரெஸ்டோர் உதவிடும் முறை:
ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றிலிருந்து, சிஸ்டத்தை மீட்டெடுக்கையில், உங்களுடைய சிஸ்டம் பைல்கள், புரோகிராம் பைல்கள் மற்றும் ரெஜிஸ்ட்ரி அமைப்புகள் மீண்டும் அமைக்கப் படுகின்றன. அந்த குறிப்பிட்ட ரெஸ்டோர் பாய்ண்ட் ஏற்படுத்துகையில், இந்த பைல்கள் எந்த நிலையில் இருந்தனவோ, அவை மட்டுமே அமைக்கப்படும். எடுத்துக் காட்டாக, அந்த ரெஸ்டோர் பாய்ண்ட்டுக்குப் பின்னர், இன்ஸ்டால் செய்யப்பட்ட எந்த புரோகிராமும் இருக்காது.
இதன் மூலம் புதிய சாதனங்களுக்கான ட்ரைவர், புதிய புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்கையில், ஏதேனும் ஒரு பிரச்னையினால், அவை கம்ப்யூட்டர் இயங்குவதில் பிரச்னையை ஏற்படுத்தலாம். கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை முடக்கலாம்.
இவற்றை நீக்க இவற்றின் பைல்களை தேடி நீக்குவதனைக் காட்டிலும், இவை இன்ஸ்டால் செய்யப்படும் முன் ஏற்படுத்தப்பட்ட ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றுக்குச் சென்று, அங்கிருந்து சிஸ்டத்தை ரெஸ்டோர் செய்திடலாம். ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றைச் செயல்படுத்துகையில், மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளை இங்கு காணலாம்.
சேப் மோடில் சிஸ்டம் ரெஸ்டோர்:
சிஸ்டம் ரெஸ்டோர், சில முக்கியமான சிஸ்டம் பைல்கள் வழி இயங்குகிறது. எனவே சிஸ்டம் இயங்குகையில், இவற்றை மீட்டு அமைக்க முடியாது. எடுத்துக் காட்டாக, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்று இதில் குறுக்கிட முடியும். எனவே, சிஸ்டம் ரெஸ்டோர் சரியாகத் தன் வேலையை முடிக்க இயலவில்லை என்றால், சிஸ்டத்தினை Safe Modeல் இயக்க வேண்டும்.
இதற்கு சிஸ்டத்தினை ரீஸ்டார்ட் செய்திட வேண்டும். ரீஸ்டார்ட் தொடங்குகையில் எப்8 கீயினை தொடர்ந்து அழுத்த வேண்டும். அப்போது Safe Modeல் தொடங்க ஆப்ஷன் தரப்படும். அதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். சேப் மோடில் ரெஸ்டோர் பாய்ண்ட் பயன்படுத்தினால், மீண்டும் அதனை பழைய நிலைக்குக் (Undo) கொண்டு வர இயலாது.
ரெஸ்டோர் பாய்ண்ட்டில் கெட்டுப் போன பைல்கள்:
சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றை தேர்ந்தெடுக்கையில், பிரச்னைகள் உங்கள் கம்ப்யூட்டரில் தொடங்கிய நாளுக்கு முன்னால் ஏற்படுத்தப்பட்ட ரெஸ்டோர் பாய்ண்ட்டைப் பயன்படுத்த வேண்டும். பிரச்னைக்குப் பின்னால் ஏற்படுத்தப்பட்ட ரெஸ்டோர் பாய்ண்ட்டைப் பயன்படுத்தினால், பிரச்னைகளும் சேர்ந்தே மீட்கப்பட்டு தரப்படும்.
ரெஸ்டோர் பாய்ண்ட் பயனளிக்காத போது:
எந்த ரெஸ்டோர் பாய்ண்ட்டும் உங்கள் கம்ப்யூட்டரின் பிரச்னையைத் தீர்க்கவில்லை எனில், விண்டோஸ் ரெகவரி டிஸ்க்கினைப் பயன்படுத்தி பிரச்னையைத் தீர்க்க முடியுமா எனப் பார்க்கலாம். வின்டோஸ் 7 சிஸ்டம் டிஸ்க்கினை இயக்கி, அதில் உள்ள system repair options பயன்படுத்தலாம். அல்லது விண்டோஸ் சிஸ்டத்தினையே முழுமையாகப் புதியதாக பதிக்கலாம்.
சிஸ்டம் ரெஸ்டோர் ட்யூனிங்:
விண்டோஸ் ரெஸ்டோர் தானாகவே, சிஸ்டம் இயங்கும்போது, பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். இருப்பினும், நாம் விருப்பப்பட்டால், குறிப்பிட்ட நிலையில், சிஸ்டத்திற்கான ரெஸ்டோர் பாய்ண்ட்டை அமைக்கலாம். மேலும், ஹார்ட் டிஸ்க்கில் இடம் போதவில்லை எனில், பழைய ரெஸ்டோர் பாய்ண்ட்களை அழிக்கலாம்.
இதன் மூலம் கணிசமான இடம், ஹார்ட் டிஸ்க்கில் உருவாகும். சிஸ்டம் ரெஸ்டோர் என்பது அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு தரும் சாதனம் அல்ல. இதனை முழுமையாக நீக்கினாலும், சிஸ்டம் இயங்கும் என்றாலும், சிஸ்டம் ரெஸ்டோர் ஏற்படுத்தப்படுவது நமக்கு நிச்சயம் உதவும்.
எனவே அதிக இடம் எடுத்துக் கொள்ளாத நிலையில், ரெஸ்டோர் பாய்ண்ட் அமைக்கும்படி, சிஸ்டத்தை ட்யூன் செய்து வைத்திடலாம்.
3 comments :
புதிய தகவல்களுக்கு நன்றி....
EllameyTamil.Com
சில அறியாத தகவல்கள்...
மிக்க நன்றி...
useful tips thanks
Post a Comment