கூகுள் தரும் உடனடி தீர்வுகள்


கூகுள் தளத்தில் நுழைந்தவுடன் நமக்குக் கிடைப்பது தேடல் கேள்விகளை அமைக்கும் கட்டமே. தேடலுக்கான சொற்களை அமைத்தவுடன், உரிய தளங்கள் சில நொடிகளில் தேடப்பட்டு நமக்கு பக்கம் பக்கமாகப் பிரித்துக் காட்டப்படும். 

நம் தேடல் சொற்களுடன் சில வரையறைக்கான குறியீடுகளை அமைத்தால், இந்த தேடலை வேகமாகவும், நம் தேவைக்கெனவும் மாற்றி அமைக்கலாம். இது குறித்து கம்ப்யூட்டர் மலரில் ஏற்கனவே கட்டுரை வெளியானது.

இங்கே, தேடல் மட்டுமின்றி, மற்ற எந்த கேள்விகளுக்கு கூகுள் உடனடியாக விடைகளை அளிக்கிறது எனப் பார்க்கலாம். 

1. கால்குலேட்டர்:

கூகுள் தளத்தினை ஒரு கால்குலேட்டராகப் பயன்படுத்தலாம். ஏதேனும் ஒரு கணக்கீட்டினை கூகுள் கட்டத்தில் அமைத்துவிட்டால், இந்த கால்குலேட்டர் கிடைக்கும். இதில் நம் கணக்குகளை சில கிளிக் செய்வதன் மூலம் எளிதாக மேற்கொள்ளலாம். 

டெஸ்க்டாப் அல்லது ஸ்மார்ட் போனில் கால்குலேஷனை மேற்கொள்ள நாம் பயன்படுத்தும் கால்குலேட்டர் போல இது செயல்படுகிறது.

2. யூனிட் மாற்றம்:

பல அளவீடுகள் இரண்டு வகையான அலகுகளில் உள்ளன. குறிப்பிட்ட ஓர் அளவு மற்ற அலகில் என்ன என்பதனை நாம் கணக்குப் போட்டு பார்க்க வேண்டியதில்லை. யூனிட் மாற்றுதலுக்கான கூகுள் சாதனத்தில் இதனை மேற்கொள்ளலாம். 

எடுத்துக்காட்டாக, 40 டிகிரி பாரன்ஹீட் என்பதை செல்சியஸில் மாற்றலாம். மைல்களை கிலோ மீட்டரில் மாற்றிப் பெறலாம். இதே போல பல அளவுகளை அதன் இன்னொரு அலகில் பெறலாம். 

இத்துடன் இரண்டு அலகுகளை இணைத்து ஓர் அலகிலும் பெறலாம். இரண்டு மைல் 500 கஜம் (two miles plus 500 yards in kilometers) எத்தனை கிலோ மீட்டர் எனக் கொடுத்து விடையைப் பெறலாம்

3. கரன்சி மாற்றம்:

ஒரு நாட்டின் கரன்சியின் மதிப்பு, இன்னொரு நாட்டின் கரன்சியில் என்ன மதிப்பு என்பதனை கூகுள் நமக்கு கரன்சி கன்வர்டர் மூலம் தெரிவிக்கிறது. இந்திய ரூ.1000, அமெரிக்க டாலரில் எவ்வளவு என்று இதில் அறிந்து கொள்ளலாம். இப்படியே எந்த ஒரு நாட்டின் கரன்சியையும், இன்னொரு நாட்டின் கரன்சி மதிப்பில் பெறலாம். 

4. ஐ.பி. முகவரி:

இன்டர்நெட்டில் நீங்கள் இணைந்தவுடன் உங்களுக்கென ஓர் ஐ.பி. முகவரி (IP Internet Protocol Address) தரப்படும். இது என்ன என்று யாரும் கவலை கொள்வதில்லை. இதனை கூகுள், நீங்கள் கேட்டவுடன் கொடுக்கும். 

கூகுள் தேடல் கட்டத்தில் my ip என டைப் செய்தால் போதும். உடன் உங்கள் ஐபி முகவரியைப் பெறலாம்.

5. சீதோஷ்ண நிலை:

உங்கள் ஊரின் சீதோஷ்ண நிலையை, உங்கள் வீட்டின் ஜன்னலைத் திறந்து அறிந்து கொள்ளலாம். இன்னொரு ஊருக்கு, குறிப்பாக வெகு தொலைவில் இருக்கும் ஊருக்கும், விமானத்தில் செல்ல இருக்கிறீர்கள். அந்த ஊரில் மிகக் குளிராக இருந்தால், அதற்கேற்ற ஆடைகளை எடுத்துச் செல்ல வேண்டும் அல்லவா! 

எனவே அங்கு சீதோஷ்ண நிலை என்னவாக உள்ளது என கூகுள் மூலம் அறியலாம். தேடல் கட்டத்தில் weather new delhi எனக் கொடுத்தால், அப்போதைய டில்லி சீதோஷ்ண நிலை காட்டப்படும். நம் நாடு நகரங்கள் மட்டுமின்றி, உலகின் எந்த நாட்டின் நகரின் (weather newyork) சீதோஷ்ண நிலையையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். 

ஊரின் பெயரே போடாமல், weather என்று மட்டும் போட்டால், கூகுள் தளத்தில் உங்கள் ஊர் செட்டிங்ஸ் ஆக என்ன ஊரைப் போட்டிருக்கிறீர்களோ, அந்த ஊரின் சீதோஷ்ண நிலைகாட்டப்படும். 

6. சூரியன் உதய, மறையும் காலம்:

ஓர் ஊரில் சூரியன் உதயமாகும் மற்றும் மறையும் நேரத்தையும் கூகுள் காட்டும். sunrise அல்லது sunset எனப் போட்டு அந்த ஊரின் பெயரையும் இணைத்தால், குறிப்பிட்ட ஊரில் எந்த நேரத்தில், சூரியன் உதயமாகி, எப்போது மறையும் எனக் காட்டப்படும். ஊரே கொடுக்காமல் sunrise அல்லது sunset என மட்டுமே கொடுத்தால், மேலே சீதோஷ்ண நிலைக்குக் கூறியபடி, நீங்கள் செட் செய்த ஊருக்கான தகவல் கிடைக்கும். 

7. நேரம்:

உலகின் அனைத்து ஊர்களிலும் நேரம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இங்கு பகல் எனில், அமெரிக்கா மற்றும் கனடாவில் முந்தைய நாள் இரவு சில மணி நேரம் பின்னதாக இருக்கும். இங்கு காலை எட்டு மணி எனில், அமெரிக்காவின் அட்லாண்டா நகரில், முதல் நாள் இரவு பத்தரையாக இருக்கும். 

இப்படியே ஒவ்வொரு நாட்டின் நேரமும் மாறுபடும். இதனை கூகுள் மூலம் தெரிந்து கொள்ளலாம். time எனக் கொடுத்து அந்த ஊரின் பெயரையும் சேர்த்து டைப் செய்தால், அப்போதைய அந்த ஊரின் நேரம் மற்றும் நாள் காட்டப்படும். 

8. பார்சல் எங்குள்ளது?

நீங்கள் Fedex கூரியர் மூலம் வெளிநாட்டிற்கு பார்சல் ஒன்றை அனுப்பி உள்ளீர்களா? அனுப்பிய பின்னர், அந்த பார்சல் எங்கு எந்த நாடு வழியாகச் சென்று கொண்டிருக்கிறது என்ற தகவலைப் பெறலாம். கூகுள் அந்நிறுவனத்தின் தளத்தைத் தொடர்பு கொண்டு இந்த தகவலைத் தரும். 

இதே போல கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள மற்ற கூரியர் நிறுவனங்கள் வழியாக அனுப்பப்படும் தபால்கள் மற்றும் பார்சல்களின் பயண நிலை குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

9. அகராதி பொருள்:

சொல் ஒன்றின் பொருளை டிக்ஷனரி தளம் சென்று அறிந்து கொள்வது ஒரு வழி. கூகுள் தளம் வழியாகவும் இதனை அறிந்து கொள்ளலாம். define எனக் கொடுத்து அந்த சொல்லை டைப் செய்தால், உடன் அந்த சொல்லின் அனைத்து வகைப் பொருளும் தரப்படும். 

பொருள் சரி, அந்த சொல்லை எப்படி உச்சரிப்பது எனத் தெரிந்து கொள்வது? அருகேயே ரேடியோ பட்டன் ஒன்று காட்டப்படும். அதில் கிளிக் செய்தால், அந்த சொல் உச்சரிக்கப்படும். 

10. விமானப் பயணம்:

விமானப் பயணம் ஒன்றை வெகு தொலைவிலிருந்து உங்கள் மகன் அல்லது மகள் மேற்கொண்டுள்ளார். ஒரு நாள் முழுவதும் பயணம், இன்னொரு நாட்டில் இறங்கி வேறு ஒரு விமானம் பிடிக்க வேண்டும் எனில், உங்களுக்கு சற்று பதபதைப்பு இருக்கத்தான் செய்யும். 

கூகுள் தளத்தில் அந்த பயண விமானத்தின் எண்ணைத் தந்தால், உடன் அது அந்த நேரத்தில் எந்த நாட்டிலிருந்து புறப்பட்டது, எந்த நாட்டிற்கு நேராகப்பறந்து கொண்டிருக்கிறது, எப்போது வந்தடையும் என்ற தகவல்கள் காட்டப்படும்.


1 comments :

திண்டுக்கல் தனபாலன் at October 1, 2012 at 9:29 PM said...

நல்ல தொகுப்பு... சிலது தெரியாமல் இருந்தது... மிக்க நன்றி...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes