ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய விற்பனை மையம் ஒன்றை இந்தியாவில் அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு பல நிறுவனங்களிடமும் மக்களிடமும் எழுந்துள்ளது.
இது போன்ற வெளிநாட்டு ஐ.டி. நிறுவனங்கள் இந்தியாவில் விற்பனை மையங்களை அமைக்கையில், அதன் தேவைகளில் 30 சதவிகிதப் பணியை இந்தியாவிலிருந்தே பெற வேண்டும் என மத்திய அரசு விதி ஒன்று அமலில் உள்ளது.
ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் தன் தேவைகளுக்கென இந்தியாவிலிருந்து சாப்ட்வேர் புரோகிராம்களை பெற்று வருகிறது. இதனை, புதிய நிறுவனத்தின் கட்டாய விதிகளின் கீழ் இணைத்தால், ஒருவேளை ஆப்பிள் நிறுவனத்தை இங்கு தொடங்கலாம் என்று தங்களை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத ஆப்பிள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்ற பிப்ரவரி மாதம் வரை, ஆப்பிள் நிறுவனம் இந்திய நிறுவனங்களுக்கான சாப்ட்வேர் டெவலப்மெண்ட் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான 10 கோடி டாலர் மதிப்பிலான புரோகிராம்களை பெற்று வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தனி விற்பனை மையம் இங்கு அமையும் என்ற எதிர்பார்ப்பு முன்பு ஒரு முறை பலமாக பேசப்பட்டது.
ஆனால் ஆப்பிள் நிறுவன அதிகாரி டிம் குக் அதனை மறுத்தார். தான் இந்திய வர்த்தகத்தினை அதிகம் விரும்புவதாகவும், ஆனால், உலகின் பிற நாடுகளில், கூடுதலான வர்த்தகம் மேற்கொள்ள சந்தர்ப்பங்கள் இருப்பதால், இந்திய நேரடி வர்த்தகம் சிறிது காலம் பின்னரே மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை மையம் அமைவது பல வழிகளில் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், ஆப்பிள் நிறுவனத்திற்கு, இந்தியா ஒரு முக்கிய வர்த்தக நாடாக இருந்ததில்லை. இந்தியாவில் நல்ல வாய்ப்புக்காக ஆப்பிள் காத்திருக்க முடிவு செய்துள்ளது. இதற்கான காரணங்களை இங்கு பார்க்கலாம்.
சென்ற ஜூன் மாதம், ஆப்பிள் தன் ஐ ட்யூன்ஸ் ஆன்லைன் ஸ்டோர் ஒன்றை நிறுவியபோது, ஹாங்காங், தைவான் மற்றும் பத்து ஆசிய நாடுகளுக்கென அதனை ஒதுக்கியது. அதில் சீனாவோ, இந்தியாவோ இடம் பெறவில்லை. டிஜிட்டல் விஷயங்களின் உரிமை குறித்த சீன, இந்திய விதிமுறைகள் இதற்குக் காரணங்களாய் இருந்திருக்கலாம்.
மியூசிக், பாட்காஸ்ட், வீடியோ ஆகியனவற்றை விற்பனை செய்திடும் ஐட்யூன்ஸ் ஆன்லைன் ஸ்டோர் ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகத்தில், முக்கிய இடம் பெற்றுள்ள ஒன்றாகும்.
இந்தியாவில் ஐபோன் பயன்பாடு மிகவும் குறைவாக இருப்பது இன்னொரு காரணமாகும். இந்த வகை போன் விற்பனையில், ஆப்பிள் ஐபோன்கள் 1.2% இடத்தையே பெற்றுள்ளன.
இதே பிரிவில், சாம்சங் 51% கொண்டு முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும் ஆப்பிள் போன்கள் விற்பனை சிறிது சிறிதாக உயர்ந்து கொண்டுதான் உள்ளது. 2012 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில், ஆப்பிள் ஏறத்தாழ ஒரு லட்சம் போன்களை விற்பனை செய்துள்ளது. சீனாவில் இரண்டாவது காலாண்டில் (மூன்று மாதங்கள்) 23 லட்சம் போன்களை விற்பனை செய்தது.
இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு மிகவும் குறைவாக 2.5% மட்டுமே உள்ளது என ஐ.டி.சி. அமைப்பு கூறியுள்ளது. 2016ல் கூட, இது 8.5% என்ற அளவில் மட்டுமே உயரும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே இருந்து வருவது தெளிவாகிறது.
மேலும், இந்தியாவில் இயங்கும் மொபைல் போன் விற்பனை மற்றும் சேவை நிறுவனங்கள், ஐபோன் விற்பனையில் அவ்வளவாக அக்கறை காட்டுவதில்லை.
அமெரிக்காவில், ஆப்பிள் பல மொபைல் சேவை நிறுவனங்களுடன் இணைந்து, அவற்றின் சேவை திட்டங்களோடு, ஐபோன்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.
அதே போன்ற ஒரு விற்பனை வழி இங்கும் பின்பற்றப்பட்டால், ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்தியா ஒரு லாபகரமான சந்தையாக இருக்கும்.
2 comments :
இந்தியாவில் பயனாளர்கள் அதிகம்,,, வாங்கும் திறனாளர்கள் கூறைவு என்பதை காட்டுகிறது புள்ளிவிகிதம்,,
நல்ல பகிர்வு,,
தொடருங்கள்...
அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு... மிக்க நன்றி...
Post a Comment