நீலம் புயல் சென்னை மகாபலிபுரம் கடற்கரையில் கரையை கடந்தது , சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மி்ன்சாரம் துண்டிக்கப்பட்டது.
நீலம் புயலால் பெருமளவு ரயில்பாதைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரீனாவில் கடல் சீற்றம் இன்னும் குறையவில்லை.
வங்கக்கடலில் உருவான நீலம் புயல் தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடந்து ஆந்திரா நோக்கி செல்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், அலைகள் பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக எழும்புகின்றன. புயல் கரையை கடக்க சுமார் 2 மணி நேரம் ஆகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதையடுத்து புயல் மாமல்லபுரம் அருகே கரைகடந்தது. இதனால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது.
மரங்கள் வேரோடு சாய்ந்தன:
நீலம் புயல் சீற்றம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின்சார கம்பங்கள் சேதமடைந்தன. இதையடுத்து சென்னை மாமல்லபுரத்தில் இருந்து அடையாறு வரை தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நீலம் புயல் கரையை கடக்கும் சூழலில், இது குறித்து ஆய்வு செய்ய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, புயல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதுடன், முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் அரசு அலுவலர்கள் மாலை 3 மணியுடன் தங்களது வேலைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பவும், புயல் கரையை கடக்கும் வேளையில், பொதுமக்கள் யாரும் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில்களை மெதுவாக இயக்க உத்தரவு: சென்னையிலிருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் ரயில்கள் 10 கி.மீ., வேகத்திலேயே இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பாலத்தில் செல்லும் போது, 10 கி.மீ.,க்கும் குறைவான வேகத்தில் செல்ல ரயில் டிரைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரயில் பாதைகள் மாற்றம்:
நீலம் புயல் எச்சரிக்கை காரணமாக திருச்செந்தூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்களின் போக்குவரத்து பாதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே முதுநிலை செய்தி தொடர்பாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள மாறுதல் தகவல்களில் குறிப்பிட்டுள்ளதாவது:
சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு 31ம் தேதி மாலையில் கிளம்பும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்(16735) ரயில் வழக்கமாக விழுப்புரத்திற்கு பிறகு திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சி செல்லும்.
தற்போது அந்த ரயில் விழுப்புரத்திற்கு பிறகு விருத்தாச்சலம், அரியலூர் வழியாக திருச்சி சென்றடையும். திருச்செந்தூரில் இருந்து சென்னை வரும் 16736 ரயிலும் இதே புதிய வழித்தடத்தில் செல்லும்.
இதே போல சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் 16702 ரயில் மற்றும் மறுமார்க்கத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் 16701 ரயிலும் வழக்கமான பாதையில் இருந்து மாற்றப்பட்டு விழுப்புரம்-திருச்சி இடையிலான கார்டு ரூட்டில் இயக்கப்படுகிறது. விழுப்புரம்-மயிலாடுதுறை இடையிலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
16 மாவட்ட பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை:
நீலம் புயல் காரணமாக 13 கடலோர மாவட்ட மற்றும் 3 உள் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நீலம் புயல் கரையை கடக்கும் நிகழ்வு 3 மணிநேரம் ஆகும் என்பதால், சென்னை கோவளம், மாமல்லபுரத்தின் தாழ்வான பகுதிகளில் 5 ஆயிரம் வெளியேற்றப்பட்டுள்ளனர். தவிர 13 கடலோர மாவட்டங்கள், 3 உள் மாவட்டங்கள் உள்பட 16 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment