அண்மையில் அமெரிக்காவில் வெளியான ஐபோன் 5 விற்பனை மூலம், ஸ்மார்ட் போன் சந்தையில் தானே ராஜா என ஆப்பிள் நிறுவனம் நிரூபித்துள்ளது.
ஆன் லைன் பதிவுகள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமாக வந்ததால், அதற்கான சர்வர், கூடுதல் பதிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் திணறியது.
பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் இயங்கிய சர்வர்கள் , இவற்றை இறுதி வரை சிரமம் இல்லாமல் கையாண்டன. பிரிட்டனில் நேரடி விற்பனை மையங்களின் சர்வர்கள், கூடுதல் விற்பனையைச் சமாளிக்க இயலவில்லை.
கேட்டுக் கொண்டு பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் புதிய ஐ போன் 5 ஐ வழங்க இயலவில்லை. எனவே இனி பதிபவர்களுக்கு இரண்டு வாரம் கழித்தே போன்களை வழங்க முடியும் என ஆப்பிள் அறிவித்துள்ளது.
விற்பனைக்கு வந்த ஐந்து நாட்களில், 50 லட்சத்திற்கும் மேலான எண்ணிக்கையில் இந்த போன் விற்பனையானது. இதற்கு முந்தைய ஐபோன் 4 எஸ் வெளியான போது, முதல் ஐந்து நாட்களில் 40 லட்சம் போன்களே விற்பனை செய்யப்பட்டன.
இந்தியாவில் ரூ.1.35 லட்சம்: அமெரிக்காவில் விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் ஆப்பிள் ஐபோன் 5, இந்தியாவில் கிரே மார்க்கட் சந்தையில் ரூ.1.35 லட்சத்திற்கு விலை போகிறது. டாடா நானோ காரைக் காட்டிலும் சில ஆயிரங்களே குறைவான விலை இது.
மும்பையில் இத்தகைய பொருட்களை விற்பனை செய்திடும், ஹீரா பன்னா மற்றும் டில்லி கான் மார்க்கட்டில் இந்த விற்பனை ரகசியமாக நடக்கிறது. இந்தியாவில் இந்த போன் எப்போது விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்படாத நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டு இது விற்பனையாகிறது.
இந்த அளவிற்குப் பணம் கொடுத்து வாங்கினாலும், இதனை இங்கு உடனடியாகப் பயன்படுத்த முடியாது. மைக்ரோ சிம் மட்டுமே இதில் பயன்படுத்த முடியும் என்பதால், நம்மிடம் உள்ள வழக்கமான சிம்மினை,கத்தரிக்கோல் கொண்டு வெட்டியும், தடிமனைக் குறைக்க உப்புத் தாள் கொண்டு தேய்த்தும் தான் பயன்படுத்த முடியும்.
ஆனால், அவ்வாறு செய்திடுகையில் 90% சிம் கார்டுகள் பாழாகிப் பயனற்றுப் போய்விடும். இருப்பினும் இந்த போனை வாங்கியவர்கள் இதனை அறிந்தே வாங்கியுள்ளனர். போனாகப் பயன்படுத்துவதைக் காட்டிலும் மியூசிக் பிளேயராகப் பயன்படுத்துவதில் மன நிறைவு கொள்கின்றனர் என்று இவற்றை விற்பனை செய்திடும் ஒருவர் தெரிவித்தார்.
அவரிடம் விற்பனைக்கு வந்த அனைத்து போன்களும் விற்கப்பட்டு விட்டதாகவும் கூறினார். வரும் தீபாவளி சீசனுக்குள் இந்த போன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 comments :
உண்மை தான்... விரிவான தகவலுக்கு நன்றி...
Post a Comment