ஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவா சாப்ட்வேர் புரோகிராமினைத் தன் மேக் கம்ப்யூட்டருக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து நீக்கியுள்ளதாக, ஆப்பிள் அறிவித்துள்ளது.
தன் மேக் ஓ.எஸ். எக்ஸ் சிஸ்டத்தில், இதுவரை ஜாவா சாப்ட்வேர் தொகுப்பின் இயக்கத்தை இணைத்து ஆப்பிள் வெளியிட்டது. பயனாளர்களுக்கு ஜாவா பாதுகாப்பற்ற தன்மையைத் தருவதாகவும், அதன் மூலம் வைரஸ் மற்றும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் பரவும் வாய்ப்பு எளிதாகின்றது என்றும், இணையவெளி பாதுகாப்பு வல்லுநர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவினை ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ளது.
ஆனால், இதுதான் காரணம் என்று குறிப்பிட்டு எதனையும் கூறவில்லை. காண்க (support.apple.com /kb/DL1572) ஆரக்கிள் நிறுவனத்திடம் இருந்தும் இதற்கான பதில் எதுவும் வெளியாகவில்லை.
ஜாவாவில் எழுதப்பட்டுள்ள புரோகிராம்களை இயக்க விரும்புவோர், ஆரக்கிள் தளத்திலிருந்து நேரடியாக அதனைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாவா (JAVA) என்பது ஒரு கம்ப்யூட்டர் மொழியாகும்.
புரோகிராமர்கள் இதனைப் பயன்படுத்தி அமைக்கும் எந்த ஒரு சாப்ட்வேர் தொகுப்பினையும், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டரிலும் இயக்கலாம். இது இணையத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஏனென்றால், இதில் அமைக்கப்படும் இணைய தளங்களை, எந்த பிரவுசரிலும், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் (விண்டோஸ் / மேக் ஓ.எஸ்.) காணலாம். ஒரு காலத்தில் ஜாவா புரோகிராமிங் மொழி மிக உயர்வாகப் பேசப்பட்டது. "வாழ்வா? ஜாவா?' என்று இதனைக் கற்றுக் கொள்ளாத கம்ப்யூட்டர் புரோகிராமர்களைப் பார்த்துக் கூறும் அளவிற்கு புகழ் பெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிள் மற்றும் ஆரக்கிள் நிறுவனங்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு கட்டத்தில், ஆப்பிள் ஜாவாவை இணைத்து வழங்குவதனை நிறுத்திக் கொள்ளும் என்றும், ஜாவா வாடிக்கையாளர்களுக்கு ஆரக்கிள் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான நாள் குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை.
இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள், சென்ற ஆகஸ்ட் மாதம், ஜாவாவில் உள்ள சில குறைகளைக் கண்டறிந்தனர். இதன் மூலம் கம்ப்யூட்டர்களைக் கைப்பற்றும் ஹேக்கர்கள், மிக எளிதாக இயங்கியதையும் பார்த்து, எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால், ஆரக்கிள் நிறுவனம், மிகத் தாமதமாகவே இதற்கான பிரச்னை நீக்கும் பேட்ச் பைலை வெளியிட்டது. சென்ற வாரத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு ஆய்வாளர் ஆடம் கௌடியாக், ஜாவாவில் இன்னும் பல இடங்கள் பிழையுடன் உள்ளதாகவும், இவற்றை ஹேக்கர்கள் பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இவற்றை எல்லாம் கவனித்த பிறகே, ஆப்பிள் நிறுவனம் ஜாவாவைத் தள்ளி வைத்துள்ளது.
1 comments :
விளக்கத்துடன் தகவல் தந்தமைக்கு நன்றி...
Post a Comment